PUBLISHED ON : நவ 26, 2017

எந்தத் துறையாக இருந்தாலும், முயற்சி செய்யாதவர் முன்னேற முடியாது. முயற்சி செய்பவர்களுக்கே தெய்வம் கூட உதவும்.
தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள், அவர் பாடும் போது வெளிப்படும் ராகங்களின் சிறப்பு என, அனைத்தையும் உணர்ந்த அடியார் ஒருவர், அய்யம்பேட்டையில் இருந்து, தினமும் திருவையாறு வந்து, தியாகராஜரின் வீட்டு வெளிப்புறமாக ஒதுங்கி நின்றபடி, அவரது கீர்த்தனைகளை கேட்டு ரசிப்பார்.
ஒருநாள், தியாகராஜரின் வீட்டு இடைக்கழி ஓரமாக நின்றபடி, அவரது கீர்த்தனைகளை கேட்டு, அதன் லயத்தில் கண்கள் சொருக நின்றிருந்தார். அச்சமயம், இடியும், மின்னலும் வெளிப்பட, பாடுவதை நிறுத்திய, தியாகராஜர், தற்செயலாக வெளியே பார்த்தார். அங்கே, மழையில் நனைந்தபடி, கண்களை மூடி, கைகளை கூப்பியவாறு, பாடலில் மெய் மறந்து நின்றிருந்த, அன்பர் தெரிந்தார்.
உடனே, எழுந்து வெளிய வந்த தியாகராஜர், அன்பரின் முன் கைகளைத் தட்ட, கண் விழித்த அன்பர், தியாகராஜரைக் கண்டதும், விழுந்து வணங்கினார். அவரைப் பற்றிய விபரங்களை, அறிந்து, அவரை அணைத்து, உள்ளே சென்றார்.
அதன் பின், அய்யம்பேட்டைக்காரர், தியாகராஜரின் பிரதான சீடராகிவிட்டார். காலங்கள் கடந்தன. தியாகராஜரின் புதல்விக்குத் திருமணம் நடைபெற்றது. ஊரே கூடி மகிழ்ந்தது. தியாகராஜ சுவாமிகளோ, தம் சீடனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில், நெடுந்துாரம் நடந்து வந்த சீடர், திருமணத்தை முன்னிட்டு, குரு காணிக்கையாக, ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண, அனுமனுடன் கூடிய அழகு படத்தைச் சமர்ப்பித்தார்.
தியாகராஜரின் கண்கள் மலர்ந்து கசிந்தன. 'ஹே ராமா... எனக்கு அருள் புரிவதற்காக நடந்து வந்தாயா...' என்று, மனம் உருகிப் பாடினார். அப்போது பாடிய பாடல் தான், 'நநு பாலிம்ப நடசி வச்சிதிவோ...' எனும் கீர்த்தனை. தியாகராஜ சுவாமிகளின் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் பெரும் பங்கு வகித்தவர், இந்த அய்யம்பேட்டைக்காரர். பட்டு நுால் நெய்யும் தொழிலைச் செய்து வந்தார்.
ஒரு சமயம், தன் வீட்டில் அமர்ந்தபடி, தறி வேலையில் ஈடுபட்டிருந்த அய்யம்பேட்டைக்காரர், மனதில், குருவை எண்ணி, தன்னை மறந்து, கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். அவர் எதிரில் வந்து அமர்ந்த பகவான் கண்ணன், அப்படலைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, 'சடபுடா' எனும் ஓசையோடு, தறிகெட்டு ஓட ஆரம்பித்தது, தறி.
கவனம் சிதறிய அய்யம்பேட்டைக்காரர், தறியைப் பிடிப்பதற்கு முன், எதிரில் இருந்த கண்ணன், தன் இரு கரங்களாலும் தறியைப் பிடித்து, அதை, அய்யம்பேட்டைக்காரரிடம் ஒப்படைத்து, மறைந்தார்.
இந்த அய்யம்பேட்டைக் காரர் தான், தியாகராஜ சுவாமிகளின் முக்கிய சீடரான, ஸ்ரீவேங்கட ரமண பாகவதர். இவர் வாழ்வில் நடந்த அற்புதங்கள் ஏராளம்!
இவரில்லா விட்டால், தியாகராஜ சுவாமிகளைப் பற்றிய பல தகவல்களும், கீர்த்தனைகளும் கிடைக்காமலேயே போய் இருக்கும்.
முயற்சி மற்றும் குரு பக்தி முதலியவைகளுக்கு, தெய்வமே வந்து உதவி புரியும்!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன?
காலை, 4:30 மணி முதல், 6:00 மணிக்குள்ளான வேளையே பிரம்ம முகூர்த்தம். இரவில் உறங்கும் உயிர்கள், மீண்டும் எழுந்திருப்பதே மறுபிறவியை போன்றது தானே... எனவே, ஒவ்வொரு நாளும், காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை செய்பவர் பிரம்மா. எனவே, இவ்வேளைக்கு திதி, வார, நட்சத்திர மற்றும் யோக தோஷங்கள் கிடையாது. இது, எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து, குளித்து இறை வழிப்பாட்டை செய்து, நம் வேலைகளை செய்யத் துவங்கினால், அன்று முழுவதும் வெற்றி தான்.

