PUBLISHED ON : மார் 22, 2020

'அஜினோ மோட்டோ' என்பது, ஜப்பான் நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனம், எம்.எஸ்.ஜி., என்று அழைக்கப்படும், 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற சுவையூட்டியை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. 'அஜினோ மோட்டோ' என்ற வார்த்தைக்கு, ஜப்பானிய மொழியில், 'சுவையின் சாரம்' என்று பொருள்.
தாய்லாந்தில் உள்ள அஜினோ மோட்டோ ஆலையில், மரவள்ளிக்கிழங்கு மாவை, இரண்டு நாட்கள் நொதிக்க வைக்கின்றனர். நொதித்தல் வழியே கிடைக்கும் திரவம், 'குளுட்டோமிக் அமிலம்' என்று அழைக்கப்படுகிறது.
பிறகு, குளிர்விப்பானை பயன்படுத்தி, 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற திடப் பொருளாக மாற்றுகின்றனர். பிறகு அதை, வெப்பம் மற்றும் குளிர் காற்று வழியே, உலர வைத்து, பொடியாக தயாரிக்கின்றனர். இந்த சுவையூட்டியை, சிறிய மற்றும் பெரிய பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
'இது, சைவ உணவுப்பொருளாகும்.
எம்.எஸ்.ஜி., இந்தியாவில், 'அஜினோ மோட்டோ' என்றே அழைக்கப்படுகிறது. 2003ல் அறிமுகம் செய்யப்பட்டது.
'இதை பயன்படுத்தினால், எந்த பக்க விளைவும் ஏற்படாது. ஏனெனில், இது உடலுக்கு தேவையான புரத சத்துக்களை தரும், குளுட்டோமைட்...' என, அஜினோ மோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர், அட்சுமிஹூ மற்றும் அதன் சந்தையாக்கல் மேலாளர், கோவிந்த பிஸ்வார் ஆகியோர் தெரிவித்தனர்.
இங்குள்ள ஆலையில், தினமும், 200 டன், எம்.எஸ்.ஜி., சுவையூட்டி தயாரிக்கப்படுகிறதாம். ஆலையை சுற்றிப் பார்த்து, பாங்காக் திரும்பினோம்.
அங்குள்ள காய்கறி மார்க்கெட் சென்றோம். மிகவும் சுத்தமாக இருந்தது. நம் ஊர் காய்கறிகள், தாராளமாக கிடைத்தன. மாமிசக் கடைகளில், தவளை, பாம்பு போன்றவை, விற்பனைக்கு உள்ளன. ரசாயன முட்டையும் விற்கப்படுகிறது.
தெருவோரக் கடைகளில், மாமிச உணவுகளை, குச்சிகளில் குத்தி வைத்திருந்தனர்.
மார்க்கெட்டை சுற்றி பார்த்ததும், 'இரவு, உல்லாச கப்பலுக்கு செல்லலாம்...' என, வழிகாட்டி கூறினார். பாங்காக் நகரின் மையப் பகுதியில், 'சாவோ பிரையா' என்ற நதி பாய்கிறது.
இந்த நதியில், பல்வேறு வகையான உல்லாச கப்பல்கள் உள்ளன. டிக்கெட் வாங்கிச் சென்றால், படகில் ஏற அனுமதிப்பர். மின் விளக்குகள் அலங்காரத்துடன் படகு புறப்படும். முதல் தளம், இரண்டாம் தளம் என, படகை பொறுத்து, பல தளங்கள் உள்ளன.
படகில், சைவ, அசைவ உணவு வகைகள், தனித்தனியே வைக்கப்பட்டிருக்கும். நாம் விரும்பிய உணவை எடுத்து சாப்பிடலாம். மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். விருப்பப்பட்டவர்கள் வாங்கி அருந்தலாம். இசை கச்சேரியும் உண்டு.
நாங்கள் படகில் ஏறியதும், கச்சேரி களை கட்டியது. ஹிந்தி மற்றும் தமிழ் டப்பாங்குத்து பாடல்களை, பாடகர்கள் பாடினர். காதை பிளந்தது, இசை. அனைவரும் மகிழ்ச்சியில், தங்களை மறந்து ஆடினர்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, கரையில் இறக்கி விட்டனர். அப்போது, வட மாநிலத்திலிருந்து வந்திருந்த சிலர், 'பாரத் மாதா கீ ஜே' எனக் கோஷமிட, இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அனைவரும், ஜாதி, மத, மொழி வேறுபாடுகளை மறந்து, 'பாரத் மாதா கீ ஜே' என, விண்ணதிர பதில் கோஷமிட்டனர்.
அனைவரிடமும் உற்சாக துள்ளல். அவற்றை ரசித்தபடியே, ஓட்டலுக்கு திரும்பினோம்.
மறுநாள் காலை, ஓட்டல் அறையை காலி செய்து, உடமைகளுடன் காரில், 'சபாரி வேர்ல்டு மற்றும் மரைன் பார்க்' சென்றோம். வழியில், 'கோல்டன் புத்தா' என்று அழைக்கப்படும், தங்க புத்தர் கோவிலுக்கு சென்றோம்.
இது, சிறிய கோவில் தான். ஆனால், அதன் வடிவமைப்பு, அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
உள்ளே, தங்கத்தில் உருவாக்கப்பட்ட, புத்தர் சிலை நம்மை வரவேற்கிறது. இதன் உயரம், 3 மீட்டர்; 5.5 டன் எடை கொண்டது. ஒன்பது பாகங்களாக வடிவமைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தியானத்தில் அமர்ந்தபடி, புன்முறுவலுடன் உள்ள புத்தர் சிலை, அழகோ அழகு!
கோவில் வளாகத்தில், மிகப்பெரிய மணி தொங்கவிடப்பட்டுள்ளது. அதை சுற்றி சிறிய மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அங்கு வருவோர், தாங்கள் வேண்டியது நிறைவேற, அந்த மணிகளை தட்டி விட்டு செல்கின்றனர். இவரை, 'லக்கி புத்தர்' என்றும் அழைக்கின்றனர்.
தங்க புத்தர் தரிசனத்தை முடித்து, பாங்காக்கிலிருந்து, ஒன்றரை மணி நேர பயண துாரத்தில் அமைந்துள்ள, 'சபாரி வேல்டு அண்ட் மரைன் பார்க்' சென்றோம். இது, 480 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அங்கு, சிங்கம், புலி, கரடி, ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம், காண்டா மிருகம், வரிக்குதிரை, பல்வேறு வகையான மான்கள் மற்றும் காட்டெருமைகள் என, கூட்டம் கூட்டமாக, சுதந்திரமாக திரிகின்றன. வாகனத்தில் சென்று, அவற்றை கண்டு ரசிக்கலாம்.
ஆங்காங்கே சிறிய நீர் நிலைகள் உள்ளன. அவற்றில், பலவகை பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ளன. காட்டுக்குள் பயணம் சென்ற அனுபவம் கிடைத்தது.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், 'எலிபன்ட் ஷோ, டால்பின் ஷோ, ஹாலிவுட் ஷோ, குரங்குகள் குத்து சண்டை' என, பொழுதுபோக்கு காட்சிகள் ஏராளமாக உள்ளன.
'டால்பின் ஷோ' காண வேண்டிய காட்சி. பயிற்சியாளர்களின் அசைவுக்கேற்ப, டால்பின்கள் பாய்ந்தோடி வருகின்றன. 'டைவ்' அடிப்பது, முத்தம் கொடுப்பது, பந்து விளையாடுவது என, சாகசங்கள் செய்து, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அதேபோல், 'ஹாலிவுட் ஷோ' நிகழ்ச்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் படக்காட்சிகளை, நிஜத்தில் நிகழ்த்தி காண்பிக்கின்றனர். ஆர்வமாக முன் வரிசையில் அமர்ந்தவர்கள், ஏன் அங்கு அமர்ந்தோம் என, நிகழ்ச்சி முடியும்போது வேதனைப்பட்டனர்.
தண்ணீரில் வேகமாக படகை ஓட்டி வந்த கலைஞர்கள், படகை திருப்பியபோது, பீறிட்டு வெளியேறிய தண்ணீர், முன் வரிசையில் அமர்ந்து இருந்தோரை, முழுமையாக நனைய வைத்தது.
குத்து சண்டை காட்சியில், மனித குரங்குகள் செய்யும் சேட்டைகள், நம்மை சிரிக்க வைக்கின்றன. இங்கு, புலிக்குட்டி, சிங்கக்குட்டி, மனித குரங்கு போன்றவற்றுடன், புகைப்படம் எடுக்க விரும்புவோர், எடுத்துக் கொள்ளலாம். அதற்கு, 800 பாட், நம் இந்திய பணத்தில், கிட்டத்தட்ட, 2,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
நேரமாகி விட்டதால், பல பகுதிகளை பார்வையிடாமலேயே, மாலை, அங்கிருந்து நேரே விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றோம். வழக்கமான சோதனைகள் முடிந்து, இரவு, சென்னை திரும்பினோம்.
இன்னும், அடுத்தடுத்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
- முற்றும் -
ம. அறம்வளர்த்த நாதன்
