PUBLISHED ON : ஏப் 15, 2018

இதிகாச காலத்தில், இந்தியாவின் சில பகுதிகளில் யட்சர்கள் எனும் இனத்தினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சாதாரண மனிதர்களை விட, பல மடங்கு பலம் நிறைந்தவர்கள். இவ்வினத்தை சேர்ந்தவர், தனபாலன்; செல்வ வளம் மிகுந்த இவர், தெய்வ பக்தி மிகுந்தவராகவும், கல்வி மற்றும் அரசியல் நுணுக்கங்களில் மேதாவியாகவும் விளங்கினார். அத்துடன், 'குருவும், தாரமும் தலைவிதிப்படியே...' எனும் வாக்கிற்கிணங்க, அழகிலும், நற்குணத்திலும் சிறந்த பத்மினி எனும் உத்தமப் பெண், இவருக்கு மனைவியாக வாய்த்தாள்.
தனபாலனின் பெருமைகளை அறிந்த யட்சர்களின் தலைவரான குபேரன், தனபாலனுக்கு, தலைமை அமைச்சர் பதவி கொடுத்தார்.
தனக்கு கிடைத்த உயர்ந்த பதவியை நன்றாக நிர்வகித்து வந்தார், தனபாலன்.
'முற்றும் துறந்த முனிவனையே மயிலாசனத்தில் அமர்த்தினாலும், அவனும் மனம் கெட்டு திரிவான். அது, முனிவனின் தவறு அல்ல; மயிலாசனத்துடையது...' என்று பதவியினால் ஏற்படும் மன மயக்கத்தை பற்றி கூறுவார், கண்ணதாசன். அதைப் போல, நற்குணம் மிகுந்த மனைவி, வளம் நிறைந்த வாழ்க்கை, உயர்ந்த பதவி என, எல்லாம் இருந்தும், பதவி சுகத்தில், மனம் சீர்கெட்டு, கிருதாசி எனும் தேவதாசியின் மீது மோகம் கொண்டார், தனபாலன்.
பெண் மோகத்தில் ஆழ்ந்து, அவள் வீடே கதியாக கிடந்த தனபாலன், தன்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கிருதாசியின் காலடியில் கொண்டு போய் கொட்டினார்.
இவ்விஷயம் அறிந்து, தனபாலனின் பதவியை பிடுங்கி விட்டார், குபேரன். செல்வம் மற்றும் பதவியை இழந்து, வறுமையின் பிடியில் சிக்கிய தனபாலனால், மறுபடியும் பழைய நிலையை அடைய முடியவில்லை.
கடவுள், நம் ஒவ்வொருவரின் முயற்சிக்கும் அருளவே செய்கிறார். அதை உணர்ந்தும், தெரிந்தே ஏன் வாழ்வை சீர்குலைத்துக் கொள்ள வேண்டும்...
மனதை செம்மையாக்க முயல்வோம்; வாழ்வில் முன்னேறுவோம்!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
அட்சய திருதியையின் பலன்கள் என்ன?
நகைகள், புதிய பொருட்கள் வாங்க உகந்த நாள்; வேலை தடை நீங்கும்; பெண் பார்க்க, தொழில் துவங்க, தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட சிறந்த நாள். இந்நாளில் தொழில் துவங்கினால், தடையின்றி நன்கு வளர்ந்து, சிறக்கும்.
