PUBLISHED ON : மார் 22, 2020

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 28 வயது பெண். பட்டப் படிப்பு படித்துள்ளேன். பணியில் இல்லை. பெற்றோர் இல்லை. ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான். அவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், எனக்கு திருமணம் ஆனது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்; அன்பான கணவர். குழந்தை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில், இறந்து விட்டார், கணவர்.
திக்கு தெரியாமல் பரிதவித்த எனக்கு, ஆதரவாக இருந்தார், அண்ணன். அவர் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நான் அங்கிருப்பது, அண்ணிக்கு பிடிக்கவில்லை.
ஏதாவது வேலை தேடி, இங்கிருந்து சென்று விட நினைத்தேன். இந்நிலையில், கணவரின் நண்பர், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். கணவர் வேலை பார்த்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், என் நிலைமை அறிந்து, என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
'ஜாதி, மதம், சடங்கு சம்பிரதாயம் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்; ஆனால், மிகவும் நல்லவர்...' என்று, என் அண்ணன், அவரை பற்றி விசாரித்ததாக கூறினார்.
அண்ணனும், இத்திருமணத்திற்கு சம்மதித்தார். பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக, சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது.
கணவர் விருப்பப்படி, தாலி, மெட்டி, நெற்றியில் குங்குமம் எதுவும் அணியவில்லை. இது, எனக்கு கஷ்டமாக இருந்தாலும், அவருக்காக விட்டுக் கொடுத்தேன்.
என் உறவினர் வீட்டு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தை, என்னிடம் கூறினார், அண்ணன். திருமணத்திற்கு எங்களை அழைக்கவில்லை.
விசாரித்தபோது, 'தாலி, மெட்டி போன்ற எந்த மங்களகரமான பொருளையும் அணியாத திருமணமான பெண், எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வந்து நின்றால், பார்ப்பவர்கள் எங்களை மதிக்க மாட்டார்கள். இதனால், மகளின் வாழ்க்கையும் அல்லவா பாழாகும்...' என்றனர்.
மன வேதனையில், கணவரிடம் கூறி அழுதேன்.
'திருமணத்திற்கு அழைக்காதவர்களை பற்றி பேசி, என் நேரத்தை வீணடிக்காதே...' என்று, கூறி விட்டார்.
அப்போது, அந்த விஷயத்தை மறந்து விட்டேன். அதன்பின், அண்ணன் மகளுக்கு சடங்கு நடக்கும்போது, 'பொட்டு, தாலி, மெட்டி அணிந்து, லட்சணமாக வருவதாக இருந்தால், வா... இல்லாவிட்டால் வராதே...' என்று கண்டிப்பாக கூறி விட்டார், அண்ணி.
சம்பிரதாயங்களை விலக்கி, உறவினர்களுக்கு மத்தியில் கேவலமாக நிற்பது, அவமானமாக உள்ளது. இருப்பினும், கணவர் மனம் கோணாமல் நல்ல மனைவியாக வாழவும் விரும்புகிறேன்.
இருதலைக் கெள்ளி எறும்பு போல தவிக்கும் எனக்கு, நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கணவர், கடவுள் மறுப்பு கொள்கையாளர் என, கருதுகிறேன். இந்த உலகில், 17 சதவீதத்தினர் நாத்திகர்கள்; அவர்களில் பெரும்பாலானோர், உல்லாச மனோபாவம் கொண்டவர்கள். பாவம், புண்ணியம், சொர்க்கம் மற்றும் நரகத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், தவறுகளை துணிந்து செய்வர்.
நாத்திகர்களில் பலர், திருமண பந்தம் மீறிய உறவுகளில் விரும்பி ஈடுபடுவர். சிலர், ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் இடையே ஊசலாடுவர். 50 வயதுக்கு மேற்பட்ட நாத்திகர்களில், 90 சதவீதம் பேர், ஆத்திகத்துக்கு தாவி விடுவர்.
ஏராளமான நாத்திகர்கள், தங்களின் மனைவி, மகள், மகன் மற்றும் உறவினர்கள் ஆத்திகத்தில் ஈடுபட்டால், தடுப்பதில்லை. மனைவி, சாமி கும்பிட்டால், சாமி கும்பிடாத தனக்கும் இறையருள் கிடைத்து விடுகிறதே என்கிற ரகசிய சந்தோஷம் இவர்களுக்கு.
நாத்திகவாதம் பேசினாலும், உன் கணவர், நேர்மையாகவம், யோக்கியமாகவும் கொள்கை பிடிப்பு உள்ளவராகவும் வாழ்கிறார் என்பது மகிழ்ச்சி.
கணவரிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
'ஈகோ' இல்லாத அன்பும், காதலும், அங்கீகரிப்பும் தானே.
வீட்டில் நல்ல கணவராக விளங்கும் ஒருவர், பொது வாழ்வில் தனித்துவம் காட்டினால் என்ன தப்பு?
தலையணை மந்திரம் கேள்விப்பட்டிருக்கிறாயா, இல்லையா... எப்பேர்பட்ட முரடனையும், பெட்டி பாம்பாக்கும் குறளி வித்தை.
மெதுவாக உன் கணவரிடம் பேசு. 'நீங்க, ஜாதி, மதம், சடங்கு சம்பிரதாயம், கடவுள் எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பது பற்றி, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தாராளமாக இருந்துவிட்டு போங்கள். உங்களிடம் பிறரின் மத சுதந்திரத்தில் குறுக்கிடக் கூடாது என்கிற கொள்கை இல்லையா...
'ஒரு பகுத்தறிவாளர், தன் மனைவியை ஒருக்காலும் அடிமைப்படுத்த மாட்டார். நான் விரும்புகிற கடவுளை கும்பிட அனுமதியுங்கள். இல்லையென்றால், கடவுள் இல்லை என்பதற்கான தர்க்க நியாயங்களை என்னிடம் வாதித்து, என்னையும் கடவுள் மறுப்பு கொள்கையாளராக மாற்றுங்கள்.
'நான் வீட்டுக்குள் இருக்கும்போது, கடவுள் மறுப்பு கொள்கையாளரின் மனைவியாக இருக்கிறேன். வெளியில், கடவுள் நம்பிக்கையாளராக வாழ விடுங்கள். என் உறவினர் வீட்டு மங்கள காரியங்களுக்கு நீங்கள் வராவிட்டால் பரவாயில்லை. நான் கலந்து கொள்கிறேன்.
'உறவினர் வீட்டு விசேஷங்களில் நான் கலந்து கொள்ளும்போது, தாலி, மெட்டி போன்ற விஷயங்களை போட்டுக் கொள்ள அனுமதியுங்கள். வீட்டுக்கு வந்ததும், கழற்றி வைத்து விடுகிறேன். இதனால், உங்களின் கொள்கைக்கு எந்த பங்கமும் வராது. பதிலாக, மனைவிக்கு முழு சுதந்திரம் வழங்கி இருக்கும் உங்கள் பரந்த மனப்பான்மையை, மக்கள் பாராட்டுவர்.
'தாலி, மெட்டியை, மத அடையாளமாக ஏன் கருதுகிறீர்கள்... கம்மல், வளையல், ஜிமிக்கி போன்ற ஆபரணங்களாக பாவியுங்கள். கணவரை இழந்த என்னை பெரும் காதலோடு ஏற்றுக்கொண்டீர்கள். என்னுடைய இந்த சிறிய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா...
'நான், உங்களின் சுயமரியாதை கொள்கையை மதிக்கிறேன். அதேசமயம், ஆன்மிகத்தையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் நேசிக்கிறேன்...' என, கெஞ்சலாய் கூறு.
முதல் நாள் ஒத்துக்கொள்ள மாட்டார். மறுநாள், அதற்கடுத்த நாள், தொடர்ந்து மூளை சலவையில் ஈடுபடு. பகீரத பிரயத்தனம் செய்தும், கணவர் அசைந்து கொடுக்கவில்லை என்றால், துவண்டு விடாதே.
'நான், கடவுள் மறுப்பாளரின் மனைவி. தாலி, மெட்டி, குங்குமம் இல்லாமல் தான், உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வருவேன். நீங்கள் தடுக்கா விட்டால், உங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வேன். தடுத்தால், வராமல் ஒதுங்கிக் கொள்வேன்...' என, ஆணித்தரமாக உறவுகளிடம் கூறு.
உலகத்தை ஒரு தட்டிலும், கணவரை இன்னொரு தட்டிலும் வைத்து நிறுத்து பார். கணவர் இருக்கும் தட்டே கனக்கும்.
கணவருடன் இனிமையாக தாம்பத்யம் மேற்கொள். உங்களுக்கு ஒரு மகனோ, மகளோ பிறந்த பின் கூட, கணவர் மனம் மாற வாய்ப்பிருக்கிறது. மகளின் திருமணத்தில், 90 சதவீத நாத்திகர்கள், சடங்கு, சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு தாவி விடுகின்றனர். நாத்திகம் எனும் கொடிய நோயை, பூரணமாக குணமாக்குவது, வயோதிகம்; அதுவரை காத்திரு மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்
