தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

நான், 30 வயது பெண்; 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் தந்தை விவசாய கூலி; வீட்டில் மாடு ஒன்றை வளர்த்து, பால் வியாபாரம் செய்கிறார், என் தாய். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இரண்டு தங்கை; இரு தம்பிகள்.

நான் மூத்தவள்; என், 18வது வயதில் திருமணமானது. எனக்கு மகன் மற்றும் மகள் என, இரு குழந்தைகள். திருமணமான ஆறாம் ஆண்டு, விபத்து ஒன்றில் இறந்து விட்டார், என் கணவர். மாமனாருக்கு கொஞ்சம் நிலம் உண்டு; அதில், விவசாயம் செய்து வருகிறார். மாமியாரின் அறிவுறுத்தலால், என்னை தாய் வீட்டுக்கே போக சொல்லி விட்டார், மாமனார். பிறந்த வீட்டிலோ வறுமை; அதனால், பிள்ளைகளை, மாமனார் - மாமியாரிடம் விட்டு விட்டு, என்னை மட்டும் வரச் சொல்லி விட்டார், தந்தை.

ஏதாவது வேலை தேடி, நல்ல நிலைமைக்கு வந்த பின், குழந்தைகளை அழைத்துக் கொள்ளலாம் என்று, ஐந்து வயது மகன் மற்றும் மூன்று வயது மகளை, மாமனார் - மாமியாரிடம் விட்டுவிட்டு, அம்மா வீட்டிற்கு சென்றேன்.

என் பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலமாக, நகரத்தில், சேவை இல்லம் ஒன்றில் தங்க இடம் கிடைத்தது. அங்கிருந்தபடியே, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்றேன். அத்துடன், அந்த இல்லத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்தேன்; அதற்காக, சிறு தொகையும் தந்தனர். இது, எனக்கு பெரிய உதவியாக இருந்தது.

தீபாவளி மற்றும் பொங்கலின் போது ஊருக்கு செல்வேன். குழந்தைகளை பார்க்க ஆவலாக சென்றால், 'அவர்கள் இல்லை...' என்று கூறி, என்னை விரட்டி விடுவார், மாமியார். எதுவும் செய்ய இயலாத நிலையில், அழுதபடியே திரும்பி விடுவேன்.

சேவை இல்ல நிர்வாகி, எனக்கு ஒரு கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாங்கி கொடுத்தார். நிரந்தர சம்பளம் கிடைக்க, அம்மாவுக்கு பணம் அனுப்ப முடிந்தது. என் தங்கை, தம்பிகள் படிப்பு செலவுக்கு அப்பணம் உதவியது.

வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு, கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்கு கால் ஊன்ற, ஐந்து ஆண்டுகள் பிடித்தது. என் குழந்தைகளை என்னுடனே வைத்துக் கொள்ள விரும்பிய போது, என் மகன், 'உன்னுடன் வர மாட்டேன்...' என்று கூறி விட்டான். என் மாமியார் தான், அப்படி சொல்ல சொல்லி உள்ளார். அத்துடன், என் மகளை, அனாதை ஆசிரமத்தில் சேர்த்திருக்கிறாள், அந்த பாதகி.

தற்போது, புறநகரில், சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து வேலைக்கு சென்று வருகிறேன். என் பெரிய தம்பி, மெக்கானிக் தொழில் கற்பதற்காக, என்னுடன் வந்து தங்கியுள்ளான்.

இப்போது, என் மகனை எப்படி சமாதானப் படுத்துவது... என் மகளை அனாதை ஆசிரமத்திலிருந்து மீட்பது எப்படி... வழிகாட்டுங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

தந்தையின் வற்புறுத்தல் மற்றும் வறுமையை காரணம் காட்டி, உன் பிள்ளைகளை மாமனார் - மாமியாரிடம் விட்டு வந்தது நீ செய்த பெரும் தவறு. கூழோ, கஞ்சியோ குடித்தாலும், அவர்களை உன்னுடனே வைத்திருந்திருக்க வேண்டும்.

இத்தனை ஆண்டு பிரிவுக்கு பின், உனக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது. அப்பா வழி பாட்டியிடம் வளர்ந்த உன் மகனுக்கு, உன் மேல் எந்த பாசப்பிடிப்பும் இருக்காது. அனாதை இல்லத்தில் விடப்பட்ட உன் மகளுக்கு, உன் மீதும், அப்பா வழி பாட்டி மீதும் சமமான வெறுப்பே இருக்கும்.

அதனால், உன் உறவினர் யார் மூலமாவது, மாமியாரிடம் பேசி, மகனை மீட்டெடுக்கப் பார். வக்கீலுடன் சென்று, அனாதை இல்ல நிர்வாகியை அணுகி, உன் மகளிடம் பேசு.

சட்டப்படி, தாத்தாவுக்கும், பாட்டிக்கும், பேரன் - பேத்திகள் உரிமையானவர்கள் அல்லர். யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்வர். சட்டத்திற்கு புறம்பாக, உன் மாமனார், மாமியார், உன் மகனை தங்களது கஸ்டடியில் வைத்திருந்தால், மகளிர் காவல் நிலையத்தை அணுகு. உன்னுடன் வர, உன் மகளுக்கு விருப்பம் இருந்தால், நீ, அவளை தாய் என்கிற முழு உரிமையுடன் அனாதை இல்லத்திலிருந்து மீட்டெடுக்கலாம்.

கணவரின் மரணத்திற்கு பின், நீ மறுமணம் செய்து கொள்ளவில்லை. பிறந்த இட பெரியவர்களுக்கும், புகுந்த இட பெரியவர்களுக்கும் பயம் கலந்த மரியாதை அளித்த பேதை நீ. மகன் மற்றும் மகளிடம், 'உங்களை சிறு வயதிலேயே என்னுடன் அழைத்துக் கொள்ள எனக்கு யாரும் தகுந்த ஆலோசனை வழங்கவில்லை. அதனால் தான் நமக்குள், இந்த பிரிவு...' என்று கண்ணீர் மல்க கூறு. தாயின் கண்ணீர் மகத்துவம் வாய்ந்தது; உன்னுடைய கண்ணீர் அவர்களுக்கு ஆயிரம் உண்மைகளை உணர்த்தும்.

உன் மகன், மகளுக்கு...

செல்லங்களா... போதும், நீங்களும், உங்கள் தாயும் படும் பிரிவுத்துயர்... அவள் கண்ணீருடன் வந்து நின்றால், இரு கரங்களையும் விரித்து அரவணைத்துக் கொள்ளுங்கள். உன் தாய்க்கு கிடைக்காத அன்பை, அவள் மீது பெருமழையாய் கொட்டுங்கள். அம்மாவை ஆதரிப்பதால், அப்பா வழி தாத்தா, பாட்டியிடம் விரோதம் பாராட்டாதீர்கள். உங்களது பாச அரவணைப்பால், உங்களின் அம்மா சுகப்படட்டும்.

திசைக்கு ஒருவராய் பிரிந்து நிற்கும் நீங்கள் மூவரும் இணைந்து, மாடப்புறாக்களாய் வானில் வட்டமிடுங்கள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us