தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

நான், 26 வயது பெண்; திருமணமாகவில்லை. வங்கியில் பணிபுரிகிறேன். எனக்கு ஒரே தம்பி; வயது, 24. சி.ஏ., படிக்கிறான். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். என் தம்பி, மிகவும் கூச்ச சுபாவம் மிக்கவன். அவனது, ஒரே நம்பிக்கையான தோழி நான் தான். தன் சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்வான்.

'பேஸ்புக்' மூலமாக அவனுக்கு அறிமுகமானாள், ஒரு பெண். அவளது தோற்றம், பேசும் விதம் மற்றும் குணம் தம்பிக்கு மிகவும் பிடித்திருக்கவே, அப்பெண்ணை பற்றி என்னிடமும் கூறினான். இருவருக்கும் வெறும் நட்பு தான் என, நினைத்தேன்; ஆனால், நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. நுாலகம், காபி ஷாப் என, அவ்வப்போது போனாலும், இருவரும் கவுரவமாகவே பழகி உள்ளனர்.

அவள் மீது அதிக பாசம் வைத்து, அவள் தான் தன் வாழ்க்கை என இருந்தான், தம்பி. இந்நிலையில், திடீரென, தம்பியுடனான காதலை, முறித்துக் கொண்டாள், அப்பெண். அதிலிருந்து சோகமாகவும், அப்பெண்ணை மறக்க முடியாமலும், ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கிறான். அவனை எப்படி சமாதானப்படுத்துவது என, தெரியவில்லை.

அப்பெண்ணை சந்தித்து பேசினேன். 'உங்கள் தம்பியுடன் வாழ்க்கையை தொடர விருப்பமில்லை; மேற்படிப்பு படித்து, வெளிநாடு செல்லும் யோசனை உள்ளது...' என, தெரிவித்தாள்.

இரு வீட்டினருக்கும் இந்த விஷயம் தெரியாது என்பதால், அதை பெரிதுபடுத்த வேண்டாம் என நினைத்து, விட்டு விட்டேன். தம்பியோ, படிப்பில் கவனம் குறைந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறான்.

அவனை பழையபடி மீட்டெடுக்க, நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

போன தலைமுறை இளையோருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க, 'சாய்ஸ்' கிடைக்கவில்லை. கிடைத்ததை வைத்து, ஒரு முட்டல், மோதல், சகித்தல் வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு, லட்சக்கணக்கான தெரிவுகள் அவர்கள் முன் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டோ பேசி, பழகி பார்த்து, ஒத்து வரவில்லை எனில், கை குலுக்கி, விலகிக் கொள்கின்றனர். சில ஜோடிகள் பழகும் காலத்திலேயே சிற்றின்பத்தை அனுபவித்து, திருப்தி குறைவு என்ற ஒற்றை காரணத்துக்காக கூட, குற்ற உணர்ச்சி இல்லாமல், பிரிந்து விடுகின்றனர்.

உன் தம்பியின் காதலியை, குறை கூற மாட்டேன். அவளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உன் தம்பி இல்லை. உன் சகோதரனை மணந்து, ஒரு மாதத்திலேயே அவள் விவாகரத்து கோராததற்கு சந்தோஷப்படு.

தம்பியிடம், முன்னாள் காதலி தொடர்பான புகைப்படங்கள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் இருந்தால், அவற்றை அகற்றி, அவனின் கைபேசி எண்ணையும் மாற்றச் சொல். பிடித்த புத்தகங்களை வாசிக்க கொடு; அவனுக்கு பிடித்த இசையை கேட்கச் சொல். அத்துடன், அவனிடம், 'உனக்கு வாழ்க்கை துணையாக, எந்த பெண்ணை தர வேண்டும் என்பதை இறைவன் அறிவான். 'கிட்டாதாயின் வெட்டென மற!' மறதி, மனித உள்ளங்களின் காயங்களுக்கு அருமருந்து...' என, ஆறுதல் கலந்த ஆலோசனைகளை வழங்கு.

காதலியை பழி வாங்க விரும்பினால், முழுமூச்சுடன் படித்து, சி.ஏ., முடிக்கச் சொல்; இதுவே, அவனது காதலிக்கு அதிர்ச்சி வைத்தியம்.

இது, உன் தம்பிக்கு...

மகனே... இரவுகள் நிரந்தரமல்ல; விடியவே செய்யும். பீனிக்ஸ் பறவை போல, சாம்பலிலிருந்து உயிர்த்தெழு. காதல் தோல்விகள், வாழ்க்கை பயிருக்கு, அடி உரம். உன்னை, வேண்டாம் என்று நிராகரித்தவளை நினைத்து வேதனைப்படாதே, அதற்காக, அவளை வெறுக்காதே; வாழ்க்கை பாடத்தின் ஒரு அத்தியாயத்தை கற்று கொடுத்ததற்காக ஆனந்தப்படு. உன்னின் எந்த அம்சம் பிடிக்காமல் விலகினாளோ, அதை அகற்று. தோல்விகள் தான் வாழ்க்கையை சுவாரசியப்படுத்துகின்றன. ஒரு தாயை போல, பாசத்தை காட்ட, அரவணைக்க உனக்கு அக்கா இருக்கிறாள். வெற்றிகரமான திருமணத்திற்கு பின், பழைய காதல்கள், வெறும் கனவுகள் என்கிற அங்கீகாரமே பெறும். ரோஜா கிடைக்காவிட்டால், மல்லிகை பூவை தேர்ந்தெடு.

உன் ஆடிட்டர் கேரியருடன் இணைந்த திருமண வாழ்க்கை, கொம்புத் தேனாய் தித்திக்க வாழ்த்துகிறேன் மகனே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us