PUBLISHED ON : அக் 04, 2020

அன்புள்ள அம்மா —
நான், 30 வயதான பெண். என்னுடன் பிறந்தவர்கள், மூன்று இளைய சகோதரிகள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான், நன்கு படித்து, நல்ல வேலைக்கு போகணும் என்ற ஆசையுடன், 10ம் வகுப்பில் நன்றாக படித்தேன். பள்ளி இறுதி ஆண்டு விடுமுறையின்போது, எனக்கு பெண் பார்க்கும் படலம், தடபுடலாக ஏற்பாடானது.
நான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று கெஞ்சியபோதும், 'மாப்பிள்ளை வீட்டினர் வசதியானவங்க, அவர்களாக விரும்பி வந்துள்ளனர். இதை விட்டா, இதுபோன்ற நல்ல இடம் அமையாது...' என்று சமாதானப்படுத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விட்டனர்.
திருமணமாகி, புகுந்த வீட்டிற்கு சென்ற முதல் நாளே, கணவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. ஒரு சில நாளில், அவர் மன நிலை சரியில்லாதவர் என்ற உண்மை, உறுதியாக தெரிய வந்தபோது, மிகவும் நொந்து போனேன்.
பிறந்த வீட்டுக்கு சென்றபோது, 'அதற்காக, சிகிச்சை எடுத்துட்டு தான் இருக்காராம். கொஞ்ச நாளில் சரியாயிடும்...' என்று கூற, இடிந்து போனேன்.
நான்கு பெண் பிள்ளைகளை கரையேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த என் பெற்றோர், 'எந்த சீர்வரிசையும் வேண்டாம்...' என்று, மாப்பிள்ளை வீட்டார் வந்ததும், மன நலம் குன்றியவர் என்று அறிந்தும், என்னை திருமணம் செய்து அனுப்பியுள்ளது, அப்போது தான் தெரிந்தது.
சில காலம், பல்லை கடித்துக் கொண்டு புகுந்த வீட்டில் இருந்தேன். ஆனால், கணவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை; வாழ்க்கை நரகமாக இருந்தது.
ஒருநாள் துணிந்து, வீட்டை விட்டு வெளியேறி, தொலை துாரத்திலுள்ள நகரத்தில் இருக்கும் தோழியின் உதவியுடன், அரசு பெண்கள் விடுதியில் சேர்ந்தேன். அவளே என்னை, 'நர்சிங் கோர்சி'லும் சேர்த்து விட்டாள்.
முழு கவனத்துடன் படித்து முடித்தேன். உடனடியாக, தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலையும் கிடைத்தது.
இதுவரை, என் பிறந்த வீட்டுக்கோ, புகுந்த வீட்டுக்கோ, நான் என்னானேன் என்று தெரியாது.
இந்நிலையில், எங்கள் மருத்துவமனைக்கு வரும், மருத்துவர் ஒருவரது மகனின், நட்பு கிடைத்தது. மனைவியை இழந்த அவர், என் நிலையை அறிந்து, திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.
'உன் கணவரிடமிருந்து, சட்டப்படி விவாகரத்து பெற்றுத் தருகிறேன்; பிறகு, திருமணம் செய்து கொள்ளலாம்...' என்கிறார்.
ஆனால், என் தோழியோ, 'பெற்றோரே உன்னை ஏமாற்றி இருக்கின்றனர். இரண்டு ஆண்டு பழக்கமுள்ள இவனை மட்டும் எப்படி நம்ப முடியும். இந்த திருமணத்துக்கு பின்னும் பிரச்னை ஏற்படாது என்பது, என்ன நிச்சயம். அப்படி ஏதாவது ஏற்பட்டால், உன் நிலை என்னாகும், யோசித்து முடிவெடு...' என்கிறாள்.
வாழ்க்கையில், 'செட்டில்' ஆக வேண்டும் என்று ஏங்குகிறேன். நான் என்ன முடிவு எடுப்பது என்று, நீங்கள் தான் ஆலோசனை தரவேண்டும், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
இந்தியர்களின் நுாறு மூட நம்பிக்கைகளில் ஒன்று, மனநிலை குன்றியவர்களுக்கு, திருமணம் செய்து வைத்தால், அவர்கள் பூரணமாய் குணமடைந்து விடுவர் என்பது.
உண்மையில், மனநலம் குன்றியவர்களை, மேலும் உக்கிரமானவர்களாக மாற்றுகிறது, திருமணங்கள். மனநிலை குன்றியவர்களுக்கு இடையே ஆன, 75 சதவீத திருமணங்கள், விவாகரத்தில் முடிகின்றன.
மனநோயாளியை மணந்து கொண்ட, ஆணோ - பெண்ணோ, கீழ்க்கண்டவாறு செயல்பட்டு மனநோயை குணப்படுத்தி, இயல்பான வாழ்க்கை வாழலாம்...
* எதிராளிக்கு, பாதுகாப்பான அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நோயாளி, தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக உணர வேண்டும்
* முன் முடிவு இல்லாமல், எதிராளி பேசுவதை முழுமையாக கவனிக்க வேண்டும்
* சிகிச்சை எடுப்பதை உற்சாகபடுத்த வேண்டும்
* வாழ்க்கை முறை மாற்றம் நிகழ்த்த உதவ வேண்டும்.
மன நோயாளியுடன் சேர்ந்து வாழாமல், நீ, துணிச்சலான முடிவு எடுத்திருக்கிறாய். செவிலியர் படிப்பு, மருத்துவர் படிப்புக்கு சமமானது.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* நீ, மறுமணம் செய்து கொள்வதை பிறகு பரிசீலிக்கலாம். முதலில், உன் மனநலம் குன்றிய கணவனை சட்டப்படி விவாகரத்து செய்
* உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர், உண்மையில் நல்லவரா என்பதை ஆராயாமல், அவரை திருமணம் செய்து கொள்ள அவசரப்படாதே
* உன்னை மணந்து கொள்ள விரும்பும் ஆடவருக்கு வயதென்ன, 35 வயது என்றால் பரவாயில்லை. 40 வயதுக்கு மேற்பட்டவராய் இருந்தால், அவரின் வேண்டுகோளை நிராகரித்து விடு
* திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நம்பிக்கையில், எக்காரணத்தை முன்னிட்டும், அவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட்டு விடாதே
* உன்னை மணந்து கொள்ள விரும்பும் ஆணின் பெற்றோர், உங்களின் திருமணத்தை ஆதரிப்பரா என்பதை ஆராய்
* வறுமையின் காரணமாக தான், உன் பெற்றோர், தெரிந்தே, ஒரு மனநலம் குன்றியவனுக்கு உன்னை மணம் செய்து வைத்தனர். அவர்களை பகைத்துக் கொள்ளாதே. உன் பெற்றோருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்
மூன்று தங்கைகளுக்கு, உன் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனரா என்று பார். அவர்களின் திருமணங்களிலும், உன் பெற்றோர், விபரீத முடிவுகளை எடுத்திருக்கின்றனரா என, அலசி தெரிந்து கொள்
உன் பெற்றோர் திருந்தி இருந்தால் மகிழ்ச்சி. அவர்களை விட்டு, உன்னை மணந்து கொள்ள விரும்பும் ஆடவரின் பெற்றோருடன் பேச சொல்
* உன்னை மணந்து கொள்ள விரும்பும் ஆடவரின், ஆண் மற்றும் பெண் நண்பர்களை சந்தித்து, அவரின் கல்யாண குணங்களை தெரிந்து கொள்
* உன்னை மணந்து கொள்ள விரும்புபவருக்கு குழந்தைகள் இருக்கிறதா, இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால், அவரின் வேண்டுகோளை நிராகரித்து விடு. ஒரே குழந்தை, ஐந்து வயதுக்கு கீழ் இருந்தால் பரவாயில்லை
* மருத்துவர் மகனை, நீ நிராகரித்து விட்டால், மேலும் ஓராண்டு காத்திருந்து, தகுதியான ஆணை தேர்ந்தெடு
* அவசர முடிவு, அதலபாதாளத்தில் தள்ளி விடும். விவேகமாக மதியூகமாக செயல்படு. பதறாத காரியம் சிதறாது மகளே. 'உறுமீன் வரும் அளவுக்கு காத்திருக்குமாம் கொக்கு' என்ற சொற்றொடருக்கேற்ப செயல்படு, வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
