தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு —

அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்; வயது, 62; திருமணம் ஆகி, 15 ஆண்டுகள் ஆகியும், குழந்தை பிறக்காததால், மனைவியின் அக்காள் மகனை வளர்த்து வந்தோம்.

குழந்தையிலிருந்து மாமனார் வீட்டில் வளர்ந்து வந்தான். 15 வயது முதல், எங்கள் வீட்டிலிருந்து பட்ட மேற்படிப்பு முடித்து, பணிக்கு சென்று வந்தான்.

அவன் முடிவு படியே செயல்படுவான்; நியாயமாக இருப்பான்; ஒழுக்கமானவன். எங்களை விட, நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களிடம் மிக அன்பாக இருப்பான். அவனுடைய, 32வது வயதில், என் மனைவியின் அக்காள் மற்றும் அவரது கணவரை முன்னிலைப்படுத்தியே திருமணம் செய்து வைத்தோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட, மிக நல்ல குடும்பத்தை சேர்ந்த மருமகள் அமைந்தாள். நாங்கள் விரும்பியபடியே திருமணம் முடிந்த முதல் ஆண்டிலேயே, மிக அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். வீட்டிற்கு மகாலட்சுமி வந்ததை நினைத்து மிகவும் பூரித்து போனோம்.

எங்களிடம் மிக அன்பாக இருந்தாள், மருமகள். சொந்த மகளாக இருந்தால் கூட, இவ்வளவு பாசம் கொண்டிருக்க மாட்டாள்.

குடும்பத்தில் எந்த குறையும் இல்லை. வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கும், குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம், கடவுளுக்கு நன்றி கூறுவேன்.

'என் ஓய்வு காலத்தில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில், நல்ல மனதை கொடு...' என, ஆண்டவனை வேண்டி வந்தேன். முடிந்த வரை, பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி வருகிறேன்.

இந்நிலையில், ஒருநாள் மாலை வேளை, என் மருமகள், பேத்தியுடன் விளையாட, வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு சாலையின் இடது ஓரமாக நடைபாதையில் நடந்து சென்றாள். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த கார், இவர்கள் மீது மோதியது.

இருவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில், மருமகளுக்கு பலமான அடிபட்டு, நினைவு திரும்பாமலே மூளைச் சாவு ஏற்பட்டது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கி, ஒன்பது பேருக்கு வாழ்வளித்து, சென்று விட்டாள்.

குழந்தை, உயிர் பிழைத்து, தற்போது குணமடைந்து வருகிறாள். எங்களது வாழ்க்கையே முடிந்து விட்டது. அதிலும், மருமகளின் தாய், தந்தையருக்கு இவர் ஒரே மகள்.

நாங்கள் இன்று நிற்கதியாய் நிற்கிறோம். வாழ்க்கையில் இதுபோல் ஒரு புண்ணியவதியை, நிச்சயம் இனிமேல் பார்க்க முடியாது.

ஆண்டவன் என்னை நீண்ட காலம் ஏங்க வைத்து, பணி ஓய்வுக்கு பின், இரண்டரை ஆண்டுகள் மட்டும் அனைத்து சந்தோஷங்களையும் வாரி வழங்கி, இன்று, வாழ்க்கையே சூன்யமாகி விட்டாரே என, வருந்துகிறேன். இனி, இருக்கும் மீதி காலத்தை, நானும், என் மகனும் நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள், சகோதரி.

— இப்படிக்கு,

அன்பு சகோதரன்


அன்பு சகோதரருக்கு —

மகிழ்ச்சிகளின் முதுகுகளில் துன்பங்களும், துன்பங்களின் முதுகுகளில் மகிழ்ச்சிகளும் மாறிமாறி சவாரி செய்யும்.

மாமனார் - மாமியாருக்கு நல்ல மருமகளாய் இருந்தாள்; கட்டிய கணவனுக்கு சொற்பநாள் தாம்பத்ய சுகத்தை தந்தாள்; பெற்ற மகளுக்கு, நல்ல தாயாக இருந்து, தாய்மையை சொரிந்தாள்; மரணத்திலும் ஒன்பது பேருக்கு உறுப்பு தானம் செய்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினாள். அவள் ஒரு துருவ நட்சத்திரம்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை. இருக்கும் நாம், மீதி ஆயுளை அர்த்தப்பூர்வமாய் கழிக்க வேண்டியது தான்.

இனி, நீங்கள் செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* பேத்தியின் மீது அன்பை எல்லாம் கொட்டி வளருங்கள். தாயின் இழப்பை, குழந்தை உணராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

* மருமகளின் உறுப்புகளை தானம் பெற்றோர், மகிழ்ச்சிகரமாய் வாழ்க்கை நடத்துவதை கண்ணார கண்டு மகிழுங்கள். அந்த ஒன்பது பேர் உயிர் வாழ்வது, உங்கள் மருமகள், ஒன்பது அவதாரம் எடுத்ததற்கு சமம்

* மனைவியின் இழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது, உங்கள் மகன் தான். அவனுக்கு தேவைப்படும் ஆறுதல்களையும் தேறுதல்களையும் கூறுங்கள். கூடிய மட்டும் அவன் தனிமையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடனடியாக மறுமணம் செய்து கொள்வதை, அவன் விரும்ப மாட்டான்

காலம் தான் துக்கங்களுக்கு சிறந்த மருந்து. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பொறுங்கள். ஒரு தேவதைக்கு மாற்றாக, இன்னொரு தேவதை கிடைப்பது அபூர்வம். உங்களுக்கு நல்ல மருமகளாக இல்லாவிட்டாலும், மகனுக்கு நல்ல மனைவியாகவும், பேத்திக்கு நல்ல தாயாகவும் இருக்கக்கூடிய பெண்ணை தேடுங்கள்

உறவில் கிடைத்தாலும் சரி, அயலில் கிடைத்தாலும் சரி. இறந்து போன உங்கள் மருமகளிடம் மானசீகமாக அனுமதி பெற்று, மகனுக்கு மறுமணம் செய்யுங்கள்

* மன அமைதிக்கு ஒட்டுமொத்த குடும்ப அங்கத்தினர்களுடன், குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். மீண்டும் நல்ல மருமகள் கிடைக்கவும், கிடைக்கும் மருமகள் தீர்க்காயுசாய் வாழவும் வேண்டுங்கள்

* அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று வாருங்கள். அவர்களின் ஒரு நாள் உணவை ஏற்றுக் கொள்ளுங்கள்

* உறவினர்கள், நண்பர்கள் யாரிடமாவது பகைமை பாராட்டி, உங்களுடன் பேசாமல் இருந்தால், நீங்களே தன்னிச்சையாக போய் நட்பு பாராட்டுங்கள்

* தத்து கொடுத்த உங்கள் மனைவியின் அக்காவுக்கு, எதாவது மனக்குறை இருந்தால், தீர்த்து வையுங்கள்

* மருமகளின் அகால மரணத்தை காரணமாக வைத்து வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை மட்டுமே பார்க்கும் அவநம்பிக்கைவாதியாக இராதீர். இறந்து போன மருமகள், தேவதையாக நின்று, குடும்பத்துக்கு வரும் அனைத்து இன்னல்களையும் போக்குவாள் என, நம்பும் நம்பிக்கைவாதியாக மாறுங்கள்

* ஆண்டுக்கு, 10 ஏழை சுமங்கலிகளுக்கு, பொருளுதவி செய்யுங்கள்

* மருமகள் பெயரால் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் அறக்கட்டளை ஆரம்பியுங்கள்.

— என்றென்றும் அன்புடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us