
ஜூலை 27, அப்துல் கலாம் நினைவு தினம்
கண்ணப்பன் பதிப்பகம், விருதை ராஜா எழுதிய, 'ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்' நுாலிலிருந்து: மும்பையில் உள்ள, நேரு அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன், எஸ்.எல்.வி., திட்ட அனுபவங்கள் குறித்து பேச சென்றார், கலாம்.
அச்சமயம், கலாமிடம் தொலைபேசியில், 'பிரதமர் இந்திரா, தங்களை அழைத்துள்ளார். உடனே, தாங்கள் டில்லிக்கு வரவும்...' என, கூறினார், திட்ட தலைவரும் பேராசிரியருமான, தவான்.
தகவலறிந்த கலாம், இந்திராவின் அழைப்பை ஏற்று, டில்லி சென்றார். பார்லிமென்டில், பேரவை உறுப்பினர்களான, ராஜ்ய சபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் கூடியிருந்தனர்.
எஸ்.எல்.வி., - 3 ஏவுகணை பயண திட்ட வெற்றி குறித்து, கலாமிற்கு, புகழாரம் சூட்டினார், பிரதமர் இந்திரா.
இந்திய விஞ்ஞானிகள் அனைவரும் பாராட்டி பேசினர். கலாமை பேசும்படி அழைத்தார், இந்திரா.
அவரின் அன்பு கட்டளையை ஏற்று பேச ஆரம்பித்தார், கலாம்...
'மேதகு பாரத பிரதமர் அவர்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, பாரதத்தை மேம்படுத்தும் தங்களோடு பேசுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு, ராக்கெட், செயற்கைகோள், எஸ்.எல்.வி., - 3 போன்ற விண்வெளி திட்டங்களில் இணைந்து, வெற்றிகரமாக செயல்பட முடியும்.
'அதன் வழியாக, நம் நாட்டின் அறிவியல் ஆற்றலை உலகுக்கு நிரூபிக்க, இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...' என்றார்
சுருங்கக் கூறி விளங்க வைத்த அவரது பேச்சு, அனைவரையும் கவர்ந்தது.
பசுமைக்குமார் எழுதிய, 'அறிவொளியூட்டும் அப்துல் கலாம்' நுாலிலிருந்து: டில்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் (உற்பத்தி விமானம்) இயக்குனரகத்திலிருந்து ஒரு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது.
இதில் கலந்துகொண்ட, அப்துல் கலாமுக்கு, வெற்றி கிட்டவில்லை.
குழம்பிய, கலாம், ரிஷிகேஷம் சென்றார். அங்கு, கங்கையில் நீராடி, சற்று உயரமான இடத்திலிருந்த, சிவானந்தர் ஆசிரமத்திற்கு சென்றார்.
சுவாமி சிவானந்தரை சந்தித்து, அறிமுகம் செய்து, வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை, நிராசையாகி விட்டதையும், இந்திய விமானப் படையில் சேர முடியாமல் போனதையும் கூறினார், கலாம்.
அதற்கு, சுவாமி சிவானந்தர் கொடுத்த அறிவுரை இது தான்...
'வாழ்க்கையின் போக்கிலேயே போ... விமானப் படை விமானியாக வரவேண்டும் என்பது, உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்கு, விதிக்கப்பட்டது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அது, இப்போது வெளிப்படாமல் இருக்கலாம்.
'இந்த தோல்வியை மறந்து விடு; உனக்கு விதிக்கப்பட்டுள்ள இடத்தை சென்றடைய இது வழி காட்டும். உன் இருப்புக்கான உண்மையான தேடலை துவங்கு. உன்னுடைய காலத்தோடு சேர்ந்து விடு...'
இந்த அறிவுரை, அவருக்கு, தெளிவை தந்தது. அத்துடன், வாழ்நாள் முழுவதும் மனதில் நிலைத்து விட்டது.
கடந்த, 1968ல், தன்னை வந்து சந்திக்கும்படி, அப்துல் கலாமை அழைத்திருந்தார், இந்தியாவின் அணுசக்தி தந்தை என, கருதப்படும், விக்ரம் சாராபாய்.
இந்த சந்திப்புக்கு குறிப்பிடப்பட்டிருந்த நேரம், அதிகாலை, 3:30 மணி.
இதற்காக, டில்லி, ஓட்டல் அசோகாவுக்கு, இரண்டு மணி நேரம் முன்பே சென்று விட்ட, அப்துல் கலாம், ஒரு சோபாவில் அமர்ந்தார். அங்கு, யாரோ விட்டுச் சென்ற ஒரு புத்தகத்தை எடுத்து ஆர்வமாக புரட்டினார்.
நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அந்த வாசகம், அவரை கவர்ந்தது.
'நல்லவர்கள் எல்லாரும் உலகத்துக்கு ஏற்றபடி, தங்களை மாற்றிக் கொள்கின்றனர். முரண்பாடுகள் கொண்ட சிலர் மாத்திரம், தங்களுக்கு ஏற்றபடி, உலகை மாற்றியமைக்க தொடர்ந்து பாடுபடுகின்றனர். இந்த முரண்பாடு கொண்ட நபர்களால் தான், உலகின் எல்லா முன்னேற்றங்களும் சார்ந்திருக்கின்றன. மேலும், அவை, அவர்களின் புதிய கண்ணோட்டத்தையும் நம்பி உள்ளன...' இந்த வாசகம், அப்துல் கலாம் எண்ணத்தில், புதிய கண்ணோட்டத்தையே உருவாக்கி விட்டது.
நடுத்தெரு நாராயணன்