
அன்புள்ள அம்மா —
எனக்கு வயது 40; இல்லத்தரசி. கணவர் வயது, 45; அரசு அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். எங்களுக்கு இரு பெண் குழந்தைகள். மூத்த பெண் வயது, 12, ஏழாம் வகுப்பு படிக்கிறாள். 10 வயதான இளையவள், ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.
ஓய்வு நேரங்களில் கவிதை எழுதுவார், கணவர். மற்றபடி மிகவும் அமைதியானவர். குடிப்பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ இல்லாதவர். என் மீது மிகவும் அன்பாக இல்லாவிட்டாலும், வீணாக சண்டையிட மாட்டார்.
நண்பர்கள் அதிகம் கிடையாது. இளையராஜா பாடல்களை விரும்பி கேட்பார். சமைத்ததை குறை சொல்லாமல் சாப்பிடுவார். அடிக்கடி கவிதை தொகுப்புகள் போட்டு, சேமிப்பை பாழாக்குவார். இன்னும் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம்.
எங்களுக்கு திருமணமாகி, 14 ஆண்டுகள் ஆகின்றன. எவ்வித பெரிய பிரச்னையும் இல்லாமல் அமைதியாய் போய் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில், சூறாவளி அடித்தது. சில மாதங்களுக்கு முன், 20க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார், கணவர். அப்போது, ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
என் அலுவலக தேவதை--------யை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவளோ என் காதலை, நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டாள். இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்... தற்கொலை
செய்து இறைவனிடம் போகிறேன். என்னுடைய, 14 ஆண்டு திருமண வாழ்க்கை, உப்பு சப்பில்லாத பத்திய வாழ்க்கை.
இவ்வாறு எழுதியிருந்தார்.
மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றினோம். தற்கொலை முயற்சி வழக்கு போடாமலிருக்க, காவல்துறைக்கு நகையை விற்று லஞ்சம் கொடுத்தேன்.
உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்தவர், அவள் பெயரை பினாத்த ஆரம்பித்தார். 15 நாள் மருத்துவ விடுப்புக்கு பின் பணிக்கு போய்வர ஆரம்பித்தார். மீண்டும் அந்த திருமணமான பெண்ணை காதல் என்ற பெயரில், தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார்.
இவரது துர்நடவடிக்கையை கண்டித்து, அலுவலகத்தில், 'மெமோ' கூட கொடுத்தனர். எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டேன் என்கிறார்.
'அவளது நினைப்பை, குடும்ப நலனுக்காக விட்டுவிடுங்கள்...' என, கெஞ்சி பார்த்து விட்டேன். மகள்களும் கால்களில் விழுந்து கதறினர்; மறுத்துவிட்டார்.
'இன்னும் ஆறு மாதங்கள், என் தேவதையை கெஞ்சி பார்ப்பேன்; அப்போதும் மறுத்தால், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன். இம்முறை தற்கொலை முயற்சி தோற்காது...' என, உளறுகிறார்.
இன்னொரு பெண்ணை நினைத்து, மனைவி, மகள்கள், 'ஈகோ'வை சிதறடிக்கும் இவருடன், தொடர்ந்து குடும்பம் நடத்த வேண்டுமா... தொடர்ந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் இவரை பிரிந்து, நானும், மகள்களும் விலகி வாழ்ந்தால் என்ன?
இவரை பொருந்தாத காமத்திலிருந்தும், தற்கொலை முயற்சிகளிலிருந்தும் காப்பாற்ற, எதாவது வழி உண்டா... எனக்கு ஒரு தீர்வை கூறுங்கள். -
— இப்படிக்கு,
உங்கள் துர்பாக்கிய மகள்.
அன்பு மகளுக்கு —
வீட்டில் இருக்கும் மனைவியை, கணவன் ஆழ அகலமாய் பார்ப்பது, சில பல மணித் துளிகள் தான். ஆனால், அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்களை முழு ஒப்பனையுடன், தினம் எட்டு மணி நேரம் பார்க்கிறான். அலுவலகப் பெண்கள், அவர்களது வீடுகளில் அழுக்கு, 'நைட்டி'யுடன் தான் திரிவர்.
மனித வாழ்வில் எல்லாமே பாவனைகள் தான். இந்த பாழாய் போன கவிஞர்கள், கானல்நீரை பருக விரும்புவர்; வானவில்லை, சட்டை தைத்து போட ஆசைப்படுவர்.
அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
கணவனின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை, அவனுக்கு தெரியாமல் சந்தி. முதலில், கணவனின் துாண்டிலில் சிக்காத அவளது திறமைக்கு, நன்றி கூறு. அவளது கணவன் மற்றும் குழந்தைகள் பற்றி விசாரி. அவள், உன் கணவனுக்கு மேலதிகாரியா அல்லது அவனுக்கு கீழ் பணிபுரிபவளா என பார்.
அலுவலகச் சூழ்நிலையை முழுமையாக கிரகி. அவளது கைபேசி எண்ணை மாற்ற, அன்பாய் கூறு. ஒன்று அவளை, 300 கி.மீ.,க்கு அப்பால் இருக்கும் அலுவலகத்துக்கு பணிமாறுதல் பெற்று, போகச் சொல் அல்லது அலுவலக முதன்மை மேலதிகாரியை அணுகி, கணவனுக்கு பணிமாற்ற உத்தரவு போட சொல்.
யாராவது அலுவலக ஆண் நண்பர்கள், இந்த முறையற்ற காதலில் ஈடுபட சொல்லி துாண்டுகின்றனரா என பார். மொத்தத்தில் பிரச்னைக்குரிய பாதையை அடைக்கப் பார்.
கணவனின் கவிதை புத்தகங்களை மூட்டைகட்டி, பரண் மேல் போடு. கவிதை எனும் மாய உலகத்திலிருந்து இறங்கி, யதார்த்த உலகத்துக்கு அவனை வரவழை.
கணவன் பணி முடிந்து வீடு திரும்பும் போது, குளித்து தலைசீவி, ஒப்பனை செய்து, அவனை வரவேற்க பார்.
கணவனை வற்புறுத்தி, மனநல மருத்துவரிடம் அழைத்து போ. திருமணமான பெண்ணின் மீது மையல் கொள்வதையும் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதையும் தடுக்க, தேவையான ஆலோசனைகளை மருத்துவர் வழங்குவார்.
கணவனுடன் தனியே பேசு. 'ஒரு கவிஞனுக்கு நேர்மையும், ஒழுக்கமும் தேவை இல்லையா... நான் திருமணபந்தம் மீறிய உறவை தேடினால், உங்கள் கவிதை உள்ளம் தாங்குமா... ஒருவனுக்கு ஒருத்தி என்பது தானே தமிழ் மரபு?
'உங்கள் காதலை அலுவலக பெண்மணி ஒத்துகொண்டால் என்ன ஆகும்... அந்த பெண், அவள் குடும்பத்தை விட்டு வரவேண்டும்; நீங்கள், உங்கள் குடும்பத்தை விட்டு செல்ல வேண்டும். இதனால், இரு குடும்பங்கள் சிதறுமே... தேவையா?
'என்னுடன், 14 ஆண்டுகள் தாம்பத்யம் செய்து, இரு மகள்களை பெற்றீர்களே... இப்போது எங்களை நடுத்தெருவில் நிறுத்தி, மாயமானை தேடி ஓடுகிறீர்களே... நியாயமா?
'இரு மகள்கள் தலையெடுத்து வரும்போது, உங்களை மரியாதையுடன் பார்ப்பரா... ஒருமாதம் மருத்துவ விடுப்பு போடுங்கள். வெளியூர் எங்காவது சென்று வருவோம். 'சபலமற்ற, குழப்பமில்லாத மனதை கொடு இறைவனே...' என, வேண்டுங்கள்...' எனக் கூறு.
உன்னுடைய எந்த முயற்சிக்கும் கணவன் திருந்தாவிட்டால், நீயும், மகள்களும் பெற்றோர் வீட்டில் அடைக்கலமாகுங்கள். நீ படித்த படிப்புக்கு எதாவது ஒரு வேலையை தேடு. மகள்களை படிக்க வை.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.