தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ராம நாமத்தின் மகிமை!

ராம நாமத்தின் மகிமை!

ராம நாமத்தின் மகிமை!


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வ நாமங்களை மந்திரமாக உருவேற்றுவது, ஓர் அரிய செயல். அதை விவரிக்கும் கதை இது...

வீராசாமி என்பவர், முக்கிய பணி காரணமாக, வீட்டை விட்டு புறப்பட்டார். தான் நாடிப் போகும் பணி, நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையோடு சென்று கொண்டிருந்தவரின் காதில், யாரோ சொன்ன, 'ராமா' என்ற திருநாமம் கேட்டது.

மனம், ராம நாமத்தில் பதிய, சென்ற காரியம், சுலபமாக முடிந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை, வீராசாமிக்கு.

எனவே, படுக்கையை விட்டு எழுந்தவுடன், தான் சந்திக்கும் முதல் நபரை, ராம நாமம் சொல்லச் சொல்லி, அதன் பின், தன் வேலைகளை கவனிக்க துவங்கினார். இவ்வாறே பல நாட்கள் சென்றன.

ஒருநாள், வீராசாமியின் கண்ணில், கோபாலன் என்பவர் அகப்பட்டார். அவனை, ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்தினார், வீராசாமி.

கோபாலனோ மறுத்தார்; வீராசாமி விடவில்லை.

'ராம நாமா சொன்னாலொழிய, உன்னை விடமாட்டேன்...' என்று, கோபாலனின் ஆடையை பிடித்தார்.

விபரமறிந்து, ஊர் மக்கள் கூடினர்.

'அவர், சொல்லா விட்டால் என்ன... நாங்கள் சொல்கிறோம்...' என, எல்லாரும், 'ராமா' என்று கூவினர்.

'என் வழக்கப்படி, நான் முதலில் பார்த்தது, கோபாலனை தான். ஆகையால், இவன் தான் சொல்ல வேண்டும்...' என்றார், வீராசாமி.

கோபாலனோ, 'ஒருக்காலும் நான் சொல்ல மாட்டேன்...' என, மறுத்தார்.

பிரச்னை, அரசரிடம் போனது.

இரு தரப்பின் விபரமறிந்த அரசர், 'ஏன் மறுக்கிறாய், கோபாலா... ஒருமுறை, ராம நாமத்தை சொல்லேன்...' என்றார்.

'அரசே... எனக்கு, மனைவி, மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு என்னை விட்டால், ஆதரவில்லை... அப்படியிருக்க, நான் எப்படி சொல்வேன்...' என்றார், கோபாலன்.

சபையில் இருந்த அனைவரும், 'பெருமை நிறைந்த, ராம நாமத்தை சொல்ல, இப்படி பயப்படுகிறாயே...' என, சிரித்தனர்.

'சீக்கிரம் சொல்... உன்னை விட மாட்டேன்...' என, வற்புறுத்தினார், அரசர்.

'சரி, அரசே... என் மனைவி, மக்களின் வாழ்வுக்கு வழி செய்தால், சொல்கிறேன்...' என்றார், கோபாலன்.

அதை ஏற்ற அரசர், கோபாலனின் குடும்பத்திற்கு, நிலங்கள் எழுதி வைத்து, செல்வமும் வழங்கினார்.

அப்போதும் வீராசாமியிடம், 'சொல்லித்தான் ஆக வேண்டுமா...' என கேட்டார், கோபாலன்.

'ஆம்...' என்றார், வீராசாமி.

கைகளை தலைக்கு மேல் குவித்து, கண்களில் வழிந்த கண்ணீர் உடம்பை நனைக்க, கண்களை மூடியபடியே, 'ராமா...' என்றார்.

அதே வினாடியில், கோபாலனின் கபாலம் பிளக்க, அதிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு, ஆகாயத்தை நோக்கி சென்றது; அவர் உடல், தரையில் சாய்ந்தது.

ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்திய, வீராசாமி மற்றும் அரசர் உட்பட அனைவரும், கோபாலனின் துாய்மையான, ஆழமான ராம பக்தியை கண்டு, கண்ணீர் சிந்தினர்.

தெய்வ நாமத்தை, நாடி நரம்பெல்லாம் ஊடுருவும்படியாக உருவேற்றிய மகான்கள் பலர், அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.

தெய்வ நாமத்தை சொல்வோம், உருவேற்றுவோம். முடியாவிட்டால், தெய்வ நாமங்களை சொல்லும் நல்லவர்களை இகழாமல் இருப்போம்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us