தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்னதானத்தின் பயன்!

அன்னதானத்தின் பயன்!

அன்னதானத்தின் பயன்!


PUBLISHED ON : ஜன 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகுதியுடையோருக்கு செய்யும் அன்னதானம், நம் கர்ம வினையை நீக்கி, பிறவிப் பெரும் பேற்றை அளிக்க வல்லது.

ஒருமுறை, வேத விற்பன்னர்களுக்கு உணவளித்த பதுமன் என்ற இளைஞன், அவர்கள் உண்டு முடித்ததும், 'முனிவர்களே... என் தந்தை சோமவார விரதம் இருந்து, வேத விற்பன்னர்களுக்கு உணவளித்த பின்தான் உண்பார். சிறு வயதிலேயே அவரை இழந்து விட்டாலும் அவரைப் போன்றே, நானும், இன்று வரை, அப்பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறேன். உணவிடுதலால் உண்டாகும் பயன் என்ன என்பதை தாங்கள் எனக்கு விளக்கியருள வேண்டும்...' என, வேண்டினான்.

வேதியர்களோ, 'குழந்தாய்... உணவு இடுவதால் உண்டாகும் பயனை, உமையொரு பாகனான சிவபெருமானால் தான் உரைக்க முடியுமே தவிர, எங்களால் முடியாது...' என்றனர்.

'அப்படியானால், பரம் பொருளான சிவபெருமானையே கண்டு, உணவிடுதலால் உண்டாகும் பயனை தெரிந்து வருகிறேன்...' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டான். காடு, மலையெல்லாம் கடந்து, காசி மாநகருக்கு தெற்கே, 55 கி.மீ., துாரத்தில் இருக்கும் ஒரு காட்டை அடைந்தான். அங்கே, வேடர்கள் சிலர் வாழ்ந்தனர். அவர்கள், பகலில் தேனும், தினை மாவும் சேகரிப்பர்; இரவில், காட்டு விலங்குகளுக்கு பயந்து, மரங்களின் மீது பரண் அமைத்து, அதில் உறங்குவர்.

பசியால் வாடிய நிலையில் இருந்த பதுமனைக் கண்ட, வேடர்களில் ஒருவன், அவனை தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தான்.

தான் சேகரித்து வந்த தினை மாவை, மனைவியிடம் தந்து, 'இதை, மூன்று பங்காக செய்; முனி குமாரன் போல இருக்கும் இவருக்கு ஒரு பங்கை தந்து, மற்ற இரண்டு பங்கை நாம் உண்போம்...' என்றான்.

வேடனின்மனைவி மறுத்து, 'இருபங்காகத்தான் பிரிப்பேன்; வேண்டு மானால் உங்கள் பங்கில் நீங்கள் பகிர்ந்து கொடுங்கள்...' என்றாள். வேடனும் அப்படியே செய்தான்; உண்ட பின், மூவரும் மரத்தில் ஏறி பரணுக்குள் புகுந்தனர்.

வேடன் மனைவி பாதி இடத்தில் படுக்க, நடுவில், பதுமனை படுக்க சொல்லி, ஓரமாக படுத்துக் கொண்டான், வேடன். இட நெருக்கடியால், நள்ளிரவில், துாக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து விட்டான், வேடன். உடனே, அவனை புலி அடித்து, துாக்கிப் போய் விட்டது.

விடிந்ததும், விபரமறிந்த பதுமன், மிகுந்த வருத்தத்தோடு காசியை நோக்கி நடக்கத் துவங்கினான்.

நாட்கள் பல கடந்த நிலையில் சிவபெருமான், மறையவர் வடிவில் தோன்றி, 'யார் நீ... எங்கே போகிறாய்?' எனக் கேட்டார்.

'உணவிடுதலின் பயனை, சுவாமியிடம் கேட்க போய்க் கொண்டிருக்கிறேன்...' என்றான், பதுமன். அதற்கு சிவபெருமான், 'காசி மன்னன் மனைவிக்கு, ஆண் குழந்தை பிறக்கப் போகிறது; அது பிறக்கும் போது, அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி வரச் சொல்லி, அதனிடம் கேள், பதில் சொல்லும்...' என்று கூறி மறைந்தார்.

வந்தது பரம்பொருள் என்பதை உணர்ந்த பதுமன், காசி மன்னரை கண்டு, நடந்ததை சொன்னான். வியந்த மன்னர், பதுமன் சொன்னபடியே குழந்தை பிறந்ததும், அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி, பதுமனிடம் கொண்டு வந்தார்.

பதுமன் அக்குழந்தையை பார்த்து, 'உணவு இடுவதால் உண்டாகும் பலன் என்ன?' என்று கேட்டான்.

குழந்தை தன் கையை குவித்து, 'உனக்கு இத்தனுாண்டு தினைமாவு கொடுத்ததன் பலன், எனக்கு, அரச குடும்பத்தில் பிறப்பு கிடைத்திருக்கிறது என்றால், பசித்தோருக்கு உணவிடுவதன் மகிமையை சொல்ல என்னால் முடியுமா...' என்றது.

வியந்த பதுமன், 'ஒருவேளை சிறிதளவு தினைமாவை உணவாக தந்ததே, வேடனுக்கு, ராஜ வாழ்வை தந்திருக்கிறது என்றால், அன்னதானத்தின் பெருமையை சொல்ல யாரால் முடியும்...' என்றபடியே திரும்பினான்.

இயன்றவரை, அன்ன தானம் செய்வோம்... அனைவரும் வாழ்வர்; நாமும் வாழ்வோம்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

இறைவனுக்கு ஏன் பால் அபிஷேகம்?

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும், தயிர், புத்திர விருத்தியையும், நெய், மோட்சத்தையும், பஞ்ச கவ்யம், ஆன்ம விருத்தியையும் தரும்.

பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு. பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், பால் அபிஷேகம் செய்வது ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்வதாக கருதப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us