PUBLISHED ON : ஆக 30, 2020

அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 36, கணவர் வயது: 40. எங்களுக்கு ஒரே மகன். பிளஸ் 1 செல்லவிருக்கிறான். என்னுடைய பெற்றோர், சொந்த கிராமத்தில் உள்ளனர். நான் ஒரே மகள். கணவருக்கு பெற்றோர் இல்லை. ஒரு அண்ணன் மட்டும். அவரும், வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
கணவர், சொந்த தொழில் செய்கிறார். இளம் பட்டப்படிப்பு படித்துள்ள நான், வேலைக்கு செல்லவில்லை. அமைதியாக, நிம்மதியாக சென்ற வாழ்க்கை, திடீரென்று தடம் புரண்டது.
பள்ளி விடுமுறையின்போது, மகன் ஆசைப்பட்டானே என்று, 'பைக்' வாங்கிக் கொடுத்தேன். அப்போதே, வேண்டாமென்று கூறினார், கணவர். மகனது ஆசையை நிறைவேற்ற, நான் தான் போராடி, பணம் பெற்று, வாங்கிக் கொடுத்தேன்.
தன் நண்பனுடன், புது, 'பைக்'கில் சென்றவன், எதிர்பாரா விதமாக, குறுக்கே ஓடி வந்த சிறுமி மீது மோதி விட்டான்.
அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனாள், சிறுமி. மகனுக்கும் பலமான அடி. நண்பன், ஓரளவு அடிபடாமல் தப்பித்துக் கொண்டான்.
போலீஸ் கேஸ் ஆகி, என் மகன், மைனர் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து விட்டனர். கேஸ் இன்னும் முடிந்தபாடில்லை.
என்னுடன் பேசுவதையே தவிர்த்து விட்டார், கணவர். மதுவுக்கு அடிமையாகி, என்னை விவாகரத்து செய்து விடுவதாகவும் கூறி வருகிறார்.
'நீயும் ஆச்சு, உன் மகனும் ஆச்சு... இனி, என்னை தொந்தரவு செய்யாதீர்கள்...' என்று, கூறி விட்டார்.
மகனது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. விபரம் தெரியாத, வயதான பெற்றோருக்கும், என்னால் மன வருத்தம்.
நான் செய்தது தவறு தான். இதிலிருந்து மீண்டு வரவே விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும். தக்க ஆலோசனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
ஒரு மகனையோ, ஒரு மகளையோ வளர்க்கும்போது கைகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
மகனுக்கு, 21 வயது நிறைவடையும் வரை, 'பைக்' வாங்கித் தரக் கூடாது. 21 வயது நிறைவடையும்போது வாங்கித்தருவது, 'ஸ்போர்ட்ஸ் பைக்'காக இருக்கக் கூடாது.
மகனுக்கு, 'பைக்' வாங்கித் தந்திருக்கக் கூடாது, மனைவி. மகன், 'பைக்'கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, ஒரு சிறுமியைக் கொன்றிருக்கக் கூடாது. ஆனால், இரண்டும் நடந்து விட்டன. ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவன் என்ன செய்திருக்க வேண்டும்?
மனைவிக்கும், மகனுக்கும் முழு மனதுடன் கூடிய, 'மாரல் சப்போர்ட்' பண்ணியிருக்க வேண்டும். அதைவிட்டு மகனையும், மனைவியையும் குற்றம் சாட்டி ஒதுங்கி நின்று, குடிநோயாளியாவது கடைந்தெடுத்த கோழைத்தனம்.
மனைவி, மகனுடன் ஒரே வீட்டில் தானே கணவன் இருந்தார். மகன், 'பைக்' கேட்டது தந்தைக்கு தெரியாதா... அப்போதே வாங்கித்தரக் கூடாது என, ராணுவக் கட்டளை பிறப்பித்திருக்கலாமே!
வழக்கு நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளாய். சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள உன் மகனின் படிப்பு கெடாது. அங்குள்ள பள்ளியில், பிளஸ் 1 வகுப்பை தொடர்ந்து படிக்கலாம்.
சீர்திருத்தப் பள்ளியில் படித்த பலர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பிரகாசிக்கின்றனர். உன் மகனை அடிக்கடி சந்தித்து, ஆறுதல் கூறு. 'இனிமேலாவது ஆடம்பர பொருட்களின் மீது மோகம் கொண்டு வாழ்க்கையை சீரழித்து கொள்ளாதே...' என, அறிவுரை கூறு.
'பைக்' மோதி இறந்து போன சிறுமியின் பெற்றோரை, வழக்கறிஞருடன் சந்தித்து சமாதானம் பேசு. சிறுமியின் பெற்றோர் கேட்கும் தொகையை நஷ்டஈடாக வழங்க ஒத்துக்கொள்.
விபத்து ஏற்படுத்தும் நோக்கம் இல்லாதுதான், உன் மகன், 'பைக்'கை ஓட்டினான். சிறுமி விளையாட்டுத்தனமாக ஓடி வந்து விபத்தில் சிக்கிக் கொண்டாள் என, எதிர் தரப்பு நீதிமன்றத்தில் கூறி, வழக்கை, 'வாபஸ்' பெற வைக்கலாம்.
விடுதலையாகி வரும் உன் மகன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 'பைக்' ஓட்டக்கூடாது என, சத்தியம் செய்யச் சொல்.
குடிநோயாளி ஆகியிருக்கும் உன் கணவன் குடிக்காதிருக்கும்போது அன்பாக, அனுசரனையாக பேசி, உன் வழி, மகன் வழி திருப்பு.
இறந்து போன சிறுமிக்கு உடன்பிறப்புகள் இருந்தால், அவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொள்.
விபத்தால் உன் மகன், மனம் பேதலித்து போயிருந்தால், மனநல ஆலோசகர் வைத்து, 'கவுன்சிலிங்' கொடு. மகனின் ஆடம்பரம் விரும்பும் நண்பர்களை, மகனின் நட்பு வட்டத்திலிருந்து நீக்கு.
விபத்தை ஏற்படுத்தி யாரையாவது கொன்றால், நஷ்டஈடை கொடுத்து, நம்மை காப்பாற்றி விடுவாள், அம்மா. மனித உயிர்களின் விலை மலினமானது என்கிற மிருகத்தனமான மனநிலை, மகனிடம் வராமல் பார்த்துக் கொள்.
நீ, கணவர் மற்றும் மகனுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று, அன்னதானம் செய்யுங்கள்.
பிரச்னைகள் வந்தால் தீரமாக நின்று போராடி ஜெயிப்பதே பெண்மைக்கு அழகு. வெற்றி நமதே.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
