தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 24 வயது பெண். எனக்கு ஒரு தம்பி. பள்ளி இறுதி ஆண்டு படித்து வருகிறான். அப்பா, தனியார் நிறுவன எழுத்தர்; அம்மா, இல்லத்தரசி. கடன் வாங்கி, என்னை, நர்சிங் படிக்க வைத்தார், அப்பா.

தற்சமயம், மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறேன். வீட்டின் பொருளாதாரம் ஓரளவு முன்னேற ஆரம்பித்துள்ளது.

எனக்கு திருமணம் செய்ய விரும்பினர், பெற்றோர். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்தேன். அதாவது, என் சம்பளத்தை மூன்றாக பிரித்து, ஒரு பகுதி, பெற்றோருக்கும், இரண்டாவது பகுதி, தம்பி படிப்புக்கும், மூன்றாவது பகுதியை, கணவர் வீட்டிற்கும் கொடுக்க சம்மதிக்கும் மாப்பிள்ளையாக பார்க்க சொன்னேன்.

என் கோரிக்கையை கேட்ட பெற்றோர், முதலில் எதிர்ப்பு காட்டினர். நான் பேசி, சமாதானப்படுத்தினேன்.

என்னை பெண் பார்க்க வந்த மூன்று வரன்களிடமும், என் கோரிக்கையை வைத்தேன்; பின்வாங்கி விட்டனர்.

'இப்படியே போனால், வயதாகி விடும், பிறகு திருமணம் நடப்பது சிரமம்...' என்று கூறினர்; இருந்தும், அடுத்த பெண் பார்க்கும் படலத்துக்கு ஏற்பாடு செய்ய, தடை போட்டேன்.

'தம்பி படித்து முடித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறி விட்டேன்.

ஆண் பிள்ளைகள், குடும்ப பாரத்தை சுமப்பது போல், எனக்காக கஷ்டப்பட்ட பெற்றோருக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கிறது... திருமணத்தின் மீதே வெறுப்பு ஏற்படுகிறது.

நான் என்ன செய்யட்டும், அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

இப்போதெல்லாம் திருமணம் செய்யும் பெரும்பாலான ஆண்கள், வேலை பார்க்கும் பெண்களை தான் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். இரண்டு சம்பளம் வந்தால் தான், குடும்பத்தை பொருளாதார சிக்கல் இல்லாமல் ஓட்ட முடியும் என, திருமணம் செய்யும் இருவருமே நம்புகின்றனர்.

வேலை பார்க்கும் பெண்கள் என்றால், சம வயதினராய், பார்க்க சுமாராய் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயார் என்கின்றனர், பெரும்பாலான ஆண்கள். திருமணத்திற்கு பின், மனைவியின் சம்பளம் பைசா குறையாமல் தனக்கு சேர வேண்டும் என்றும் விரும்புகின்றனர், சில ஆண்கள்.

திருமணம் செய்யப்போகும் ஆணிடம், நிபந்தனைகளை விதிப்பது, கதைக்கு உதவாத செயல். பெண் கேட்டு வரும் ஆண்கள், உன் நிபந்தனையை கேட்டு தலைதெறிக்க ஓடி விடுவர்.

உன் குடும்பம் ஒன்றும் வறுமையில் வாடவில்லை. தவிர, உன் பிறந்த வீடு, ஏழெட்டு குடும்ப அங்கத்தினர்கள் உள்ள பெரிய குடும்பம் அல்ல. நீ இல்லாமல், உன் குடும்பத்தில் மூன்றே அங்கத்தினர்கள்.

தாயார், அதிக மருத்துவ செலவுகள் ஆகும் நோயாளி இல்லை. தந்தை, வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கவில்லை. குறைந்தபட்சம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கிறார்.

வேலை வாய்ப்பு அதிகம் உள்ள ஏதாவது ஒரு படிப்பில், உன் தம்பி சேர்தல் போதுமானது. அதற்கு, கல்வி கட்டணம், ஆண்டிற்கு, 30 ஆயிரம் ரூபாய் தாண்டாது. கடன் வாங்கி, உன்னை, நர்சிங் படிக்க வைத்ததாக குறிப்பிட்டிருந்தாய். கல்வி கடன் என்றால், ஒரு லட்ச ரூபாயை தாண்டாது.

உனக்கு, இப்போது, 24 வயது ஆகிறது. மூன்று ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடு. இப்போது, 20 - 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவாய். மாத செலவிற்கு, 5,000 ரூபாய் எடுத்துக் கொள். மீதி, 15 - 20 ஆயிரம் ரூபாயை, 36 மாதங்களுக்கு கணக்கிடு. ஐந்து அல்லது ஏழு லட்சம் ரூபாய் வரும்.

இந்த பணத்தை வைத்து, உன் படிப்பு செலவுக்கான கடனை அடை. தம்பியின் கல்வி செலவை ஈடுகட்டு. மொத்தத்தில், குறைந்தபட்சம், ஐந்து லட்ச ரூபாயை, உன்னை படிக்க வைத்த குடும்பத்துக்கு நன்றி கடனாக கொடு.

குடும்ப நலனுக்கு, மூன்று ஆண்டு சம்பளத்தை கொடுக்கிறேன் என்பதை, ஒரு உழைப்பாளி அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார். 'வருங்கால கணவனுக்கு, நீ நிபந்தனையும் விதிக்க வேண்டாம். உன் திருமணத்தை, 27 வயது வரை தள்ளியும் போட வேண்டாம்...' என்பார், உன் தந்தை.

உன் சம்பளத்தை நேரடியாக தந்தையிடம் தராமல், நீயே கடனை அடைக்கலாம். தம்பியின் பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து, அவனுக்கான கல்வி செலவை அதில் சேமிக்கலாம்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் திருமணம் செய்து கொள். கணவன் மனம் கோணாமல் குடும்பம் நடத்து. பிறகு, அவனே உன் குடும்பத்திற்கு உதவியாக இருப்பான்.

கடிதத்தை பார்த்ததும், உன் மீது, எனக்கு ஒரு மரியாதை வந்தது. உன் அன்பும், பாசமும், பொறுப்புணர்ச்சியும் குடும்பத்திற்கான சொத்து. உன் பெற்றோர், புண்ணியம் செய்தவர்கள். இக்கால பெண்களுக்கு, நீ ஒரு நல்ல, 'ரோல் மாடல்!'

உன் நல்ல எண்ணத்திற்கு, நல்ல குணவான், கணவனாய் அமைவான். திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us