
கேட்டதை உடனே கொடுக்க வேண்டும்; இல்லா விட்டால் கோபம் வரும். நடைமுறை வழக்கம் இது. ஆனால், தெய்வமோ, தெய்வ அருள் பெற்ற மகான்களோ, எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து கொடுப்பர்.
வடமதுரையில், வாசவதத்தை எனும் நடன மாது இருந்தாள்; நாட்டியத்தில் சிறந்தவளாக விளங்கிய அவள், அழகிலும் ஈடு இணை இல்லாதவளாக இருந்தாள்.
ஒருநாள், அவள் மாடியிலிருந்து பார்த்த வேளையில், அழகு, -இளமை, காந்தக் கண்கள் -உருண்டு திரண்டு, முழங்கால் வரை நீண்டு தொங்கிய கைகள் ஆகியவற்றோடு, புத்த துறவி ஒருவர், வீதியில் வருவதைக் கண்டாள்.
வாசவதத்தைக்கு, இருப்பு கொள்ளவில்லை. உடனே, கீழே இறங்கி, தன் வீட்டு வாசலில் தயாராக நின்றாள். சரியாக அந்த நேரத்தில் அவள் வீட்டை நெருங்கிய துறவி, தன் கையில் இருந்த பிட்சா பாத்திரத்தை, வாசவ தத்தையின் முன் நீட்டினார்.
'சுவாமி... வீட்டின் உள்ளே வாருங்கள். இந்த மாளிகை மற்றும் என் சொத்துக்கள் அனைத்தும், உங்கள் உடைமை; உள்ளே வாருங்கள்...' என, பணிவோடும், வற்புறுத்தலோடும் அழைத்தாள்.
நீட்டிய பிட்சா பாத்திரத்தை பின்னால் இழுத்துக் கொண்டார், துறவி.
'அம்மா... இன்னொரு சமயம் வருகிறேன்...' என்றபடியே நகர முயன்றார்.
சற்று வழியை மறித்தாற்போல நின்ற, வாசவதத்தை, 'எப்போது சுவாமி வருவீர்கள்...' என, கேட்டாள்.
'வர வேண்டிய காலத்தில் வருவேன்...' என்றபடியே, விலகிப் போய் விட்டார், துறவி.
ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள், துறவி, யமுனா நதிக்குச் செல்லும் வழியில், படுத்துக் கிடந்தாள், வாசவதத்தை.
அழகையெல்லாம் இழந்து, அழுக்கான ஆடை அணிந்திருந்த, அவள் உடலில் இருந்த புண்களில் இருந்து ரத்தம் வழிய, துர்நாற்றம் வீசியது. ஒருவர் கூட, உதவி செய்ய முன்வரவில்லை; மாறாக மூக்கைப் பிடித்து, விலகிச் சென்றனர்.
அழகின் காரணமாக, தீய நடத்தையில் ஈடுபட்டிருந்த, வாசவதத்தை, அழகும், இளமையும் அதிவிரைவாக விலகிச் செல்ல, நோய்கள் அவளை ஆக்கிரமித்தன.
ஆதரிப்பாரின்றி அநாதையாக தெருவில் கிடந்த அவளைப் பார்த்தார், துறவி. அவளை நெருங்கி, காயங்களை மென்மையாக துடைக்கத் துவங்கினார்.
மெய் சிலிர்த்த வாசவதத்தை, 'சுவாமி... தாங்கள் யார்...' என, கேட்டாள்.
'அம்மா... நான் தானம்மா பிட்சு உபகுப்தன். முன்பொரு சமயம், வரவேண்டிய காலத்தில் வருவேன் என்று சொன்னேனே... அதன்படி, இப்போது வந்து விட்டேன்...' என்ற துறவி, அவளுக்கு, அற உபதேசம் செய்தார்.
வாசவதத்தையின் துயரை, துறவி தீர்த்ததைப் போல, நம்மிடம் இப்போது பரவியிருக்கும் கொடிய நோய் துயரத்தில் இருந்து காக்குமாறு, தெய்வத்திடம் வேண்டுவோம்; தெய்வம் காப்பாற்றும்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
ஸ்வஸ்திக், ஸ்ரீசக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை, வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது, சட்டை பையில் வைத்துக் கொள்ளலாம்.