தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 25 வயது பெண். பட்டப் படிப்பு படித்துள்ளேன். பெற்றோருக்கு, நான், அக்கா என, இருவர் மட்டுமே.

சிறு வயதிலிருந்தே, அக்கா, வேண்டாம் என்று சொல்வதை, நான் எடுத்துக் கொள்வேன். பேனா முதல் ஆடை வரை, அவள் வேண்டாமென்று சொல்வது, என் உடைமையாகி விடும்.

எனக்கென்று எந்த விருப்பமோ, பிடிவாதமோ இல்லாதது தான், என் குணம்.

என்னை விட அழகாக, நிறமாக இருப்பாள், அக்கா. அவள், கல்லுாரி படிப்பை முடிக்கும் முன்னரே, ஏகப்பட்ட வரன்கள் வந்தன. ஆனால், 'படிப்பை முடித்து, வேலைக்கு போன பின்னரே, திருமணம் செய்து கொள்வேன்...' என்று, உறுதியாக கூறினாள்.

அவள் விருப்பப்படி, வேலைக்கு சேர்ந்த ஒரு ஆண்டுக்கு பின், 15 ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்த, அத்தை குடும்பத்திலிருந்து, அக்காவை பெண் கேட்டு வந்தனர். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, அக்கா.

திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கு முதல் நாள், தான் காதலித்த பையனுடன் ஓடி விட்டாள். இந்நிலையில், என்னை மணப்பெண் ஆக்கினார், அப்பா.

இரு வீட்டினரின் மானத்தை காப்பாற்ற, திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், என் கணவரோ, திருமணத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை, என்னிடம் கூறி, தீர்த்துக் கொள்கிறார்.

'குடும்ப மானத்தை காப்பாற்ற, நீ தியாகம் செய்யலாம்; நான் ஏன் செய்யணும்... உன் அக்கா, என்னை நிராகரித்ததால், எவ்வளவு அவமானம் தெரியுமா... நீ மட்டும் யோக்கியமானவளா... என்னை விட்டு, எப்போ நீ ஓடப் போறாயோ...' என்று, வார்த்தையால் சுட்டுப் பொசுக்குகிறார்.

இரவில், அறையில் பூட்டி வைத்து, 'நான் இப்போது செத்துட்டா, நீ அழுவியா...' என்று, 'சைக்கோ' போல் நடந்து கொள்கிறார்.

என் பெற்றோரிடம் கூறினால், விவாகரத்து செய்து விடலாம் என்கின்றனர். அத்தையோ, 'அவமானத்தால், அப்படி நடந்துக்கிறான். அவன், ரொம்ப நல்லவன். நான் சொல்லி புரிய வைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமா மாறுவான். நம் இரண்டு குடும்பமும், இப்போதான் சேர்ந்திருக்கு, மறுபடியும் பிரிய வேண்டாம்...' என்று அழுகிறார்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறேன். எனக்கு நல்ல வழியை காட்டுங்கள், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

உன் பெற்றோருக்கு இரு துருவங்களாய், இரு மகள்கள். ஒருத்தி, சூப்பர் மூஞ்சி மீனா. இன்னொருத்தி, சுமார் மூஞ்சி குமாரி. உன் அக்கா, உணர்வுகளை வெளியே காட்டாத, படுபயங்கர சுயநலக்காரி. நீயோ, கிடைத்ததில் திருப்தியடையும், சராசரிப் பெண்.

அக்கா காதலித்ததில் தவறேதுமில்லை. ஆனால், தன் காதலை முறைப்படி பெற்றோரிடம் வெளிப்படுத்தி, அந்த காதலனையே மணந்து கொள்வேன் என, ஒற்றைக்காலில் அவள் நின்றிருக்க வேண்டும். 15 ஆண்டு பகையை முறித்து விட்டு வரும் அத்தைக்கு, தீரா அவமானத்தை திட்டமிட்டு பரிசளித்திருக்கிறாள், உன் அக்கா.

அக்காவின் துர்நடத்தையால், உன் குடும்பத்தையும், அத்தை குடும்பத்தையும் ஒரு சேர தண்டித்திருக்கிறாள். அவளின் உள் நோக்கம் மிருகத்தனமானது.

'காதலனுடன் ஓடி விட்டாள், அக்கா. நான் எதற்கு அவளுக்கென நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை மணந்து கொள்ள வேண்டும்...' என, எதிர்கேள்வி கேட்காமல், திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட உன் தியாக குணத்தை, கணவர் பாராட்ட வேண்டும்.

'வாழ வழிவகை இன்றி ஓடி விட்டாள், அக்காள். தங்கையுடன் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறேன்...' என, உன் கணவர் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

'நல்லவேளை திருமணத்திற்கு முன் ஓடி விட்டாள். என்னை மணந்து, திருமணத்திற்கு பின் கள்ள உறவை தொடராமல் போனது, என் நல்லநேரம்...' என, உன் கணவர், தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டும்.

'அன்பு கணவரே... என் அக்காள் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடவும், அத்தை குடும்பத்தின், 15 ஆண்டு பகைமையை முடித்து வைக்கவும், இரு குடும்ப கண்ணியத்தை காக்கவும், உங்களை திருமணம் செய்து கொண்டேன். அதை, தியாகமாக கருதவில்லை.

'பெற்றோரின் விருப்பப்படி, இருவரும் மணந்து கொண்டோம். உங்களுடன் வாழ, அக்காவிற்கு கொடுத்து வைக்கவில்லை. நம் ஒற்றுமையை, தாம்பத்யம் மூலம் உலகிற்கு எடுத்து காட்டுவோம்.

'திருமணத்திற்கு முன், நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போதும், நீங்கள் தான் எனக்கு எல்லாம் என்கிற எண்ணம் கொண்டவள். நான் ஒருநாளும் உங்களை விட்டு போக மாட்டேன்; புலம்பாதீர்கள்.

'இறைவன், ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவை திறந்து வைப்பான். அந்த இன்னொரு கதவு தான், நான். உங்களின் எதிர்மறையான நடத்தையால், இன்னொரு கதவையும் மூடி விடாதீர்.

'மனைவி இறந்தால், கணவன் அழுவான். கணவன் இறந்தால், மனைவி அழுவாள்-. இது, சுயம் சார்ந்த விஷயம் தானே... நீங்களும் இறக்க வேண்டாம், நானும் இறக்க வேண்டாம். இருவரும், 'குடுகுடு' கிழவன் - கிழவி ஆகும் வரை வாழ்வோம்...' -எனக் கூறு.

கணவரை, ஒரு நல்ல மனநலமருந்துவரிடம் அழைத்து சென்று, 'கவுன்சிலிங்' கொடு. சிறப்பான தாம்பத்யத்தை அளித்து, உன் பக்கம் முழுமையாக இழு. நளபாக சமையல் செய்து, அசத்து. அவரை அழைத்து, கோவில், சினிமா என, சென்று வா.

ஓடிப்போன அக்கா பற்றிய எந்த செய்தியும், கணவரின் காதுகளுக்கு எட்டாமல் பார்த்துக் கொள். அத்தையும், உன் கணவருக்கு தகுந்த அறிவுரைகள் கூறட்டும்.

ஒரு ஆண்டு அவகாசத்தில், உன் கணவர் மாறாவிட்டால், முறைப்படி விவாகரத்து பெற முயற்சி.

எல்லாம் நல்லதே நடக்கும் செல்லமே.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us