தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'கொரோனா'வால் குடியை விட்டேன்!

'கொரோனா'வால் குடியை விட்டேன்!

'கொரோனா'வால் குடியை விட்டேன்!


PUBLISHED ON : ஜூன் 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில், வேன் டிரைவராக இருப்பவர், அங்குராஜ். தீவிர, 'தினமலர்' வாசகர்.

கடந்த சில தினங்களுக்கு முன், 'தினமலர்' இதழில் வெளியான, 'ஆடுவோமோ தண்ணி போடுவோமோ' என்ற, 'டாஸ்மாக்' கடை திறப்பதற்கு எதிரான கட்டுரையை படித்த பின், என்னிடம் பேசினார்...

'ஊரடங்கு காலத்தில், 'டாஸ்மாக்' கடையை மூடியதால், நிறைய பேர் திருந்தியுள்ளனர். அவர்களில், என் சக டிரைவர், லோகநாதனும் ஒருவர். எப்போதும், யாரிடமாவது கடன் வாங்கி, மது அருந்துவார்.

'ஆனால், இந்த இரண்டு மாதமாக, குடிக்காமல் இருப்பது மட்டுமல்ல, குடும்பத்திற்கு செலவுக்கு கொடுத்தது போக, தன் கையில், 25 ஆயிரம் ரூபாய் மிச்சம் வைத்துள்ளார். இது, ஒரு உலக அதிசயம், அவரிடம் பேசுங்கள்...' என்றார்.

லோகநாதனுடன் பேசியதில் கிடைத்த தகவல்கள்:

நான், கோவை அருகில் உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவன். வயது, 51; அதிகம் படிக்காதவன்; சிறு வயதில் இருந்தே, வாடகை வேன் டிரைவராக பணிபுரிகிறேன். தற்போது, பொள்ளாச்சியில், மனைவி, இரண்டு மகன்களுடன் வசிக்கிறேன்.

கடந்த, 20 ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்தது. அதுவும், 10 ஆண்டுகளாக அளவு கடந்து போனது. கடையை திறந்ததும், ஒரு குவார்ட்டர் வாங்கி குடித்த பிறகு தான், இயல்பு நிலையே வரும். அதன் பிறகு, மதியம், மாலை, இரவு என்று, நாலைந்து குவார்ட்டர் ஓடி விடும்.

வேன் ஒட்டி சம்பாதித்த பணம் முழுவதும், குடிக்கே சரியாகப் போய்விடும். பல நேரம் வீட்டில் சண்டை போட்டு, பணம் பிடுங்கி போய் குடித்திருக்கிறேன். கடன் வாங்கி குடிப்பேன். குடித்துவிட்டு சரியாக சாப்பிடவும் மாட்டேன்.

'இப்படி கெட்டுப்போய் விட்டோமே...' என, நினைத்து, திருந்துவதற்காக, மூலிகை சாப்பிட்டேன். அதுவும் சரிப்பட்டு வரவில்லை; குடி தொடர்ந்தது.

இந்த சூழ்நிலையில் தான், 'கொரோனா' காரணமாக, 'டாஸ்மாக்' அடைக்கப்பட்டது. ஆரம்பத்தில், சில நாள் கஷ்டமாக இருந்தது. பிறகு, வேலையில் கவனம் செலுத்தினேன்.

ஒருநாள், 'அண்ணாச்சி... சரக்கு வேணுமா, 115 ரூபாய் சரக்கு, 250 ரூபாய்...' என்றான், ஒருவன்.

'சரி...' என்று கொடுத்தேன்.

அவன், திரும்ப வந்து, '300 ரூபாய் கொடுத்தால் தான் கிடைக்குமாம்...' என்றான்.

பணத்தை திரும்ப வாங்கி, வீட்டில் கொடுத்தேன். மனைவி முகத்தில் அப்படியொரு சந்தோஷம். பிரமாதமாய் சமைத்து போட்டாள். வாழ்க்கையில் பசி எடுத்து, ருசித்து சாப்பிட்டதும் அன்று தான்.

அதன்பின், குடிப்பதில்லை என்று, முடிவு செய்தேன்.

வண்டி ஓட்டி சம்பாதித்து, வீட்டிற்கு கொடுத்தது போக, இப்போது என் கையில், 25 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன். இவ்வளவு பணம் என்னிடம் இருப்பது, இது தான் முதல் முறை.

துாக்கம் நன்றாக வருகிறது; நன்றாக பசி எடுக்கிறது. மனைவியின் அளவிட முடியாத அன்பை உணருகிறேன். பெரிய மகன், சந்தோஷத்துடன், அடிக்கடி என்னுடன் பேசுகிறான்.

'சொந்த வேன் வாங்கித் தருகிறேன்...' என்று சொல்லி இருக்கிறான், சின்ன மகன்.

ஒரு பைசா கடன் கிடையாது. சுற்றி இருப்பவர்கள் மிக மரியாதை கொடுக்கின்றனர்.

இது அத்தனையும் நடந்ததற்கு ஒரே காரணம், குடியை விட்டது தான். இப்போது, குடியை விட்டதால் விளைந்த இத்தனை நன்மைகளையும், நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, திருத்தி வருகிறேன்.

லோகநாதனிடம், 78100 56582 என்ற எண்ணில் பேசலாம்.

எம். ராகவேந்தர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us