தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மனம் விட்டு பேசுங்கள்!

மனம் விட்டு பேசுங்கள்!

மனம் விட்டு பேசுங்கள்!


PUBLISHED ON : ஏப் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறு பிரச்னைகள் கூட பூதாகாரமாய் வளர்ந்து, குடும்ப அமைதியை சீர்குலைத்து விடுகிறது. பிரச்னைகள் ஏற்படும் போது, சம்பந்தப்பட்டவர்கள் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசினாலே போதும், தீர்வு கிடைத்து விடும் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவமே சான்று:

ராஜராஜ சோழனின் மகன், ராஜேந்திர சோழன்; இவர், தன் தந்தை கட்டிய தஞ்சை பெரிய கோவிலை விட, பெரிதாக ஓர் ஆலயத்தை நிர்மாணிக்க நினைத்தார்.

அதனால், சிற்பக் கலையில் வல்லவர்களை அழைத்து, 'தஞ்சை பெரிய கோவில், 80 அடி சதுர பீடத்திற்கு மேல், 216 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. நாம், 100 அடி சதுர பீடத்தில், 300 அடி உயரத்தில் கோவில் எழுப்ப வேண்டும்...' என்றார்.

அதன்படி, வேலை துவங்கி, பாதி பணிகள் முடிந்து விட்டன. ஆனால், எவ்வளவோ முயற்சித்தும், விமானத்தை உயரே துாக்கி நிறுத்த முடியவில்லை. தலைமை சிற்பிக்கு, என்ன செய்வதென்றே புரியவில்லை.

தகவல் அறிந்த மன்னரும் மனம் கலங்கினார்.

இச்சமயம், திருவாரூரில், கமலாலயம் எனும் மிகப்பெரிய குளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார், சிற்பி ஒருவர். அவருக்கும் அங்கு ஒரு பெரும் பிரச்னை ஏற்பட்டது. அது, குளத்தை ஆழப்படுத்த முடியாமல், நீர் ஊற்றுக்கள் பொங்கி, பெரும் அளவில் நீர் தேங்கியதால், திருப்பணியை தொடர முடியவில்லை. அதன் காரணமாக, பணி தடைபட்டது.

'என்ன செய்வது...' என்று திகைத்த திருவாரூர் சிற்பி, 'தஞ்சை கோவிலை விட, பெரிய அளவில் கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கும் சிற்பியிடம் இதற்கு ஆலோசனை கேட்கலாம்...' என்று நினைத்து புறப்பட்டார்.

அதே சமயம், விமானத்தை உயர்த்த வழி தெரியாமல் தவித்த சிற்பி, 'திருவாரூர் சிற்பியிடம் யோசனை கேட்கலாம்...' என்று திருவாரூரை நோக்கி புறப்பட்டார்.

இருவரும், வழியில் ஒரு சத்திரத்தில் சந்தித்தனர். அவரவர் பிரச்னைகளை மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொண்ட போது, 'பஞ்சு பெருத்த இடத்துல, விமானத்துல கல்லை ஏத்தறதா கஷ்டம்...' என்றார் திருவாரூர் சிற்பி.

சந்தோஷம் தாங்காத கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி, 'வாளை பெருத்த ஊர்ல, ஊத்துக்கண்ணை அடைக்கிறதா கஷ்டம்...' என்றார்.

பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட மகிழ்ச்சியில், இருவரும் அவரவர் ஊர் திரும்பினர். கமலாலயத்தில் பொங்கிய நீரில், வாளை மீன்களை விட, அவை ஊற்றுக் கண்களை அடைத்துக் கொண்டன. தண்ணீரை இறைத்து, எண்ணியபடியே கமலாய திருப்பணி நடந்தேறியது.

அதேபோல, பஞ்சு பொதிகளின் மூலம் சாரம் அமைத்து, விமானத்தை உயர்த்தினார், கோவில் சிற்பி. 170 அடி உயரம் தான் உயர்த்த முடிந்தது; ஒன்பது நிலைகளோடு உயர்ந்து நின்றது கோவில்.

ராஜேந்திர சோழன் நினைத்தது நடக்காவிட்டாலும், பிரச்னை தீர்ந்த சிற்பியின் மனம், அமைதி அடைந்தது. அவ்வாறு உருவான கோவில் தான், காஞ்சி ஸ்ரீ மஹா சுவாமிக்கு மிகவும் பிடித்தமான, கங்கைகொண்ட சோழபுரம் கோவில்!

மனம் விட்டு பேசியதால், இரு பெரும் ஆலயங்களின் பிரச்னையே தீர்ந்திருக்கிறது என்றால், நம் குடும்ப பிரச்னைகள் தீராதா... மனம் விட்டுப் பேசுவோம்; மங்களங்கள் பெருகும்!

- பி.என். பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

எந்த மாதத்தில் என்ன தானம் செய்ய வேண்டும்?

சித்திரை - நீர் மோர், பானகம், குடை, விசிறி, தயிர் அன்னம்; வைகாசி - பானகம், சர்க்கரை; ஆனி - தேன்; ஆடி - வெண்ணெய், பால், தயிர்; ஆவணி - தயிர்; புரட்டாசி - சர்க்கரை; ஐப்பசி - சாதம்; கார்த்திகை - பால், விளக்கு; மார்கழி - பொங்கல்; தை - தயிர், பால், சர்க்கரை, அரிசி; மாசி - நெய்; பங்குனி - தேங்காய் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us