PUBLISHED ON : நவ 26, 2017

நம் சிக்கனம் கண்டு சிரிக்கின்றனரா... சிரித்துவிட்டுப் போகட்டும்; பரவாயில்லை. அவ்வாறு சிரிக்கிறவர்கள், நம் இருப்புகள் காலியானால், முன் வந்து உதவுவார்களா என்ன...
முன்பு, 'சினிமா கெய்டு' அன்பு என்று, ஒரு பத்திரிகையாளர் இருந்தார். இன்லண்ட் லெட்டரில், ஒரு பாதி மட்டும் எழுதப்பட்ட கடிதம் இவருக்கு வந்தால், மறு பாதியை கிழித்து வைத்து, குறிப்புகள் எழுத பயன்படுத்துவார்.
இதுபற்றி, இவர் காதுபடக் கேலி செய்தாலும் பொருட்படுத்தாமல், 'எதையும் வீணாக்கக் கூடாது...' என்பார்.
இன்றோ, 'மறு சுழற்சி முறையில் எந்தப் பொருளையும் மீண்டும் பயன் படுத்த முடியுமா பாருங்கள்...' என்று உலகமே சீர்திருத்தம் பேசுகிறது.
'அடப் போங்கப்பா... எங்க நாடே ஒரு மறு சுழற்சி தான்; எங்களுக்கா புதுசா சொல்ல வந்துட்டீங்க...' என்று, நாம் பதில் கேள்வி கேட்கலாம். ஆம், நம் முன்னோர் இதை எப்போதோ ஆரம்பித்து விட்டனர்.
ஒரு குண்டூசியை சிக்கனப்படுத்துவதில் என்ன வந்து விடப்போகிறது என்று எண்ணாமல், தமக்கு வரும் தாள்களில் உள்ள குண்டூசிகளை, சேர்த்து வைத்து பயன்படுத்தினார், காந்திஜி.
'பாருப்பா... இவன்கிட்டே இல்லாத காசா... ரயில்ல ரெண்டாம் வகுப்புல போறான். இவனை விட வசதி குறைந்த நானே, ஏ.சி., வகுப்புல பயணம் செய்றேன்; இவனுக்கு என்ன கேடு... இப்படி மிச்சம் புடிச்சு எத்தனை கோட்டை கட்டியிருக்கான்னு கேளு... சரியான கஞ்சப் பய...' என்று சிலர் பேசுவதைக் கேட்டிருப்போம்.
ஒவ்வொருவருக்கென்று ஒரு கொள்கை; இந்த இரண்டாம் வகுப்பு பயணி, சில ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்; சிக்கனத்தின் பலன் என்றால், அது, கோட்டை கட்டுவது தானா... எவ்வளவு மோசமான விமர்சனம் இது... ஏ.சி., குளிர் ஒருவருக்குப் பிடிக்காமலோ, ஒத்துக் கொள்ளாமலோ போகலாம். அதிக கட்டணத்தைக் கொடுத்து, தொல்லையை விலைக்கு வாங்குவதைத் தவிர்த்தவரது செயல் தவறாகி விடுமா!
இந்த உலகம், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என, என்னென்னவோ பேசும்... ஒரு திரைக் கவிஞர் குறிப்பிட்டது போல், 'வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்; வையகம் இதுதானடா...' என்பது தான் உண்மை.
எனவே, பிறரது விமர்சனங்களுக்காக, நம் சிக்கனத்தை கை கழுவ வேண்டாம்.
பீத்தல் வேட்டியை, கைத் தையலால் தைத்துச் சரி செய்து கொள்ளும் எங்கள் ஊர் பெரியவர் ஒருவர், கோவில் திருப்பணிக்குக் கொடுத்த ஏழு இலக்கத் தொகையைக் கேள்விப்பட்டு, 'அடேங்கப்பா...' என, வாய் பிளந்திருக்கிறேன்.
தனக்கென்று நான்கே நான்கு அழுக்கு வெள்ளை சீலைகளை வைத்துக் கொண்டு, ஊருக்கே பொது மண்டபத்தை கட்டிக் கொடுத்த ஒரு விதவைப் பெண்ணின் தாராளம் கண்டு வியந்திருக்கிறேன். இவரது சிக்கனத்தை, நாம் வெளிச்சம் போட்டு கேலி செய்ய முடியுமா?
சிக்கனக் குணத்தை, இரண்டாவது சேமிப்பு என்று குறிப்பிடுகின்றனர், பொருளாதார வல்லுனர்கள்.
'பைசாக்கள் கசிவதைப் பற்றி நீங்கள் மிகக் கவனமாக இருங்கள்; ரூபாய்களை அது பார்த்துக் கொள்ளும்' என்று புகழ் மிக்க பழமொழி ஒன்று உண்டு.
எது சிக்கனம்; எது தாராளம்; எது ஆடம்பரம் என்பனவற்றை யெல்லாம் இச்சமூகம் நிர்ணயிக்க முடியாது. இவை, ஒரு தனி மனிதனின் பின்னணி மற்றும் பார்வை ஆகியவற்றைப் பொறுத்தது. ஆனாலும், ஒரு பொதுவான நியதிக்கு நாம் உடன்பட வேண்டியுள்ளது.
சிறு புண்ணுக்கு வைத்தியம் செய்யாமல், சிக்கனம் பார்த்து, காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளான ஒரு நீரிழிவு நோயாளியை நான் அறிவேன்.
உணவு செலவை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று அமீபியா என்ற நோய் கிருமி நிறைந்த உணவகத்தில் சாப்பிடுவதை ஏற்க முடியுமா?
தேவை, சூழல், தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு செலவினம் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர, எல்லாவற்றிலும் சிக்கனக் கொள்கை என்பது மிகத் தவறு.
எல்லாம் வேண்டும் என்பது ஆடம்பரம்; அவசியமானவை போதும் என்பது சிக்கனம். எதுவுமே வேண்டாம் என்பது கஞ்சத்தனம்.
சில வினாடிகள் ஒதுக்கி, கையிலிருக்கும் காசைத் தாராளமாகவோ, அழுத்தியோ வெளிவிடுங்கள்; மனதிற்கு சரியென்று பட்டால், மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!
லேனா தமிழ்வாணன்

