sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது, 32; என் கணவர் வயது, 36. எங்களுக்கு ஒரே மகள், வயது, 6. என் அம்மா சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் எங்களுடையது. என் கணவருக்கு பெற்றோர் இல்லை. அவரை வளர்த்தது, படிக்க வைத்தது எல்லாம் பெரியப்பா தான். எனக்கு இரண்டு அக்கா; நான் சிறுமியாக இருந்தபோதே என் தந்தை இறந்து விட்டார். என் அம்மா தான் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்து, என் அக்காள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஒரு அக்கா, 'எக்ஸ்போர்ட்' கம்பெனியிலும், இன்னொரு அக்கா, அட்டைப் பெட்டி தயார் செய்யும் நிறுவனத்திலும் வேலை செய்கின்றனர். அவர்களது கணவன்கள் ஒருவர் டிரைவராகவும், மற்றொருவர் ஓட்டல் ஒன்றிலும் பணிபுரிகின்றனர்.

நான், தனியார் மருத்துவமனையில், 'லேப் டெக்னீஷியனாக' பணிபுரிகிறேன். என் கணவர், டெம்போ வேன் டிரைவராக உள்ளார். பி.ஏ., பட்டம் பெற்றவர். திருமணமான நாள் முதல் சந்தோஷமாக தான் இருந்தோம்.

நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில், அம்மா, அப்பா, 24 வயதுள்ள பெண் கொண்ட ஒரு குடும்பம் வாடகைக்கு குடி வந்தனர். அப்பெண் என்னுடன் நட்போடு பழகினாள். நானும், அவளுடன் சகஜமாக பழகினேன். பிறகு தான் தெரிந்தது, அவளது குள்ளநரித்தனம். என் கணவனுடன் பேச, பழக ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதுவரை, என்னை கடுமையாக பேசாத என் கணவர், என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார். சம்பள பணத்தை கொடுக்காததுடன், குடிப்பழக்கத்துக்கும் ஆளானார். அப்பெண்ணுடன் அடிக்கடி வெளியே செல்வதை அக்கம்பக்கத்தார் பார்த்து, என்னிடம் கூறினர்.

இதைத் தட்டிக் கேட்டபோது, வீட்டுக்கே வராமல் தவிர்த்தார். அப்பெண்ணை அழைத்து கண்டித்தேன்; அவளது பெற்றோரிடமும் கூறினேன். செவிடன் காதில் ஊதிய சங்கானது.

வீட்டிலிருக்கும் பொருட்கள் காணாமல் போனது; குழந்தையின் இரண்டு சவரன் சங்கிலியை திருடிச் சென்று, விற்று அப்பெண்ணுக்கு செலவு செய்துள்ளார்.

வேலைக்குச் சரியாக போகாமல், வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவுமாக இருந்தது. நிலைமை மோசமாவதை உணர்ந்து, குழந்தையுடன் என் தாய் வீட்டிற்கு, சென்று விட்டேன்.

சிறிது நாட்களுக்குப் பின், தன்னுடன் வருமாறு அழைத்தார்; அப்பெண்ணின் சகவாசத்தை விட்டால் மட்டுமே வருவேன் என்று கூறினேன். அசிங்கமாக பேசிவிட்டு சென்றுவிட்டார். குடித்து விட்டு, அடிக்கடி நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு வந்து கலாட்டா செய்வார்; அம்மா வீட்டுக்கும் வந்து, எங்களை மிரட்டுவார்.

என் குழந்தையை பள்ளியிலிருந்து துாக்கிச் சென்று விட்டார். அம்மா மற்றும் அக்கா கணவர்களின் உதவியோடு குழந்தையை மீட்டு வந்தேன். அதிலிருந்து பிரமை பிடித்தாற்போல் பயந்து போயிருக்கிறாள், குழந்தை. பலமாக சத்தம் கேட்டால் கூட, என் மகளுக்கு உடம்பெல்லாம் நடுங்கி, வியர்த்து விடுகிறது.

நான் பணிபுரியும் மருத்துவமனையில் குழந்தைக்கு, 'கவுன்சிலிங்' கொடுக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, 'டார்ச்சர்' கொடுத்து வருகிறார். இதனால், என் வேலையில் கவனம் சிதறுகிறது. இது தொடர்ந்தால், வேலை பறிபோய்விடும்.

நான் என்ன செய்வது என்று தெரியவில்லை; எனக்கு நல்ல வழி கூறுங்கள்.

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

திருமண பந்தம் மீறிய உறவில் ஒரு ஆணோ - பெண்ணோ ஈடுபட்டால், அவர்களது குடும்பம், புயல் மற்றும் மழையால் பாதித்தது போல் ஆகிவிடுகிறது.

உன் கணவனுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண், உன்னை கத்தரித்து, உன் கணவரை மணம் செய்யும் நோக்கத்தில் இல்லை. உடல் சுகத்துக்காகவும், ஆடம்பர செலவுக்காகவும் மட்டுமே உன் கணவனுடன் பழகுகிறாள் என்று தெரிகிறது. திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தந்தையான பின், ஒரு கன்னிப் பெண்ணின் தொடர்பு, ஓர் ஆணுக்கு கிடைத்து விட்டால், அதை, அவனின் ஆண்மைக்கு கிடைத்த விருதாக அவன் பாவிக்கிறான். இன்னும் நமக்கு வயதாகவில்லை; கல்லுாரி வாலிபனை போலதான் கன்னிப் பெண்களின் பார்வைக்கு படுகிறோம் என்கிற திமிர் கலந்த பெருமை அவனுக்குள் பொங்குகிறது.

உன் கணவனை விட, வசதியான ஆணின் தொடர்பு கிடைத்தால், உன் கணவனை உதறி விடுவாள், அந்த பெண். அவள் யாரையாவது திருமணம் செய்து கொண்டாலும், கள்ள உறவு கிரகணம் விலகும். மற்ற ஆண்களுடனும் அவள் உறவு வைத்திருப்பதை உன் கணவன் மோப்பம் பிடித்தால், இருவருக்குள்ளும் அடிபிடி சண்டை வந்து விலகுவர். சில நேரங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாமல், பரஸ்பரம் கள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டாலும் இருவரும் விலகுவர்.

முதலில் இருதரப்பு பெரியவர்களை வைத்து உன் கணவரிடம் பேசி, தகாத சகவாசத்தை வெட்டி விட வலியுறுத்து. இது சரிப்படவில்லை என்றால், உன் கணவன் மற்றும் பக்கத்து வீட்டு பெண் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு. 'கள்ள உறவை துண்டித்து, வீட்டை காலி செய்து, வேறு எங்காவது போய் விடுகிறேன்...' என, அப்பெண்ணிடம் எழுதி வாங்கு.

காவல் நிலைய சிகிச்சையில், உன் கணவரின் கள்ள உறவு வைரஸ் குணமாகா விட்டால், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய். நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன், இரு தரப்பினரையும் அழைத்து மனநல ஆலோசனை வழங்குவர். 10 சதவீத ஆண்கள், அந்த மனநல ஆலோசனையில் திருந்த வாய்ப்பிருக்கிறது.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உன் கணவன், உன் பணியிடத்துக்கு வந்து பிரச்னை பண்ணுவதோ, பள்ளிக்கு சென்று குழந்தையை தொந்தரவு செய்வதோ கூடாது. மீறினால், காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என, நீதிபதியே அறிவிப்பார். அது, உனக்கும் பாதுகாப்பை அளிக்கும்.

முறையான விவாகரத்து கிடைப்பதற்கு முன், பல ஆண்கள் தங்களது தவறுகளை திருத்தி, மனைவியுடன் சமரசம் செய்து கொள்கின்றனர். உன்னுடைய விஷயத்திலும் சமரசத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.

விவாகரத்து கிடைத்து விட்டால், பொருளாதார சுதந்திரம் உள்ள நீயும், உன் மகளும், குடிகார ஆணின் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வீர்கள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us