தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 26 வயது பெண். எனக்கு ஒரு அக்கா; அவருக்கு திருமணமாகி விட்டது. என் அப்பா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்; அம்மா இல்லத்தரசி. எங்களுடையது நடுத்தர குடும்பம். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். என் அக்கா பி.எஸ்சி., - பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். வறுமையிலும், என்னை, எம்.எஸ்.சி., வரை படிக்க வைத்தனர் பெற்றோர். வேலைக்கு முயற்சி செய்த போது, ஒரு பணக்கார குடும்பத்தினர் என்னை பெண் கேட்டு வந்தனர்.

'எங்களுக்கு பணம் பெரிசல்ல, படித்த, லட்சணமான பெண்ணா வேணும்ன்னு தான், உங்களை தேடி வந்துள்ளோம்...' என்று மாப்பிள்ளை வீட்டினர் கூறியதால், அதிகம் விசாரிக்க தோன்றாமல், சம்மதம் தெரிவித்தனர், பெற்றோர்.

மாப்பிள்ளை வீட்டினரே மொத்த செலவுகளை ஏற்று, திருமணத்தை சிறப்பாக நடத்தினர்.

மனம் நிறைய சந்தோஷத்துடன், புகுந்த வீடு சென்றேன். ஒரு மாதம் கூட முடியவில்லை; அவர்களது சுயரூபம் வெளிப்பட்டது.

மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் என் கணவர் என, ஒட்டு மொத்த குடும்பமே, என்னை மட்டம் தட்டி பேசி, உதாசீனம் செய்ய ஆரம்பித்தனர். வீட்டு பணியாள் போன்று நடத்தினர். 'என்ன இருந்தாலும் நம்ம அந்தஸ்துக்கு இவ சமமாவாளா?' என்று குத்திக் காட்டினர்.

'நீங்களாக தானே என்னை பெண் கேட்டு வந்தீர்கள்...' என்று கேட்டதற்கு, 'எங்களுக்கு சமமாக உள்ள செல்வந்தர்கள் யாரும் பெண் தர முன்வரவில்லை; எனவே தான் உன்னை அணுகினோம்...' என்று அலட்சியமாக கூறினர். விஷயம் என்னவெனில், மாப்பிள்ளை, திருமணத்திற்கு முன் போதைக்கு அடிமையாகி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, மீண்டு வந்துள்ளாராம். விஷயம் தெரிந்தவர்கள் விலகிச் செல்ல, தன் குடும்பத்துக்கு வாரிசு இல்லாமல் போய் விடும் என்று, ஏமாற்றி என்னை, பொன் விலங்கு பூட்டி, அழைத்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் அறிந்து துடிதுடித்து போனேன். என் பெற்றோருக்கு இவ் விஷயத்தைக் கூறி, அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. எத்தனையோ வேலையாட்கள் இருந்தாலும், சமையல் முழுக்க நான் தான் செய்ய வேண்டும். அதிலும், மூன்று வேளை அல்ல; ஐந்து வேளை. சமையல்கட்டே கதி என்று இருக்க வேண்டியுள்ளது. உடலும், மனமும் சோர்ந்து போகிறது.

கல்யாணம் அல்லது வேறு ஏதேனும் விசேஷங்களுக்கு செல்லும் போது, குடும்பமே சர்வ அலங்காரங்களுடன் வரும்; நான் மட்டும் சாதாரண புடவை, சொற்ப நகைகளுடன், அவர்கள் வீட்டு நாய் போல், பின் தொடர வேண்டியுள்ளது. என்னைப் பற்றி யாராவது விசாரித்தால், 'அவளுக்கு அப்படியிருக்கத் தான் பிடித்திருக்கிறது... என்ன இருந்தாலும் பஞ்சை பனாதைங்க தானே... என்ன தான் நடு வீட்டில் வைத்தாலும், இப்படி தானே இருப்பர்...' என்று ஏளனமாக பேசுவர். கேட்பவர்கள், ஏதோ ஜோக்கை கேட்பதை போல் சிரித்து விட்டு செல்வர்; எனக்கோ அவமானமாக இருக்கும்.

வீட்டிற்கு வந்ததும், 'இவளை இப்படி தான் அடக்கி வைக்கணும்; இல்லன்னா, நம்மளையே மிஞ்சிருவா...' என்று ஆணவமாக பேசுவர்.

என் கணவருக்கு, நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி வெளிநாட்டுக்கு டூர் போவது, கிளப்புக்கு போவது, ரேஸ் ஆடுவது போன்றவை வழக்கமாக உள்ளது. படுக்கைக்கு மட்டுமே மனைவி என்ற எண்ணம் கொண்டவர். அவரிடம் அன்பையோ, பாசத்தையோ எதிர்பார்க்க முடியவில்லை.

வறுமையில் உழன்றாலும், சந்தோஷமாக, பெற்றோரின் அன்பு மழையில், சுதந்திரமாக இருந்தேன். என் கனவுகள் எல்லாம் சிதைந்து, அடிமையாக இருக்க வேண்டியதை நினைத்து, வருந்துகிறேன். மனநோயாளியாகி விடுவேனோ என்று பயமாக உள்ளது. எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

'பணக்கார வீட்டுக்கு மருமகளாய் போகும் நான் ஒரு பரம ஏழை' என்கிற தாழ்வு மனப்பான்மையுடன் கணவன் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறாய். உன் தாழ்வு மனப்பான்மையை மோப்பம் பிடித்துவிட்ட உன் கணவனின் வீட்டார் நமக்கு ஒரு அடிமை கிடைத்து விட்டாள் என்கிற துள்ளலுடன் உன்னை பாடாய் படுத்துகின்றனர். 'உங்களிடம் பணம் இருக்கிறது; என்னிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன...' என்கிற மிடுக்குடன், நீ புகுந்த வீட்டுக்குள் வலது கால் எடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் வெற்றி பெற, 'முதல் அபிப்ராயம்' மிக முக்கியம். கழுதையாக தென்பட்டால் பாரம் ஏற்றுவர், ரேஸ் குதிரையாக தென்பட்டால் எட்ட நின்று மரியாதை காட்டுவர்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. பொறுத்தது போதும், பொங்கி எழு. புகுந்த வீட்டுக்குள் அஹிம்சை முறையில் போராட்டங்கள் நடத்து மகளே!

* 'நான், எம்.எஸ்.சி., வரை படித்திருக்கிறேன். படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது. நான் வேலைக்கு போகப் போகிறேன். என்னை தடுக்க யாருக்கும் உரிமையில்லை. என்னுடைய தேவைகளை சொந்த காலில் நின்று பூர்த்தி செய்து கொள்கிறேன்...' என குரல் உயர்த்து. வேலை வாய்ப்பு செய்திகளை கவனித்து, தகுந்த வேலைக்கு விண்ணப்பி.

* சமையலறைக்குள், 'நான் இந்த வீட்டுக்கு மருமகளாக, உங்கள் மகனுக்கு மனைவியாக தான் வந்தேன். சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அல்ல. தினம் ஐந்து வேளை நானே தனியாக நின்று சமைக்க மாட்டேன். வீட்டிலுள்ள அனைத்து பெண்களும் சமையல் பணியில் பங்கு பெற வேண்டும் அல்லது எனக்கும், என் கணவனுக்கும் தனியே சமைத்துக் கொள்கிறேன். நீங்கள், உங்களுக்கு தனி சமையல் செய்து கொள்ளுங்கள்...' என, திட்டவட்டமாக கூறு.

* உன்னை மட்டம் தட்டி பேச விடாதே. 'உங்கள் போதை அடிமை மகனுக்கு, இன்னொரு போதை அடிமை பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? உங்கள் மகன், ஒரு அழுகி போன மாம்பழம், ஏமாற்றி என் தலையில் கட்டி வைத்து விட்டீர்கள். ஏமாற்றுக்காரர்களான உங்களை நான் தான் வசவு பாட வேண்டும். நீங்கள் முந்திக் கொள்கிறீர்களா... அமைதியாக இருந்தீர்கள் என்றால், உங்கள் மகனை முழுமையாக திருத்தி, நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்...' என, சொல்.

* திருமணம் அல்லது வேறு விசேஷங்களுக்கு உன்னை கூப்பிட்டால், 'நான் வரவில்லை' என, கூறு. வற்புறுத்தி கூப்பிட்டால், 'உங்களுக்கு சமமாக ஆடை அணிந்து, நகை பூட்டி தான் வருவேன். விசேஷங்களில் பொது விருந்தினர் மத்தியில் என்னை மட்டம் தட்டி பேசினால், உங்கள் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றி விடுவேன்...' என மிரட்டு.

* படுக்கையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்து. என்னை, உங்கள் பெற்றோர் மட்டம் தட்டுவதை பாய்ந்து தடுக்க வேண்டும். போதை பொருள் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது. திருந்த மாட்டேன் என அடம் பிடித்தால், தனிக்குடித்தனம் போய் விடலாம். என் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் நம் தாம்பத்யம் நடக்கும். இல்லை என்றால், தனித்தனி படுக்கை தான்.

'நீங்கள் எதற்கும் ஒத்துவரவில்லை என்றால், இருவரும் குடும்ப நீதிமன்றம் சென்று, விவாகரத்து பெறுவோம். அதன்பின் அவரவர் வழி அவரவருக்கு. எனக்கு, 26 வயது தான் ஆகிறது. வேலைக்கு போய் விட்டேன் என்றால், மறுமணம் ஜாம் ஜாம் என்று செய்து கொள்வேன். ஏழைக்கேத்த எள்ளுருண்டை கிடைக்காமலா போய் விடும்...' என, எமோஷனல் பிளாக்மெயில் செய்.

உன்னுடைய போராட்டங்களால் விரும்பிய மாற்றம் வரவில்லை என்றால், உண்மையாகவே குடும்ப நல நீதிமன்றம் சென்று, விவாகரத்து பெறு. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பது அந்த காலம். அன்பும், மரியாதையும், அங்கீகாரமும் ஒரு வழி பாதை அல்ல. குட்ட குட்ட குனியாதே, நேர்மையாய் நிமிர்ந்து நில். திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாய் சலுகைகளும், சந்தோஷங்களும், உரிமைகளும் பகிரும் ஒப்பந்தம். இல்லை என்றால், இந்த திருமண தளையை அறுத்தெறிந்து சுதந்திர காற்றை சுவாசிப்போம்.

ஓடினால் துரத்துவர், சீறி திரும்பினால் தலைதெறிக்க பின்னோடுவர். போராடு, வெற்றி பெறு மகளே!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us