PUBLISHED ON : ஏப் 15, 2018

'மின் ரயிலின் படிக் கட்டில் நின்றபடி பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து மரணம்; மொபைல் போன் பேசிக் கொண்டே பயணித்ததால் நடந்த விபரீதம்!' என்ற செய்தியை நீங்கள் வாசித்திருக்கலாம்; இளைய தலைமுறையினர் ஏன் தான் இப்படி மொபைல் போனை கட்டிக்கொண்டு அழிந்து போகின்றனரோ என்று திட்டி, அடுத்த செய்திக்கு தாவியிருக்கலாம்.
ஆனால், என்னால் அப்படி கடந்து போக முடியவில்லை. ஏனென்றால், அந்த விபத்து நிகழ்ந்தபோது, நானும், அந்த மின் ரயிலில் தான் பயணித்துக் கொண்டிருந்தேன். அதைப் பற்றிதான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அதற்கு முன், என்னை பற்றியும், என் மாணவியர் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
என் பெயர், ரெஜினா; அரசு மேல்நிலைப் பள்ளியில், இயற்பியல் ஆசிரியை. பெண்கள் பள்ளியில் அதுவும், 'டீன் ஏஜ்' பெண்களுக்கு ஆசிரியையாக இருப்பது கத்தி மேல் நடக்கும் காரியம்.
எப்போதும் அவர்களை கண்காணித்தவாறு இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் பள்ளியிலிருந்து வெளியேறி, காதலன் அல்லது நண்பர்களுடன் ஊர் சுற்ற போய் விடுவர். வகுப்பில் ஒன்றிரண்டு மாணவியர் தான் அப்படி இருப்பர். ஆனால், அவர்கள் யாரென்று தெரியாததால், எல்லா பெண்களையுமே கண்காணித்தபடி இருக்க வேண்டும்.
ஒருமுறை, நானும், மற்றொரு ஆசிரியையும், பிளஸ் 2 மாணவியரை, 'பிக்னிக்' அழைத்து போயிருந்தோம்.
மாணவியரில் ஒருத்தி, அவளுடைய ஆண் நண்பனை அவ்விடத்திற்கு வரவழைத்து, எங்கள் கண்ணில் மண்ணைத் துாவி, அவனுடன் சென்று விட்டாள். மதிய உணவின்போது, மாணவியரை கணக்கெடுக்கும்போது தான், அவள் இல்லாதது தெரிந்தது. பதற்றத்தில், எங்களுக்கு இதயத் துடிப்பு எகிறி விட்டது. நல்லவேளையாக, சாயங்காலம் வீட்டிற்கு கிளம்பும்போது, எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள். அதற்கப்புறம் மாணவியரை, 'பிக்னிக்' அழைத்து போக சொன்னால், ஒரு பெரிய கும்பிடு போட்டு, மறுத்து விடுவேன்.
இன்னுமொரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்...
ஒருமுறை செய்முறை வகுப்பில், கருவிகளை இயக்கி, அளவீடுகளை குறிப்பேடுகளில் குறித்துக் கொண்டிருந்தனர், மாணவியர். சரியாக குறிப்பெடுக்கின்றனரா என்று, ஒவ்வொருவராக பார்த்து வந்தேன். தன்னுணர்வே இல்லாமல், ஒரு மாணவி, குறிப்பேட்டில், 'ஐ லவ் யூ தினேஷ்... என்னால், உன் பிரிவை தாங்க முடியல; ப்ளீஸ் திரும்பி வந்துடு...' என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிக் கொண்டிருந்தாள்.
அவளை உலுக்கி, 'என்னம்மா இது...' என்றால், 'மன்னிச்சுக்கங்க மிஸ்... என்னையும் அறியாமல் ஏதோ எழுதி இருக்கிறேன்...' என்கிறாள்.
'யார் அந்த தினேஷ்...' என்று விசாரித்தால், 'என்னோட பாய் பிரண்ட்; ஒரு சின்ன சண்டையில் என்னிடம் கோபித்து போயிட்டான். இப்போது, நானாக போய் பேசினாலும் என்னுடன் பேசுறதில்ல...' என்று அழத் துவங்கினாள்.
அறிவுரைகள் சொல்லி, அடுத்தவளின் குறிப்பேட்டை பார்க்க போய் விட்டேன்.
இது மட்டுமா, வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று எவளாவது வயிறு வலிக்கிறது என்பாள். நம்பலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும். தனியாக அழைத்து, 'பீரியடா...' என்று கேட்டால், 'ஆம்...' என்பாள் வேதனையுடன்!
'நாப்கின் வைத்திருக்கிறாயா...' என்று கேட்டால், பெரும்பாலும், இல்லை என்று தான் சொல்வர்.
அரசு பள்ளியில் நாப்கின் இலவசமாக கிடைக்கும்; அதற்கு பொறுப்பு வகிக்கும் ஆசிரியையிடம், வாங்கிக் கொடுக்க வேண்டும்.
அப்புறம், அவளுடைய பெற்றோரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் பெண்ணிற்கு வயிறு வலிக்கிறதாம்... பள்ளிக்கு வந்து அழைத்து போக முடியுமா...' என்று கேட்டால், பெரும்பாலான பெற்றோர், 'நான் வேலை செய்துட்டு இருக்கேன்; உடனே வர முடியாதே...' என்பர். அது, அவர்களின் அன்றைய வயிற்றுப்பாட்டுக்கான தினக்கூலி வேலையாக இருக்கும்; அதை, எப்படி அவர்களால் இழக்க முடியும்!
அவளுக்கு துணைக்கு இன்னொரு மாணவியை அனுப்பி வைத்து, அவள் திரும்பி வரும் வரை, படபடப்புடன் பள்ளியின் வாசலையே பார்த்தபடி இருக்க வேண்டும்.
சாதாரண நிகழ்வுகளை மிகைப்படுத்தி சொல்வதாக உங்களுக்கு தோன்றலாம். மற்றுமொரு சம்பவத்தை சொல்கிறேன், அப்போது தான், உங்களுக்கு பிரச்னையின் தீவிரம் புரியும்.
ஒருநாள், காவல் நிலையத்திலிருந்து, தலைமையாசிரியைக்கு போன்... 'மாணவியின் பெயர், நந்தினி; தகப்பனார் பெயர், கோவர்த்தன்; உங்கள் பள்ளியில் தான், பிளஸ் 1 படிக்கிறாளா?' என்று கேட்டுள்ளார் இன்ஸ்பெக்டர்.
என்னை வரவழைத்து கேட்டார், தலைமை ஆசிரியை. நான் உறுதிபடுத்தவும், எதிர் முனையில் இருந்த இன்ஸ்பெக்டர், 'நாங்க, அவள எங்க கஸ்டடியில் வைச்சுருக்கோம்; யாராவது ஸ்டேஷனுக்கு வந்து, அவளை அடையாளம் காட்டி அழைச்சுட்டு போக முடியுமா...' என்று கேட்கவும், எங்களுக்கு என்னவோ, ஏதோ என்று பதற்றமாகி விட்டது.
வருகை பதிவேட்டை எடுத்து பார்த்தால், அந்த மாணவி அன்றைக்கு பள்ளிக்கு வந்ததாய் பதிவாகி இருந்தது. ஆனால், அவள் இப்போது போலீஸ் கஸ்டடியில்!
பதறியடித்து, உடற்கல்வி ஆசிரியையுடன் காவல் நிலையத்திற்கு சென்றேன்.
அங்கிருந்தது எங்களின் மாணவியே தான். ஓர் ஓட்டலில், போலீஸ் விபசார சோதனை நடத்தியபோது, ஒரு ஆணுடன் தனித்திருந்து பிடிபட்டிருக்கிறாள்.
நந்தினியுடன் இருந்தவனை யாரென்று விசாரித்தால், 'அவன், என் மாமன் மகன் தான்; அவனைதான் கல்யாணம் செய்துக்கப் போறேன்...' என்கிறாள்.
இன்ஸ்பெக்டர் தலையில் அடித்து, மாணவி என்பதால், வழக்கு எதுவும் பதியாமல் எச்சரித்து, எங்களுடன் அனுப்பி வைத்தார். பெண்ணின் தந்தைக்கு போன் செய்து வரவழைத்து விஷயத்தை சொன்னால், 'உங்கள நம்பிதானே பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கிறோம்... இப்படி கவனக்குறைவா இருந்து, என் பொண்ண கெட்டுப்போக விட்டுட்டீங்களே...' எனச் சொல்லி, கதறி அழுகிறார், அவர்.
பார்த்தீர்களா... பழி எப்படி வந்து சேர்கிறது என்று!
இன்னொரு சம்பவத்தையும் சொல்லி விடுகிறேன்... இது, மிகவும் சமீபத்தில் நடந்தது.
அவ்வப்போது நான், கட்டுரைகள், துணுக்குகள் என்று எதையாவது எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப, அவற்றில் ஒன்றிரண்டு பிரசுரமாகும் என்பதால், தலைமை ஆசிரியை, என்னை அடிக்கடி பிரேயரில், மாணவியருக்கு, 'அட்வைஸ்' செய்யச் சொல்வார். அன்றைக்கும், பிரேயரில் அறிவுரை கூறிக் கொண்டிருந்தேன்.
அப்போது, திடீரென, ஒரு மாணவி, மயங்கி விழுந்து விட்டாள். அருகில் போய் பார்த்தால், பிளஸ் 2 படிக்கும் கிருஷ்ணவேணி; அவளின் வகுப்பாசிரியை நான் தான்.
உடனே, அவளை, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவளை பரிசோதித்த டாக்டர், அவளின் பெற்றோருக்கு போன் செய்து வரவழைக்கச் சொன்னார்.
'ஏன் டாக்டர்... எதுவும் சீரியசான பிரச்னையா...' என்றேன்.
'பேரண்ட்ஸ வரச்சொல்லுங்க; அப்புறம் சொல்றேன்...' என்றவர், தன் உதவியாளரிடம், கிருஷ்ணவேணியின் ரத்த மாதிரியை எடுத்து, பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப சொன்னார்.
கண்டிப்பாக மூளையில் கட்டி, ரத்தப் புற்றுநோய் என்று எதையோ சொல்லப் போகிறார் என்று பயந்து கொண்டிருந்தேன்.
கிருஷ்ணவேணி மிகவும் ஏழை பெண்; கிராமத்திலிருந்து வந்து, எங்கள் பள்ளியில், பிளஸ் 1லிருந்து படிக்கிறாள்; நன்றாக படிப்பவள்.
இந்த ஆண்டு, எப்படியும் மாநில அளவில், 10 ரேங்கிற்குள் மதிப்பெண் வாங்கி, மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்து விடுவாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆச்சரியமாக, போன் பண்ணிய கொஞ்ச நேரத்திலேயே, கிருஷ்ணவேணியின் அம்மா பதறியடித்து, ஓடி வந்தாள். அவள் அம்மாவிடம், 'உங்க மக, கர்ப்பமாக இருக்கிறா; கரு நான்கு மாதங்களை கடந்து, வளர்ந்து விட்டதால், அதை கலைச்சா, பெண்ணோட உயிருக்கே ஆபத்தா போயிடும்...' என்று டாக்டர் சொன்ன போது, என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் அம்மா, 'பாவி மகளே...' என்று மகளை அடிக்க துவங்கி விட்டாள்.
கிருஷ்ணவேணியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அவளின் அம்மாவும், நானும் எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும், சொல்ல மறுத்து விட்டாள்.
ஆசிரியர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று தலைமை ஆசிரியை கருத்து கேட்ட போது, எல்லாருமே கிருஷ்ணவேணிக்கு, 'டி.சி.,'யை கொடுத்து, பள்ளியிலிருந்து வெளியேற்றி விடலாம் என்றே அபிப்ராயம் சொன்னார்கள்.
அதுவும், கிருஷ்ணவேணிக்கு உயிரியல் பாடம் எடுக்கும் ஜெயராமன், 'நம் கலாசாரம் தெரியாமல் படிக்கும்போதே வயிற்றை நிரப்பி வந்திருக்கும் பெண்ணை, மன்னிக்கவே கூடாது...' என்று பொங்கினார்.
நான் தான் இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்கு முழு ஆண்டு தேர்வு வருகிறது. அதை எழுதட்டும் என்று தலைமை ஆசிரியையிடமும், மாவட்ட கல்வி அதிகாரியிடமும் மன்றாடி, அனுமதி வாங்கித் தந்தேன்.
கோடை விடுமுறை துவங்கியிருந்த சமயம் அது... சென்னை வானொலி நிலையத்திற்கு, நான் எழுதி அனுப்பியிருந்த கட்டுரை ஒன்று ஒலிபரப்பிற்கு தேர்வாகியிருந்ததால், மாலை, 3:00 மணிக்கு நிலையத்திற்கு வந்து கட்டுரையை வாசித்து கொடுக்கும்படி சொல்லியிருந்தனர்.
சந்தோஷமாக கிளம்பிப் போனேன். பொதுவாகவே, சென்னையில், மத்தியான மின் ரயில்களில் கூட்டமே இருக்காது. அதுவும், பீச் போகிற ரயில் என்றால், ஆளே இருக்காது. நான் ஏறிய ரயிலும் அப்படிதான் இருந்தது.
பெட்டியின் வலதுபுற மூலையில், போதையில், நிம்மதியாக துாங்கிக் கொண்டிருந்தான், ஒருவன்.
இடதுபுற மூலை ஜன்னலோர சீட்டில் ஒரு ஆணும், பெண்ணும் எதிரெதிரே உட்கார்ந்து காரசாரமாய் ஏதோ விவாதித்தபடி இருந்தனர். அவள், தன் துப்பட்டாவால் தலையை மூடியிருக்க, ஆண் தன் முகத்தை ஜன்னலுக்கு வெளியே திருப்பியிருந்தான்.
கொஞ்சம் துாரமாய் போய் வலதுபுற மூலையின் மற்றொரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்து, அவர்களை பார்த்த போதுதான், தெரிந்தது, அவள் கிருஷ்ணவேணி என்பது! ஆணின் பின்பக்கம் தான் தெரிந்ததால் யாரென்பது புரிபடவில்லை. ஆனால், பரிச்சயமான தோற்றமாக இருந்தது.
அவர்கள் எப்படியும் போகட்டும் என்று ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடி, கட்டுரையை எப்படியெல்லாம் ஏற்ற, இறக்கமாய் வாசிக்கலாம் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி இருந்தேன்.
ரயில் அடுத்த ஸ்டேஷனை தாண்டியதும், 'மிஸ்... ஒரு நிமிஷம் வாங்களேன்...' என்று, என்னை அழைத்தாள், கிருஷ்ணவேணி.
அந்த ஆண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆவலில், 'சொல்லும்மா...' என்றபடி, அவள் அருகில் சென்றேன்.
அது, உயிரியல் பாடம் எடுக்கும் ஜெயராமன்!
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் என்னை பார்த்த பார்வையில், மாட்டிக் கொண்டோமே என்ற பதற்றம் தெரிந்தது.
கிருஷ்ணவேணி சொன்னாள்... 'என் கர்ப்பத்திற்கு யார் காரணம்ன்னு எல்லாரும் என்னை கேட்டீங்களே... இவர் தான், அதுக்கு காரணம். குழந்தை பிறக்கறதுக்குள்ள என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்கு குடுத்திருந்ததால, இவரை காட்டி குடுக்கல.
'இப்ப, இவரோட மாமா பெண்ணை கல்யாணம் கட்டிக்கப் போறதா சொல்றார். அப்படின்னா, என்னை ஏன் காதலிக்கணும், ஏன் ஆசை வார்த்த காட்டணும்... என்னை மெடிக்கல் காலேஜில் சேர்த்து படிக்க வைப்பதாகவெல்லாம் வாக்கு கொடுத்திருந்தார். நீங்களே இது நியாயமான்னு கேளுங்க மிஸ்...' என்றாள் அழுது கொண்டே!
'என்ன சார் இது... அக்கிரமமா இருக்கு... உங்ககிட்ட படிக்கிற பொண்ணையே இப்படி மோசம் செய்திருக்கீங்களே... மாதா, பிதா, குரு தெய்வம்ன்னு சொல்வாங்க; நீங்க, ஆசிரியர் தொழிலுக்கே அவமரியாதை செய்திட்டீங்களே...' என்றேன் கொஞ்சம் கோபமாய்!
'இங்க பாருங்க மிஸ்... இது, பிரேயர் கிடையாது; மைக் கிடைச்சதுன்னு மணிக்கணக்கா, 'அட்வைஸ்' செய்றதுக்கு... இதுல நீங்க தலையிடாதீங்க; இவ, வயித்துல வளர்ற குழந்தைக்கு நான் தான் அப்பனா இருக்கணுமின்னு கட்டாயமில்ல. ஏன்னா, இவளுக்கு ஏகப்பட்ட ஆண் தொடர்புகள்; அதுல, நானும் ஒண்ணு. இவள கட்டிக்கிறதா, நான் வாக்கு குடுக்கவே இல்ல; ஏன்னா, கண்டிப்பா இவங்க ஜாதியில பெண்ணெடுக்க, எங்க வீட்டுல ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாங்க...' என்றான், என்னை விரோதமாய் பார்த்தபடி!
'எப்படி அபாண்டமாய் பேசுறார் பாருங்க மிஸ்... குழந்தை பிறந்ததும், இவரோட, டி.என்.ஏ.,வை, குழந்தையோட, டி.என்.ஏ.,வோட ஒப்பிட்டு பாத்தா குழந்தைக்கு அப்பன் யாருன்னு தெரிஞ்சுட்டு போகுது... நான், உங்கள விடமாட்டேன்; போலீசுல புகார் பண்ணி உண்டு இல்லன்னு பண்ணிடுவேன். இப்ப, ஜாதி அது, இதுன்னு சொல்றீங்களே... காதலிக்கும்போது இந்த புத்தி எங்க போயிருந்துச்சு... அப்பன், ஆத்தா சம்மதிக்காட்டாலும் எப்படியும் என்னை கல்யாணம் கட்டிக்கிடுறதா வாக்கு குடுத்தீங்கல்ல... கோவிலுக்கெல்லாம் கூட்டிகிட்டு போயி, என் நெத்தியில் குங்குமம் வச்சு உட்டீங்கல்ல... அந்த நம்பிக்கையில தான நீங்க எங்க கூப்பிட்டாலும் வந்தேன்...' என்று அழத் துவங்கினாள்.
அப்புறமும் அவர்கள் இருவரும் ஏதேதோ பேசி, சண்டை போட்டனர். வாக்குவாதம் வளர்ந்து கொண்டிருக்க, செய்வதறியாது மவுனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் ஜெயராமன், 'சரி, வேணும்ன்னா உன்னையும் கைவிடாம, வைப்பாட்டியா வச்சு, கடைசி வரைக்கும் காப்பாத்துறேன்; அவ்வளவு தான் முடியும்...' என்று திமிராக சொன்னான்.
'அதுக்கு வேற ஆள பாரு...' என்றபடி அழுதுகொண்டே வேகமாய் மின் ரயிலின் வாசலை நோக்கிச் சென்ற கிருஷ்ணவேணி, அங்கிருந்த கம்பியை பிடித்து, 'நான், செத்து தொலையுறேன்...' என்றபடி குதிப்பதற்கு தருணம் பார்க்க, விபரீதமாக ஏதும் நடந்து விடுமோ என்ற பயத்தில், அவளின் கையை பிடித்து உள்ளே இழுத்து விட்டேன்.
'என்னடி சீன் போடுறியா... செத்து தொலையேன்; நானாவது நிம்மதியா இருப்பேன்...' என்றபடி அவள் அருகில் போய் நின்றான், ஜெயராமன். அப்போது, அவனது மொபைல் போன் சிணுங்க, எடுத்து, 'சொல்லுடா மச்சி, டிரெயின்ல தான் வந்துட்டு இருக்கேன்... அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்ல. என்ன பண்ணிடுவா...' என்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
திடீரென்று வேகம் வந்தவளாய், 'நான், ஏண்டா சாகணும்... நீ, செத்து தொலைடா...' என்றபடி ஜெயராமனின் முதுகில் கை வைத்து, வேகமாக தள்ளவே, பேலன்ஸ் தவறி, அவன் வெளியே விழுக, எதிரிலிருந்த எலக்ட்ரிக் கம்பத்தில் அவனுடைய தலை மோதி சிதறியது.
ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்துவதற்கு முன், கிருஷ்ணவேணியை ரயில் பெட்டியின் இறுதி முனைக்கு போய் அமைதியாக உட்கார்ந்து கொள்ள சொன்னேன். அவளும் அழுதுகொண்டே, துாங்குவது போல் பாவனை செய்தபடி இருந்தாள்.
ரயில்வே போலீசிடம், ஜெயராமன் மொபைல் போனில் பேசிக் கொண்டே பயணித்ததால், தவறி விழுந்துட்டார்ன்னு ரிப்போர்ட் கொடுத்து, கிருஷ்ணவேணியை காப்பாற்றினேன்.
நான் செய்தது சரியா, தவறா என்று நீங்களே சொல்லுங்கள்....
சோ.சுப்புராஜ்
