PUBLISHED ON : ஏப் 15, 2018

சிவகார்த்திகேயன் திடீர் முடிவு!
தன் படங்களில், பெண்களை கிண்டல் செய்வது, புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது என்றெல்லாம் நடித்திருப்பார், நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால், இனிமேல் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். 'குறிப்பாக, சமூக நோக்கமுள்ள, இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளிலும், காட்சிகளிலும் தான் நடிப்பேன்...' என்கிறார்.
— சினிமாபொன்னையா
நித்யாமேனனுக்கு இயக்குனர்கள் கொடுத்த, 'அட்வைஸ்!'
நடிகர் விஜய்யுடன், மெர்சல் படத்தில் நடித்தவர், நித்யாமேனன். உயரம் குறைவான இவர், உருண்டு திரண்டு குண்டாக இருப்பார். இதுவே, நித்யாமேனனை பெரிய அளவில் வளர விடாமல் தடுத்து வருகிறது. அவரது அபிமான இயக்குனர்கள் சிலர், இதை, அவரிடம் பக்குவமாக சொன்னதையடுத்து, இதுவரை சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் புகுந்து விளையாடி வந்தவர், இப்போது, உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். அத்துடன், 'இன்னும் சில மாதங்களிலேயே இது, நித்யாமேனனா என்று திரையுலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு ஸ்லிம்மாகி காட்டுகிறேன்...' என்று சவால் விட்டுள்ளார். உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும், மெழுகுண்டையும்!
— எலீசா
ரஜினி படத்தில் கெஸ்ட் ரோலில் ஐஸ்வர்யா ராய்!
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்த, எந்திரன் படத்தில் நாயகியாக நடித்தவர், ஐஸ்வர்யா ராய். ஆனால், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான, 2.0 என்ற படத்தில், நாயகியாக நடித்துள்ளார், எமிஜாக்சன். இப்படம், முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், ஐஸ்வர்யா ராயும் சில காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, 2.0 படத்தில், ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பதை சஸ்பென்சாக வைத்திருப்பதாக கூறுகின்றனர். ஊர் வாயை மூடலாமா, உலை வாயை மூடலாமா?
— எலீசா
திருநெல்வேலி தமிழில் உருவாகும் மூன்று படங்கள்!
ரஜினிகாந்தின், காலா, விக்ரமின், சாமி 2 மற்றும் சுதிர் நடித்துள்ள, பரியேறும் பெருமாள் ஆகிய மூன்று படங்களும், திருநெல்வேலி கதைக் களத்தில் உருவாகியுள்ளன. அத்துடன், இப்படங்களிலுள்ள அனைத்து கேரக்டர்களுமே நெல்லைத் தமிழில் பேசி, நடித்துள்ளனர். அவ்வகையில், காலா படத்தின் டீசரில், ரஜினி பேசியுள்ள, 'வேங்க மகன் ஒத்தையில நிக்கேன்; தில் இருந்தா மொத்தமா வாங்கலே...' என்ற, 'டயலாக்' பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.
— சினிமாபொன்னையா
கறுப்பு பூனை!
வாரிசு இசையமைப்பாளரின் மார்க்கெட், தற்போது சரிந்து வருவதால், தன் மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும் முயற்சியாக, ஏற்கனவே, தான் இசையமைத்த படங்களில் நடித்த முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக அவர் இசையமைத்த பாடல்கள் எதுவும் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்காததால், அவரது பிடிக்குள் அகப்படாமல் நழுவிச் செல்கின்றனர், கதாநாயகர்கள். இதனால், கடும் அதிர்ச்சியில் உள்ளார், வாரிசு.
இரண்டெழுத்து படத்தில் நடித்தபோது, அப்பட நாயகனுடன் நடிக்கும் காட்சிகளில், தான் மட்டுமே ஸ்கோர் பண்ண வேண்டும் என்று அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவரை வெறுப்பேற்றி வந்துள்ளார், பிரேமம் நடிகை. அதற்கு, இயக்குனரும், உறுதுணையாக இருந்ததால், கடுப்பான நாயகன், இப்போது, அப்படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். அத்துடன், நடிகையை பற்றி, நடிகர்கள் வட்டாரத்தில் சொல்லி, அவர் மீது அதிருப்தியை உருவாக்கி வருகிறார்.
சினி துளிகள்!
* இந்தியில், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான, பரி என்ற ஹாரர் படத்தின், தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறார், நயன்தாரா.
* பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூஞ்சா, அஜித்தின் தீவிரமான ரசிகையாம். 'அவருடன் ஒரு படத்திலேனும் நடித்துவிட வேண்டும் என்பதுதான் என் சினிமா கனவு...' என்கிறார்.
* கரு படத்தை அடுத்து, தனுசுடன், மாரி 2 படத்தில் நடிக்கிறார், சாய் பல்லவி.
* பேய்ப்பசி என்ற படத்தை தயாரித்து, இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, இப்படத்தில் சந்தோஷ் நாராயணனையும் தன்னோடு சேர்த்து இசையமைக்க வைத்துள்ளார்.
அவ்ளோதான்!
