தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : ஏப் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு -

என் வயது, 29; திருமணமாகி விட்டது. பெற்றோருக்கு ஒரே பெண். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், என் கணவர். நான், ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறேன். கை நிறைய சம்பளம்; திறமையானவள் என, பெயரெடுத்துள்ளேன்; பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில், நான் வேலைக்கு செல்வது, என் கணவருக்கு பிடிக்கவில்லை; வேலையை விட்டு விட கூறுகிறார். இத்தனைக்கும் வீட்டு வேலையெல்லாம் செய்து, அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து முடித்த பின் தான், வேலைக்கு செல்கிறேன். இரவு திரும்பி வர தாமதமானாலும், வந்து, நான் தான் சமையல் செய்து கொடுக்கிறேன்.

ஆனாலும், எதற்கெடுத்தாலும் அதிகாரம் செய்கிறார்; தான் முதலாளி போலும், நான் அடிமை போலவும் நடந்து கொள்கிறார்; கேவலமாக பேசி, மனதை நோகடிக்கிறார்.

எங்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அலுவலகம் மற்றும் வீட்டு வேலை என்று சமாளிக்க முடியாமல், உடல் மற்றும் மனநிலை பாதிப்புக்கு ஆளாகிறேன்; அன்பாக, ஆதரவாக பேச மாட்டாரா என்று தோன்றுகிறது.

வங்கி கடன் வாங்கி, வீடு வாங்கியுள்ளேன். அதற்கான கடன் தொகையை கட்டி வருகிறேன்.

இவரை நம்பி வேலையை விட மனமில்லை. இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்நோக்கும் உங்கள் மகள்.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு -

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பர்; அதை மாற்றி, உத்தியோகம் யுவதி லட்சணம் என்பேன். காரணம், உத்தியோகம், பெண்களுக்கு வெறும் பொருளாதார சுதந்திரத்தை மட்டும் பெற்றுத் தருவதில்லை; அவர்களுக்கு தனி அடையாளத்தை தருகிறது. தங்களது துறையில் ஆண்கள் எதையெல்லாம் சாதிக்கின்றனரோ, அதையெல்லாம் பெண்களாலும் சாதிக்க முடியும். சமையல் வேலையுடன், குழந்தைகளை வளர்த்து, வேலைக்கும் சென்று வருவது, ஒரே நேரத்தில், மூன்று குதிரைகளில் சவாரி செய்வதற்கு சமம். இதை, 95 சதவீத பெண்கள் வெற்றிகரமாய் செய்து வருகின்றனர்.

உன் கணவனின் மோசமான நடத்தைக்கு, கீழ்க்கண்ட காரணங்கள் அடிப்படை.

* ஆணாதிக்க மனோபாவம்

* குழந்தை இல்லாததற்கு, தான்தான் காரணமோ என்ற குற்ற உணர்ச்சி

* பணி செய்யும் அலுவலகத்தில், அதீதமான வேலைப் பளு

* குடிப்பழக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தம்

* மனைவி வேலையை விட்டு நின்று விட்டால், கூடுதலாய் அடக்கி ஆள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை.

மகளே... விடுமுறை நாளில், இருவரும் மனம் விட்டு பேசுங்கள்; எக்காரணம் கொண்டும் வேலையை விட முடியாது என ஆணித்தரமாய், ஆனால், அன்பாய் கூறு. இருவரும் மாஸ்டர் செக்கப் செய்து கொள்ளுங்கள். குழந்தை இன்மைக்கு காரணம் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

'நாம் இருவரும் குடும்பம் என்ற ஸ்தாபனத்தில் சமமான பங்குதாரர்கள்; என்னை இழிவாக நடத்தாதீர்; அதனால், என் மனம் புண்படுகிறது. அலுவலக பிரச்னையை, வீட்டுக்கு கொண்டு வந்து, வீட்டை போர்க்களம் ஆக்காதீர்கள். வங்கி கடன் வாங்கி, வீடு கட்டியுள்ளோம்; கடன் தொகையை கட்ட, என் சம்பளமும் உதவுகிறது. நான் வேலைக்கு போகவில்லையென்றால், நம் பொருளாதாரம் சரிந்துவிடும். அத்துடன், நாம் சண்டையிடும் நேரம் அதிகரிக்கும்.

'யாராவது ஒருவர், பணிக்கு செல்லாமல் வீட்டை கவனிக்க வேண்டும் என்றால், நீங்கள் பரிட்சார்த்த முறையில், ஆறு மாதம் மருத்துவ விடுப்பு போட்டு வீட்டை கவனியுங்கள்; நான், மற்ற பொருளாதார வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். சமாதான பேச்சை தாண்டி, நீங்கள் என்னை வேலைக்கு அனுப்ப மறுத்தால், தொடர்ந்து மனதை புண்படுத்தினால், இறுதி தீர்வாக, பரஸ்பரம் விருப்பத்துடன் கூடிய விவாகரத்து செய்து கொள்வோம். விவாகரத்துக்கு பின், பணிக்கு செல்ல விரும்பாத பெண்ணாக பார்த்து மணந்து கொள்ளுங்கள். காலம் என்ன தீர்மானிக்கிறதோ, அதன்படி, என் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேன்...' என உறுதியாக கூறு.

உன் வாழ்வில் ஒளி பெற, இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us