
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், தென் தமிழகத்தில் உள்ள ஒரு சிற்றுாரில் பிறந்து வளர்ந்தவள். என் பெற்றோருக்கு, நான் ஒரே பெண். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்பது, என் லட்சியம்.
பெற்றோருக்கும், என்னை வெளிநாடு அனுப்புவதில் விருப்பம் தான்; ஆனால், பணம் தான் பிரச்னை. ஆனாலும், என் லட்சியத்தில், நான் பிடிவாதமாக இருந்தேன்.
ஒரு வழியாக, என் முடிவுக்கு ஒப்புக்கொண்ட பெற்றோர், வங்கியிலும், தெரிந்தவர்களிடமும் நிறைய கடன் வாங்கி, மேற்படிப்புக்காக, வெளிநாடு அனுப்பி வைத்தனர்.
புதிய உலகில் காலடி எடுத்து வைத்தேன். புதிய சூழ்நிலை, நண்பர்கள், புதிய கலாசாரம் என, அனைத்தையும் ரசித்தேன். இவைகளெல்லாம் ஆறு மாதங்கள் தான்.
அதன்பின், இங்குள்ள சாப்பாட்டு முறை, விடுதி மற்றும் மற்ற செலவுகளுக்காக, பகுதி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம். வார இறுதியில், நண்பர்கள் கொடுக்கும், 'பார்ட்டி'யில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் என, என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தது.
பெற்றோரை பிரிந்த ஏக்கம், பாடங்கள் பற்றிய பயம், பகுதி நேர வேலையின் காரணமாக ஏற்பட்ட சோர்வு, 'பார்ட்டி' என, சமாளிக்க முடியாமல் திணறுகிறேன்.
சொந்த ஊருக்கே திரும்பி விட எண்ணுகிறேன். ஆனால், எனக்காக, அப்பா வாங்கிய கடனை திருப்பி கட்ட வேண்டும் என்ற வைராக்கியமும் உள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல், மன அழுத்தம் அதிகமாகிறது.
எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கடிதத்தில், என்ன மேற்படிப்பு மற்றும் எந்த வெளிநாடு சென்றாய் என்பதை, நீ குறிப்பிடவில்லை.
ஒருவர், 40 கி.மீ., துாரத்தில் இருக்கும் தீவை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார். 20 கி.மீ., நீந்தியதும், மேற்கொண்டு நீந்தாமல் அப்படியே நிற்கிறார். தொடர்ந்து தீவை நோக்கி நீந்தாமல் புறப்பட்ட இடத்துக்கு போக ஆசைப்படுகிறார்.
மீண்டும், 20 கி.மீ., நீந்தி புறப்பட்ட இடத்துக்கு திரும்பாமல் அதே துாரத்தை நீந்தி, தீவுக்கு போய் விடுவது புத்திசாலித்தனம் அல்லவா.
வெளிநாட்டுக்கு கல்வி கற்க போகும் முன், கீழ்க்கண்ட விஷயங்களை அலசி ஆராய வேண்டும்.
* அந்த நாட்டின் கல்விமுறை, அரசியல் சூழல்
* உணவு பழக்கம்
* ஆண் - பெண் உறவு முறைகள்
* இந்திய பணத்துக்கும், அந்த நாட்டின் பணத்துக்குமான ஒப்பீடு
* தாய் நாட்டுக்கும், அந்த நாட்டுக்குமான துாரம்
* ஒட்டுமொத்த படிப்புக்கு ஆகும் செலவு, அதை சமாளிக்கும் விதம்
* பெண்கள் பாதுகாப்பு.
ஒரு செயலை செய்வதற்கு முன், தீர ஆலோசிக்க வேண்டும். செய்த பிறகு குழம்புவது இன்னலை தரும்.
சொந்த ஊருக்கு நீ திரும்புவதால் செய்த செலவுகளும், படித்த ஆண்டுகளும் வீண் தான்.
தீர்க்கமான முடிவு எடுக்க தெரியாதவள் என, நட்பு வட்டத்தாலும், உறவு வட்டத்தாலும் பரிகசிக்கப்படுவாய். பரமபத அட்டையில், பாம்பு கடிபட்டு விளையாட ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி விடுவாய்.
கீழ்க்கண்ட விதங்களில் நீ செயல்பட்டால், உன் வெளிநாட்டு படிப்பை முடித்து, வெற்றிகரமாக ஊர் திரும்பலாம்...
* இந்திய மாணவியர் தங்குமிடத்தில் சேர்ந்து தங்கு. நீங்களே சமையல் செய்து சாப்பிட்டு, செலவை பகிர்ந்து கொள்ளலாம்
* மாதம் ஒருமுறை, ஒரு குழுவாக சேர்ந்து, அந்த நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றி பார்
* ஆராய்ச்சியாளருக்கோ, ஆசிரியருக்கோ உதவியாளராக பணிபுரிந்து ஊதியம் பெறு
* 'பார்ட்டி'யில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என, யாராவது உன்னை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனரா, 'பார்ட்டி'க்கு போகாதே. அறையில் இருந்து படி அல்லது எதாவது படங்களை பார்
* மாதம் ஒருமுறை, நீ படிக்கும் நாட்டின் சிறந்த, விலை குறைந்த உணவை ரசித்து ருசித்து உண்
* தினம், 'வாட்ஸ் - ஆப், வீடியோகால்' மூலம், பெற்றோருடன் பேசி, பிரிவு துயர் களை
* சவுகரியங்களையும், சந்தோஷங்களையும் குறைத்து, ஒருமித்த மனதுடன் படி. சுயபச்சாதாபப் படாதே
* ஒழுக்கமான பெண் தோழியருடன் நட்பு பாராட்டு
* ஆண் நண்பர்களை தவிர்
* உன் கைபேசியிலேயே, பொழுதுபோக்காய் மிகச்சிறந்த புகைப்படங்களை எடுத்து, ரசித்து பார்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.