PUBLISHED ON : ஏப் 08, 2018

அன்பு சகோதரிக்கு —
எனக்கு திருமணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர்; காவல்துறையில் நல்ல பதவியில் உள்ளார், கணவர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற இருக்கிறார். ஆனால், இந்த வயதில், என் மகள் வயதுள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அப்பெண் ஏற்கனவே திருமணமானவள்; ஒரு மகன் உள்ளான். கடந்த, 10 ஆண்டுகளாக, அப்பெண்ணுடன் தான் தங்கியுள்ளார்; வீட்டிற்கே வருவதில்லை.
என் தந்தையின் பாதுகாப்பில் தான், நானும், என் மகள்களும் உள்ளோம். இரு மகள்களுக்கு, தந்தையின் உதவியுடன், திருமணம் செய்து வைத்தேன். அத்திருமணத்துக்கு கூட, ஏதோ விருந்தாளி போல் கலந்து கொண்டார். தற்போது, மூன்றாவது பெண்ணுக்கு வரன் பார்த்து வருகிறேன்.
இதுவரை, எனக்கென சின்ன பொருள் கூட வாங்கி கொடுத்தது இல்லை. வங்கியில் பணமோ, சொந்த வீடு என, எதுவுமே எனக்கு செய்ததில்லை. அவருடன் குடும்பம் நடத்தி, மூன்று பெண்களை பெற்று விட்டோமே என நினைத்து, கழிவிரக்கம் கொள்கிறேன். தினமும், கரையானை போல் இந்த எண்ணம், என்னை அரித்து வருகிறது.
என் வாழ்க்கையில், திருமணம் மற்றும் குடும்பம் என, எதற்குமே அர்த்தம் இல்லாமல் போய் விட்டது. 'எந்த தகுதியும், பயனுமே இல்லாத ஒருவருடன், இவ்வளவு காலம் வீணாக வாழ்ந்திருக்கிறோமே...' என, எண்ணும் போது, மனம் புழுங்குகிறது.
கணவருடன், அப்பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஆத்திரமும், என் மீதே எனக்கு வெறுப்பும் வருகிறது. பைத்தியம் பிடித்து விடுமோ என, பயமாக இருக்கிறது. மூன்றாவது மகளுக்கு திருமணம் முடித்து, எங்காவது சென்று விடலாம் என்றிருக்கிறேன். அதுவரை என்னை, என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, நல்ல ஆலோசனை தாருங்கள் சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
கூடுதல் பணி நேரம், விடுமுறை இன்மை, அரசியல்வாதிகளின் தலையீடு, பலவகை குற்றவாளிகளுடன் அன்னியோன்யமாக பழகுதல், கையூட்டு, விலைமாதருடன் தொடர்பு, அதிகாரம், குடிப்பழக்கம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து உறவுகள் இப்படி பல எதிர்மறை காரணிகள், காவல்துறையில் பணிபுரிவோரின் மாண்பை சீர்குலைத்து விடுகின்றன. பல வேகத்தடைகளை மீறி, கண்ணியமாக பணியையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் சில காவல்துறை வைரங்களும் உள்ளனர்.
கணவன் என்ற தகுதியை மட்டுமே வைத்து, மனைவிக்கு எவ்வித பயனும் இல்லாத ஆண்மகனோடு குடும்பம் நடத்துகிற பெண்கள், தமிழகத்தில் லட்சக்கணக்கில் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த நீ, மூன்றாவது மகளுக்கும் திருமணம் செய்து வைக்கப் போகிறாய். உதவி கேட்டு, உன் கணவனிடம், நீ மண்டியிடவில்லை. உன் தந்தை வடிவில் இறைவன் உதவி செய்கிறான்.
நமக்கு துரோகம் செய்த நபரை வெறுப்பதற்கு பதில், முன்பின் அறிமுகமில்லாத நபரை கடந்து செல்வது போல், அலட்சியமாக செல்.
இனி நீ செய்ய வேண்டியது:
1. குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்து, உன் கணவனிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று, ஜீவனாம்சம் கேள்
2. மூன்றாவது மகள் திருமணத்திற்கு, கணவனை அழைக்காதே
3. உன் மீது உனக்கு வெறுப்பு வரக்கூடாது; மனதை ஒருநிலைப்படுத்து. தவறு செய்தவன் சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல், சமூகத்தில் உலவுகிறான்; அவனின் துரோகத்தை மீறி, மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பான மனுஷி நீ, தலை நிமிர்ந்து நட
4. மூன்றாவது மகளுக்கு திருமணம் நடத்தி முடித்த பின், ஆன்மிக சுற்றுலா செல்;மாதத்தில் பத்து நாள், ஒவ்வொரு மகள் வீட்டிலும் தங்கு
5. நீயும், உன் தந்தையும், பிடித்ததை சமைத்து சாப்பிடுங்கள்
6. கோடிக்கணக்கான திருமண பந்தங்கள், ஐந்திலிருந்து பத்து சதவீதம் பொய்த்து விடுகிறது. அதற்காக, ஒட்டுமொத்த திருமண பந்தங்கள் மீது அவநம்பிக்கை கூடாது
7. தவறு செய்தவனுக்கு, இறைவன் கட்டாயம் தண்டனை கொடுப்பான் என நம்பு; இறை நம்பிக்கை தான் நாம் சந்திக்கும் அன்றாட பிரச்னைகளுக்கு அருமருந்து
8. கணவன் இல்லாவிட்டாலும், ஒரு பெண் சந்தோஷமாக வாழ முடியும். கணவரோடா பிறந்தோம், அவனோடு சாக... இடையில் வந்தவன், இடையில் போனான்; ஒரு வழிபோக்கனை பற்றி ஏன் அதிகம் சிந்தித்து, உன்னை வருத்திக் கொள்ள வேண்டும்?
9. கெட்ட அனுபவங்களை அதிகம் சிந்திக்காது, யாருக்கோ நடந்ததாக நினைத்து, அவற்றிலிருந்து விலகி நில்
10. உன் வாழ்க்கை, அர்த்தப்பூர்வமானது; மூன்று மகளின் எதிர்காலம் சிறக்க பாடுபட்ட தாய் நீ. உன் தியாகம், வீண் போகாது.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
