தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா -—

என், வயது, 30; பி.காம்., படித்துள்ளேன். சிறு வயதில் தந்தையையும், பள்ளி இறுதி படித்த போது, தாயையும் இழந்தேன். என் அத்தை வீட்டில் தான் வளர்ந்தேன்; அவர்கள் தான் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் கணவர் வயது, 35; டிப்ளமோ படித்துள்ளார். கல்லுாரி ஒன்றில், நிர்வாக பிரிவில் வேலை செய்கிறார். என் கணவருடன் பிறந்தவர்கள், ஒரு அக்கா மற்றும் தங்கை; இருவருமே நன்கு படித்தவர்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது; வசதியாக இருக்கின்றனர்.

குடும்பத்தில், முக்கிய முடிவு எடுப்பது எல்லாம் நாத்தனார்களும், மாமியாரும் தான்; அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. என் கணவர் ஏதாவது யோசனை கூறினால், 'உனக்கு ஒன்றும் தெரியாது...' என்று கூறி, அடக்கி விடுவர். என் மாமனார், சுய சம்பாத்தியமாக, வீடு, காலி மனை, ஊரில் நிலம் என்று வசதியாக இருந்தவர் தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

அவரது சம்பாத்தியத்தில், பெண்களுக்கு கொடுத்தது போக, மிதமுள்ள சொத்துகளை, என் கணவர் பெயரில் எழுதி வைத்துள்ளார். இது, என் நாத்தனார்களுக்கு பிடிக்கவில்லை; மாமியாருடன் சேர்ந்து, எங்களை பாடாய் படுத்தினர். எங்களுக்கு குழந்தை பிறந்தால், எங்கே சொத்து அனைத்தும் அக்குழந்தைக்கு போய்விடுமோ என்று பயந்து, எங்களை சேர்ந்து இருக்க விட மாட்டார்கள். இதனால், ஒரு கட்டத்தில், மன அழுத்த பாதிப்புக்கு ஆளானார், என் கணவர்.

இதையே சாக்காக வைத்து, என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். சில மாதங்களுக்கு பின், திருமண நிகழ்ச்சி ஒன்றில், என் கணவரை சந்திக்க நேர்ந்தது. இருவரும் மனம் விட்டு பேசியதில், நிலைமை சீராகி, ஒன்றாக வாழ தீர்மானித்து, தனிக்குடித்தனம் போனோம். தன் பங்கு சொத்தை கேட்க போனவரை, அவமானப்படுத்தி அனுப்பினர், அவரது சகோதரிகள்.

சொத்து போனால் போகட்டும்; கஷ்டப்பட்டு உழைத்து, அவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ்வோம் என்று முடிவு எடுத்துள்ளோம். அப்போதும், எங்களை நிம்மதியாக இருக்க விடாமல், எந்த வழியிலாவது தொல்லைக் கொடுத்து வருகின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி? நாங்கள் எந்த வழியில் சென்றால், வாழ்வில் முன்னுக்கு வர முடியும் என்று கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

ஆளரவமற்ற ஒரு தீவில், இரண்டு மனிதர்கள் ஒதுங்குகின்றனர் என வைத்துக் கொள்வோம்; அப்போது, என்ன நடக்கும்... ஒருவன், தன்னை தலைவனாக பாவித்து, இன்னொருவனை வேலைக்காரனாக நடத்துவான். சக ஜீவராசிகளை அடக்கி ஆள்வது, அதிகாரம் செலுத்துவது, உலகின் அனைத்து ஜீவராசிகளின் பிறவி குணம். இதில், ஆண் - பெண் என்று பிரித்து பார்க்க முடியாது. எத்தனை காலம் தான் பெண்கள், ஆண்களுக்கும், பிற உறவுகளுக்கும் அடங்கி நடப்பர். வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களும் சாட்டையை எடுத்து சொடுக்குகின்றனர்.

தகுந்த வாய்ப்பு கிடைக்கவே, உன் மாமியாரும், நாத்தனார்களும் உங்கள் இருவர் மீதும் சாட்டையை சுழற்றுகின்றனர். அவர்கள் சாட்டையை எடுக்க மறந்தால், நீயும், உன் கணவரும் எடுத்து விடுவீர்களோ என்கிற பயம் அவர்களுக்கு! அதிகார ஆசையும், சொத்து வெறியும் சேர்ந்து விட்டது; ருத்ர தாண்டவத்துக்கு கேட்க வேண்டுமோ!

சொத்து வேண்டாம் என்று முடிவெடுத்து, தனிக்குடித்தனம் சென்று விட்ட நீங்கள், அவர்கள் மூவரும் உங்களுக்கு என்னென்ன விதங்களில் தொல்லை கொடுப்பர் என்பதை யூகித்து, அவைகளை எதிர்கொள்ள, தகுந்த வியூகம் அமையுங்கள். உண்மையான வீரம் என்பது, பயத்தை காட்டாமல் இருப்பது தான்.

புகுந்த வீட்டினர் பற்றி உறவுக்காரர்கள் யாராவது புறம் பேசினால், காதில் வாங்காதே! அதேநேரம், புகுந்த வீட்டினர் பற்றி யாரிடமும் அவதுாறு பேசாதே. பொதுவாக, அவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புகளை தவிர்; விதிவிலக்காய் சந்தித்தால், உதட்டளவில் குசலம் விசாரி. அவர்களை பற்றி அதிகம் பேசி, உன் கணவரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்காதே. கோவில், சினிமா, சுற்றுலா என்று போய் வாருங்கள்.

நேரம் கிடைக்கும் போது, தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார். 'செலக்ட்டிவ் அம்னீஷியா' வந்தது போல, உன் மாமியாரும், நாத்தனார்களும் செய்த துரோகங்களை மற. 'இளிச்சவாயனாக இருந்து, சொத்துகளை பறிகொடுத்து நிற்கிறாயே...' என, கணவனை குத்திக் காட்டாதே... நிம்மதியும், சந்தோஷமும், பிற உறவுகள் தானமாய் கொடுத்து வரவேண்டியது அல்ல; அது, நம் ஆழ்மனதில் கொட்டிக் கிடப்பது, எதிர்பார்ப்பையும், சுய பச்சாதாபத்தையும் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சி கடலில் திளைக்கலாம்.

'நானும், கணவரும், நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கிறோம். அதை, யாராலும் சீர்குலைக்க முடியாது. மனித வாழ்வு மகத்தானது; நான், சந்தோஷமாயிருந்து, என் குடும்பத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்துவேன். யாரையும் எதிரியாக பாவிக்க மாட்டேன்; எல்லாம் இன்பமயம்...' என, உன் மனதை சுய வசியம் செய்.

சூரியனை கண்ட பனி போல், பிரச்னைகள் ஓடிப்போகும்.

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us