தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒற்றுமையின் பலம்!

ஒற்றுமையின் பலம்!

ஒற்றுமையின் பலம்!


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகத நாட்டில், வாருணம் என்ற நகரில், அங்கதன் என்பவர் வாழ்ந்து வந்தார். பெருமாள் பக்தரான இவர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இவரிடம், அபூர்வமான ஒரு வைரமணி இருந்தது. அதை, ஜகநாத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு அணிவிக்க, தீர்மானித்தார்.

இதை அறிந்தார், அவரது மூத்த சகோதரர், ராஜசிங்கன். குருநில மன்னனான அவர், அந்த வைர மணியை தனக்கு தந்துவிடுமாறு... தம்பிக்கு தகவல் அனுப்பினார்.

'இது, ஆண்டவனுக்கு என ஒதுக்கப்பட்டது; அதனால், அண்ணனாக இருந்தாலும் இதை தர மாட்டேன்...' என, மறுத்து விட்டார், அங்கதன்.

அதனால், நேரில் சென்று தன் தம்பியிடம் கேட்டார், ராஜசிங்கன். அவர் எண்ணம் அப்போதும் பலிக்கவில்லை. அதனால், தம்பியை கொன்று, வைர மணியை கவர திட்டமிட்டார். அதன்படி, ஏவல் பெண் ஒருத்தியை அழைத்து, 'அங்கதனை, விஷம் வைத்து கொன்று விடு...' என, ஏவினார்.

அங்கதனின் நற்குணங்களை அறிந்திருந்தாலும், அரசரிடம் இருந்த அச்சத்தால், அதற்கு உடன்பட்டு, விஷத்தோடு புறப்பட்டாள், பணிப் பெண்.

அண்ணன் அனுப்பிய பணிப்பெண்ணை ஏற்றுக்கொண்டார், அங்கதன். பணிப்பெண்ணும் நாள்தோறும் அங்கதனுக்கு பணிவிடை செய்து, உணவு அளித்து வந்தாள்.

ஒருநாள், அங்கதன் உண்ண உட்கார்ந்ததும், விஷம் கலந்த உணவை அவர் முன் வைத்தாள்.

வழக்கப்படி பெருமாளை துதித்து, அங்கதன் உண்ணத் துவங்கினார்... உடனே, பதறி, நடுங்கியபடியே உணவில் நஞ்சு கலந்திருக்கும் விஷயத்தை கூறி விட்டாள், பணிப்பெண். ஆனால், 'என் அண்ணன், தன் விருப்பம் பலிக்க வேண்டும் என்பதற்குதானே இப்படி செய்தார்; அவர் எண்ணம் ஈடேறட்டும்...' என்றபடியே, நஞ்சு கலந்த உணவை உண்டார்.

ஆனால், அவருக்கு எந்த பாதிப்பும் உண்டாகவில்லை; அவர் உள்ளத்தில் இருந்த தெய்வம் அவரை காப்பாற்றி விட்டது. இத்தகவலை அறிந்த ராஜசிங்கன், தம்பியின் உயர் குணத்தையும், தன் இழி குணத்தையும் எண்ணி வெட்கப்பட்டார்.

மனம் திருந்தி, தம்பியிடம் மன்னிப்புக் கேட்டார், ராஜசிங்கன். 'அண்ணா... இது, நீங்கள் நல்வழிபட வேண்டும் என்று நாராயணர் செய்த செயலாக எண்ணி அமைதி பெறுங்கள்...' என்றார், அங்கதன்.

பின், இருவருமாக சேர்ந்து, ஜகநாத்தில் எழுந் தருளியிருக்கும் பெருமாளுக்கு, வைர மணியை சமர்ப்பித்தனர்.

சகோதரர் களுக்குள் ஒற்றுமை உண்டாக செய்த அந்த சர்வேஸ்வரன், நமக்குள்ளும், ஒற்றுமையை உண்டாக்க வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

மகாலட்சுமி எங்கு வாசம் செய்கிறாள்?

சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும், வெண்ணிற மாடப் புறாக்கள் மற்றும் அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதனின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர் இல்லம், உணவு உண்ண அதிக நேரம் செலவிடாதவர்கள், பெண்களை தெய்வமாக பார்க்கும் ஆண் மகன் உள்ள இடங்களில் லட்சுமி வாசம் செய்வதாக நம் வேதங்கள் கூறுகின்றன. வீரனின் தோளிலும் லட்சுமி இருக்கிறாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us