
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 29; கணவரின் வயது, 31. தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார், என் கணவர். திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான அடுத்த ஆண்டே கருவுற்றேன். கருவுற்ற நான்காவது மாதம், வெளியூரில் இருக்கும், என் அம்மா வீட்டுக்கு சென்றேன். அங்கு சென்றதும், எதிர்பாராத விதமாக, 'அபார்ஷன்' ஆகி விட்டது.
ஊருக்கு புறப்படும்போதே, என் மாமியார், 'போக வேண்டாம்...' என, தடுத்தார். அம்மா கையால் எனக்கு பிடித்ததை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் தான் சென்றேன். இப்படி ஆகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இத்தனைக்கும், ரயிலில் முதல் வகுப்பில் தான் பயணித்தேன். இது தான் சாக்கு என்று, வார்த்தைகளால் என்னை வறுத்தெடுத்தார், மாமியார். 'டார்ச்சர்' மற்றும் மன உளைச்சலால், என் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டது.
என் நிலையை அறிந்து, வேறு மாநிலத்துக்கு வேலை மாற்றல் வாங்கி, என்னையும் அழைத்துச் சென்று விட்டார், கணவர்.
மீண்டும் கருவுற்று, ஒரு குழந்தைக்கு தாயாகி விட விரும்பினேன்; ஆனால், ஏழு ஆண்டுகளாக அந்த ஆசை நிறைவேறவில்லை.
மருத்துவரிடம் பரிசோதித்ததில், பெரிதாக குறை ஏதும் இல்லை என்று கூறிவிட்டார்.
குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஆதரவற்றோர் ஆசிரமத்திலிருந்து, குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினேன்; இதில், கணவருக்கு சிறிதும் விருப்பமில்லை. 'பொறுமையாக இரு; நமக்கே குழந்தை பிறக்கும்...' என்கிறார். ஆனால், எனக்குத் தான் அந்த நம்பிக்கை குறைந்து விட்டது.
வெளிமாநிலத்தில் தனிமையில் இருப்பதால், குழந்தை ஏக்கம், என்னை பாடாய் படுத்துகிறது. காலையில் வேலைக்குச் சென்று, இரவு வீடு திரும்புகிறார், என் கணவர். ஆறுதல் கூறவோ, என் வருத்தங்களை இறக்கி வைக்கவோ, நெருங்கியவர்கள் எவருமே இல்லாமல், அனாதை போல் வாழ்கிறேன்.
என் அம்மாவால், என்னுடன் வந்து தங்கியிருக்க இயலாது; என் தம்பியும், அப்பாவும் கஷ்டப்படுவர்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உனக்கு கருச்சிதைவு ஆனதில், உன் குற்றம் ஏதுமில்லை. நடந்தது ஒரு விபத்து. ரயில் பயணம் போனால், கருச்சிதைவு ஏற்படும் என, உன் மாமியார் ஞான திருஷ்டியால் அறிந்தாரா என்ன... வேறு அற்ப, சொற்ப காரணங்களுக்கு, உன் பயணத்தை தடுத்திருக்கிறார். இப்போது, வெறுப்பை உமிழ்வதற்கு அது ஒரு காரணமாகி விட்டது. அவரது ஏச்சு பேச்சை, மனதில் ஏற்றிக்கொள்ளாதே!
உன் கணவர் எந்த மாநிலத்திற்கு மாற்றல் வாங்கி, உன்னை அழைத்துப் போனார் என்பதை குறிப்பிடவில்லை. நீ எந்த மாநிலத்திற்கு போயிருந்தாலும் பரவாயில்லை; அந்த மாநிலத்து பேச்சு மொழியை ஆறே மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அக்கம் பக்கத்து வீட்டினரிடம் நட்பு வைத்துக் கொள்; தனிமை துயர் அகலும்.
வளர்ப்பு பிராணியாக, நாயையோ, பூனையையோ, கிளியையோ வளர்க்கலாம். இது, உன் மன பாரத்தை குறைக்கும்.
உன் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தால், அறவே நிறுத்த சொல். விந்துக்களின் எண்ணிக்கையையும், விந்தணு நகர்ச்சி திறனையும் அதிகரிக்க தகுந்த மருத்துவம் மேற்கொள். கர்ப்பப் பையிலோ, கருப்பை குழாயிலோ நோய் தொற்றோ, காயமோ இருந்தால், தகுந்த மருத்துவம் பெறுங்கள். இரண்டாம் தேனிலவு திட்டமிட்டு, ஏதாவது ஒரு கோடை வாசஸ்தலத்துக்கு செல்லுங்கள். குழந்தை வேண்டும் என்கிற ஒற்றை நோக்கமில்லாமல், தாம்பத்யத்தில் முழு சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
குழந்தையை தத்தெடுக்க விருப்பமில்லாத கணவரிடம், இதம் பதமாய் பேசி, அவரது மனதை மாற்ற முடியுமா என்று பார்.
நல்ல சத்தான உணவு உண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்; விரைவில், உங்களுக்கு குழந்தை பிறக்கும்... வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

