PUBLISHED ON : ஏப் 15, 2018

ப.சிவனடி எழுதிய, 'இந்திய சரித்திரக் களஞ்சியம்' நுாலிலிருந்து: கிழக்கிந்திய கம்பெனியில் ஊழியம் புரிய வந்தவர்களில் மருத்துவரும் இருந்தனர். அக்காலத்தில், மருத்துவர்களை இப்பணியில் அமர்த்தும் பொறுப்பு, லண்டனில் இருந்த, 'சர்ஜன் ஜெனரல்' என்ற தலைமை மருத்துவ அலுவலரின் கையில் இருந்தது. அவரே மருத்துவர்களுக்கு, மருத்துவப் பெட்டியையும் அளித்தார். இம்மருத்துவர்கள், 'சர்ஜன்' என்றழைக்கப்பட்டனர்.
மருத்துவப் பணிக்கென்று, தம் சொந்த செலவில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தவர்களுக்கு மேற்சொன்ன தலைமை மருத்துவ அலுவலர், மருத்துவப் பயிற்சியும் அளித்தார். மருத்துவத்தில் பயிற்சி பெறுவது ஒன்றும் கடினமல்ல; ஒருவர் மருத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டிருந்தால் போதும்; 'ஒருவன் மருந்துப் பெட்டிக்கு கீழே ஓர் இரவு படுத்து உறங்கினால் மறுநாள் அவன் மருத்துவனாகும் தகுதி பெற்று விடுவான்...' என்பர், அக்காலத்தில்! இவ்வாறாக, இந்தியா வந்து சேரும், 'சர்ஜன்' என்ற மருத்துவர்கள் பலவிதமான பணிகளை செய்தாக வேண்டும்.
'அவர்கள், வேளை வரும்போது துப்பாக்கி ஏந்த வேண்டும்; கப்பலிலுள்ள தச்சர், மாலுமி இதர தொழிலாளர் மற்றும் கம்பெனியின் ஊழியர்கள் முதலானோருக்கு, 40 நாளைக்கு ஒருமுறை, முடி வெட்டி விடவேண்டும்...' என்பது கம்பெனியின் நிபந்தனையாக இருந்தது.
இந்தியாவை அடைந்த அவர்கள், நம் நாட்டவர்கள் மருத்துவப் பணியை, பெரிதும் மதிக்கின்றனர் என்பதை கண்டு கொண்டனர். அதன் மூலம், இந்தியர்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பல சலுகைகளையும் இவர்கள் பெற்றுத் தந்தனர். சமஸ்தான மன்னர்களுக்கு இவர்கள் செய்த சிகிச்சைக்கு கைம்மாறாக கம்பெனிக்கு பல சலுகைகள் கிடைத்தன.
கேபிரியேல் என்ற மருத்துவரை சூரத்திலிருந்து, 750 கி.மீ., தொலைவிலிருந்த ஆக்ராவிற்கு வருமாறு அழைத்தார், முகலாய மன்னர் ஷாஜகான். அவர், அங்கு அரச குடும்பத்து பெண் ஒருத்திக்கு மருத்துவம் பார்க்குமாறு கேட்கப்பட்டார். கேபிரியேல் அளித்த சிகிச்சைக்கு பரிசாக, பேரரசரிடமிருந்து ஒரு பட்டயம் கிடைத்தது. அதன்படி கம்பெனி தீர்வையின்றி வாணிபம் செய்யவும், வங்காளத்தில் முதல் குடியேற்றத்தை அமைக்கவும் வழி பிறந்தது. கேபிரியேல் இந்திய பெண் ஒருத்தியை மணந்து, இங்கேயே குடியமர்ந்து, ஆக்ராவில் காலமானார்.
'வாலிப வாலி' நுாலில், மறைந்த பாடலாசிரியர் வாலி சொல்கிறார்: சினிமாவிற்கு வருவதற்கு முன், என் இளமைக் காலத்தில், ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தபோது, அடிக்கடி நாடகம் எழுதி அரங்கேற்றுவேன். 1956ல், ஸ்ரீரங்கத்தில் எனக்கொரு பாராட்டு விழா நடந்தது. அதில், 'மன்னர் மன்னன்' என்ற சரித்திர நாடகத்தை அரங்கேற்றினேன். நாடகத்தில் வரும் பொதுப்பணித் துறை அமைச்சர் பாத்திரம், ஊழலின் மொத்த வடிவமாக உருவாக்கப்பட்டிருந்தது. நாடகத்திற்கு தலைமை தாங்க வந்த ஒரு பிரபலம், காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அவரை வைத்து, கதாநாயகன் வசனம் பேசினான்... 'பொதுப் பணியைப் பொறுப்போடு கவனிக்க வேண்டியவர், பொதுப்பணியின் பெயரால் கஜானாவையே கபளீகரம் செய்து கனக மாளிகை எழுப்பி, காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார்...' என்றெல்லாம் சாடினான்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. மேடைக்கு வந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் என்னை ஒரு பிடி பிடித்தார். நாடக இடைவேளையில் எனக்கு பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கினார், அமைச்சர். உடனே, மைக்கைப் பிடித்து, 'நாடகத்தில் வருகிற அமைச்சர் எப்படி ஊழலில் ஈடுபடுகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு, ஆனால், நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் நம் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்களோ, பொதுப்பணி புரிவோர் எப்படி ஒழுங்காக வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு...' என்று பேசியதும், ஒரே கைத்தட்டல். அப்புறம் தான் அமைச்சர் முகத்தில் சிரிப்பு வந்தது; வாழ்த்திப் பேசினார். 'இந்த இளைஞர் வாலிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...' என்று, அன்று பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர், பின்னாளில் முதலமைச்சரான, எம்.பக்தவத்சலம்.
கருணாநிதி, 1971ல், தமிழக முதலமைச்சராக இருந்தபோது, குமுதம், செப்., 9, 1971 இதழில், வாசகர் கேள்விக்கு அளித்த பதிலில்: கே: உங்கள் பிள்ளைகளில் யாராவது உங்களைப் போல் அரசியல் தலைவராக வருவார்களா?
ப: என்னையும் மிஞ்சுவார்கள் போல் இருக்கிறது!
- நடுத்தெருநாராயணன்
