PUBLISHED ON : செப் 22, 2019

செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்
வனிதா பதிப்பக வெளியீடான, சிவபாரதி எழுதிய, 'விடுதலை வேங்கை' என்ற நுாலிலிருந்து: ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சட்ட மறுப்பு இயக்கம், 1921ல், காந்திஜியால் துவக்கப்பட்டது. ஆங்கிலேய அரசுடன் ஒத்துழைக்கலாகாது என்பதே, அதன் கருத்து.
போராட்டம் தீவிரமானது. உத்தரபிரதேச மாநிலம், சவுரி சவுரா வீதிகளில், ஊர்வலம் நடைபெற்றது.
கடும் கோபத்தில், பலரை சுட்டுக் கொன்றனர், போலீசார்; மக்கள் தெறித்து ஓடினர். ஆனால், ஒரு கட்டத்தில், அப்படியே திரும்பி, போலீசாரை துரத்த, காவல் நிலையத்திற்குள் சென்று, கதவை தாழிட்டுக் கொண்டனர்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள், காவல் நிலையத்தை தீக்கிரையாக்கினர். இதில், எஸ்.ஐ., ஒருவர் உட்பட, 21 போலீசார் இறந்தனர். இதனால், நாடு முழுதும் பெரும் கலவரம் வெடிக்கும் என பயந்த, காந்திஜி, சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை, 'வாபஸ்' பெற்றார்.
நேரு, சித்தரஞ்சன்தாஸ் உள்ளிட்டோர் இதை ஏற்கவில்லை.
'காந்திஜி, தனிச்சையாக, எப்படி முடிவு எடுக்கலாம்...' என, குறை கூறினர்.
இதன் விளைவு, புரட்சி எண்ணம் கொண்டோர், காந்திஜியின் அமைதிப் போக்கை வெறுத்தனர்.
'ஆங்கிலேயரை ஒழிக்க, அகிம்சை வழி போதாது. மாறாக, புரட்சி வழியில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான் முடியும்...' என்று, பகத்சிங் போன்றோர் முடிவு செய்தனர்.
லாகூரில், 'நவ ஜவான் பாரத் சபா' என்ற, புரட்சி அமைப்பு துவக்கப்பட்டது.
அக்., 30, 1928ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, ஆங்கிலேய அதிகாரி, சைமனுக்கு எதிராக, லாலா லஜபதிராய் தலைமையில், கண்டன மற்றும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, லாலா லஜபதிராயை தாக்கி, கீழே தள்ளி, காலால், தலையிலும், மார்பிலும் மிதித்தனர், ஆங்கிலேய அதிகாரிகள்.
இந்த அடாவடி காரியத்தில் ஈடுபட்டவன், சாண்டர்ஸ் என்ற போலீஸ்காரன்.
சில தினங்களில், லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.
இது, புரட்சியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நெருங்கிய நண்பர்களான சுகதேவ் மற்றும் ராஜகுரு உதவியுடன், லாலா லஜபதிராயை கொன்ற, சாண்டர்சை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.
அதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி தவறி சுட்டான், ராஜகுரு.
பைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்றபோது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங்.
'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.
இதைக் கேட்டு, பகத்சிங்கின் தந்தை, கிஷன்சிங் துடித்தார். பகத்சிங்கிற்காக வாதாட, அவரே முன் வந்தார்.
அதாவது, 'சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, பகத்சிங் ஊரிலேயே இல்லை...' என்று, தன் வாதத்தை நிலைநாட்ட மனு கொடுத்தார், கிஷன்சிங்.
இதை கேள்விப்பட்ட, பகத்சிங், தந்தைக்கு கடிதம் எழுதினான். அதில், 'ஒரு தந்தை என்ற முறையில், என் மீது கொண்ட பாசத்தில், நீங்கள், எதை எதையோ செய்கிறீர்கள். தங்களின் இந்த செயல், என் மன அமைதியை குலைத்து விட்டது. என்னை தற்காத்துக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை...
'காரணம், என் புரட்சி இயக்கத்தின் கொள்கை அத்தகையது. நான், அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுவதோ... அன்று, நான் ஊரிலேயே இல்லை என்று கூறுவதோ... என்னை பொறுத்தவரை கோழைத்தனமான செயல்...
'என்னை போன்று, கொடிய தண்டனைக்கு ஆட்பட்டு, இன்னும் பல தோழர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நிலையோ, அதே தான் எனக்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே தீர வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு...
'சிறந்த லட்சியத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பற்று தான், ஒரு நாட்டின் வீரமிகு இளைஞர்களை, துாக்கு மேடை ஏற செய்கிறது. லட்சியத்திற்காக, என் வாழ்வை தியாகம் செய்யப் போகிறேன் என்பதை தவிர, எனக்கு ஆறுதல் ஏதேனும் உண்டா...' என்று, வருத்தமாக எழுதி முடித்தான், பகத்சிங்.
ஆங்கிலேய அரசு, மார்ச், 31, 1931ல், பகத்சிங்கை துாக்கிலிட்டது.
நடுத்தெரு நாராயணன்
