sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 06, 2019

Google News

PUBLISHED ON : ஜன 06, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரிக்கு,என் வயது: 50, கணவர் வயது: 54. காதல் திருமணம் செய்தவர்கள். எங்களுக்கு ஒரே மகள். வயது: 25. ஐ.டி., பணியில் உள்ளாள். நானும், என் கணவரும், என் மகளை, சக தோழியாகவே கருதி வளர்த்துள்ளோம். படிப்பு, வேலை, திருமணம் என, அனைத்தும் அவள் விருப்பப்படியே!தன்னுடைய, 23வது வயதில், 'இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்...' என்று ஒரு பையனை, எங்களிடம் அறிமுகப்படுத்தினாள். 'பி.இ., பட்டதாரியான அவர், நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். என் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார்...' என்றாள்.குடும்ப பின்புலம் பற்றி பையனிடம் கேட்டபோது, 'அம்மா இறந்து விட்டார்; அப்பா மட்டுமே! அம்மாவின் மறைவுக்கு பின், சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு குடியேறி விட்டதால், உறவினர் யாருடனும் தொடர்பில்லை...' என்று கூறினான்.'அவரது நண்பர்களிடமும், அப்பாவிடமும் ஒருமுறை விசாரித்து விட்டாயா...' என, மகளிடம் கேட்டேன். 'அப்பா இவருடன் தங்கி இருக்கவில்லை. ஆசிரமத்துக்கு சென்று விட்டார். நானும், அவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதால், அவரை பற்றி எனக்கு முழுவதுமாக தெரியும். அதனால், தனியாக விசாரிக்க வேண்டாம்...' என்று கூறிவிட்டாள்.மகளின் விருப்பத்துக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று, திருமணம் செய்து வைத்தோம்.சமீபத்தில், மகளின் திருமண சடங்கு விசேஷத்துக்கு, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார், என் உறவுக்கார பெண் ஒருவர். அப்போது, 'இவரா உங்க மாப்பிள்ளை... இந்த பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே... எங்க வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தாங்க. ஆனா, பெண்ணுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சுட்டாங்க... விவாகரத்து வழக்கு நடந்துட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன்...' என்று சொல்ல அதிர்ச்சியடைந்தேன்.மகளிடம் மிகுந்த தயக்கத்துடன் விஷயத்தை கூற, 'ஆமா... எனக்கும் இந்த விஷயம் தெரிஞ்சு தான் கல்யாணம் செய்துகிட்டேன்...' என்று, வெகு சாதாரணமாக சொல்லி விட்டாள்.சுக்குநுாறாக நொறுங்கி போனோம்.'விவாகரத்து ஆகாத நிலையில், மாப்பிள்ளை இன்னொரு திருமணம் செய்ததே தப்பு; நிறைய சட்ட சிக்கல் ஏற்படுமே...' என்று நாங்கள் தவிக்க, 'எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்...' என்று, அவன் மீதான காதலால் அமைதியாக இருக்கிறாள். அவள், தற்சமயம் கர்ப்பமாக இருக்கிறாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு, நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறோம்.— இப்படிக்கு,அவளின் தாய்.

அன்பு சகோதரிக்கு,நேரில் பார்க்காமலேயே, 'ஆன்லைனில்' சுடிதார்களும், செருப்புகளும், அழகு சாதன பொருட்களும் வாங்கி குவிக்கின்றனர், இன்றைய இளைய தலைமுறை பெண்கள். 'பிட்சா, பர்கர், கே.எப்.சி., சிக்கன்' போன்றவற்றை, 'ஆர்டர்' செய்து சாப்பிடும், நொடி நேர சந்தோஷம் போதும்; அவை, உடல் ஆரோக்கியத்தை கெடுக்குமே என்ற பயம் இல்லை.அதே, நுகர்வோர் கலாசாரத்தை தான், தங்களது திருமண வாழ்க்கைக்கும், அவர்கள் பின்பற்றுகின்றனர். 'உத்தரவாதத்துடன் கூடிய, 50 ஆண்டு திருமணம் தேவையில்லை. அலுவலகத்தில், கண்ணுக்கு அழகாக ஒருவன் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா, அவனது குடும்ப பின்னணி மர்மமாக இருக்கிறதா... அதனாலென்ன, அவனை பிடித்து போடு... பிரச்னை வந்தால், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்... இன்றைக்கு சந்தோஷ தாம்பத்யம் அனுபவிப்போம்...' என்கிறாள், உன் மகள்.'ஓரிரவு தாம்பத்யம்' எனப்படும், 'ஒன் நைட் ஸ்டாண்ட்'டுக்கு கூட, இன்றைய இளைய தலைமுறை, படித்த, கை நிறைய சம்பளம் வாங்கும், 60 சதவீத பெண்கள் தயார்.

சகோதரி...நீ, உன் மகளை நன்றாக தான் வளர்த்திருப்பாய்... அவளுக்கு தேவைப்படும் சுதந்திரத்தை கொடுத்திருப்பாய்... அவளது விருப்பு, வெறுப்புகளில் தலையிடாமல் இருந்திருப்பாய்... ஆனால், எல்லாம் கை மீறி போய்விட்ட பின், மகளுக்கு இதுபற்றி எவ்வித அறிவுரை கூறியும் பயனில்லை.இனி, நீ செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன்...* மருமகனுக்கும், அவனது முதல் மனைவிக்கும் இடையே நடக்கும் விவாகரத்து வழக்கு, எப்போதிருந்து நடக்கிறது... இரு தரப்பு வக்கீல்கள் யார்... எந்த ஊர், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. விவாகரத்து கேட்பதற்கான காரணமாக, மருமகனின் முதல் மனைவியும், மருமகனும் நீதிமன்றத்தில் என்ன கூறியுள்ளனர். பரஸ்பர சம்மதத்துடன் கூடிய விவாக ரத்தா என, அனைத்து தகவல்களையும், தகுந்த வழக்கறிஞரை வைத்து சேகரி* விவாகரத்து பெறுவதில், முழு மனதுடன் உன் மருமகனின் முதல் மனைவி இருக்கிறாள் என்பதை உறுதி செய்த பின், அவளுடன் சமாதானம் பேசு. 'உன் மருமகன் ஒரு சாடிஸ்ட்...' என, முதல் மனைவி கூறினாலும், அந்த, 'சாடிஸ்ட்'டுடன் சாத்தியப்படும் காலம் வரை, உன் மகள் வாழட்டும்* விவாகரத்து வழக்கை, எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடித்து, மகள், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன், விவாகரத்து ஆணையை பெற பார்* மகளுக்கு, முதலில் நடந்த திருமணம் செல்லாது. விவாகரத்துக்கு பின், மகளுக்கும், மருமகனுக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்து, திருமணத்தை முறைப்படி பதிவு செய்* உன் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்த, பக்கத்து வீட்டு குழந்தையின் கிலுகிலுப்பையை பிடுங்கி கொடுத்து விட்டோம். அந்த கிலுகிலுப்பை, உன் குழந்தையின் கையிலேயே இருந்தால், பரம சந்தோஷம். மூன்றாவது கைக்கு கிலுகிலுப்பை போகாமல் பார்த்துக் கொள்* 'செகண்ட் - ஹேண்ட் பொருளை, உனக்கே உனக்கு என்று வாங்கி கொடுத்து விட்டோம். இனியாவது, திருமண பந்தத்தின் உன்னதத்தை உணர்ந்து, கணவனை, கண்காணிப்பு, 'கஸ்டடி'யில் வை. அடுத்தடுத்து, உன் கணவன், திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடாமல், அவனை, சாம, தான, பேத, தண்ட முறைகளில் வசப்படுத்து...' என, கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த அறிவுரையை, உன் மகளுக்கு ஓது. நல்லதே நடக்க, இறைவனை பிரார்த்திக்கிறேன்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us