
அன்புள்ள அம்மா —
முதுகலை மேலாண்மை நிர்வாக பட்டப்படிப்பில், தங்கப்பதக்கம் பெற்றவள், நான். என் அப்பா, தனித்தனி வீடுகளை ஊருக்கு வெளியே கட்டி, நல்ல விலைக்கு விற்கும் சிவில் இன்ஜினியர்.
சாலை விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கால் கட்டுடன் வீட்டிலேயே ஆறு மாதங்களாக முடங்கி கிடக்கிறார். அம்மா, 'லேடீஸ் டெய்லர்!'
வீட்டிற்கு ஒரே மகளான எனக்கு, வரன் பார்க்க ஆரம்பித்தனர். 'மேட்ரிமோனியல்' மற்றும் தரகர்கள் மூலமாக, வரன்கள் வந்து குவிந்தன. வருங்கால கணவரை பற்றி எனக்கு, பலவிதமான கனவுகள் இருந்தன.
திருநெல்வேலி மாப்பிள்ளை வந்தான். பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அவன், 'பைண்டிங் பிரஸ்' வைத்திருந்தான். அவனது அப்பா, 10 ஆண்டுகளுக்கு முன், 'ஹார்ட் அட்டாக்'கால் இறந்து போயிருந்தார்.
வீட்டுக்கு ஒரே பையன். 170 செ.மீ., உயரத்தில், புது நிறமாக இருந்தான். சிரித்த முகம். அவனை பார்த்தால், கடித்து தின்னலாம் என்ற ஆசை எழும்.
'இவனையே கட்டிக்கிறேன்...' என, பெற்றோரிடம் கூறி விட்டேன். மாப்பிள்ளையை விட, அவனின் அம்மாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிகை சரண்யா போல, பாந்தமாக இருந்தார்.
பெண் பார்க்க வரும்போது, என் கைகளை வாஞ்சையாக பற்றி, 'இனி, நீ மருமகள் அல்ல, என் மகள். கண்ணில் கருமணி போல் உன்னை பாதுகாப்பேன்...' என, மிழற்றினார்.
திருமணம் முடிந்தது. முதலிரவை கொண்டாட தயாரானோன். அம்மாவின் அறையில் இருந்தபடி, முதலிரவு அறைக்கு வர மறுத்தான், கணவன்.
பலவந்தமாய் அவனை முதலிரவு அறைக்குள் தள்ளினர். வந்தவன் கேட்ட முதல் கேள்வி, 'என் அம்மாவையும் இங்க கூட்டிட்டு வந்து படுக்கவச்சா என்ன?' என்றான்.
அதன்பின்தான் எனக்கு தெரிந்தது. 'என் புருஷன், ஒரு அம்மா கோண்டு' என்று.
பகல் பொழுதில், 'என் செல்லக்குட்டி...' என, அம்மாவை கட்டிக் கொள்வான். அம்மாவின் கன்னத்தில் முத்தமிடுவான். இரவில், அம்மா உடுத்தி, களைந்த சேலையை பிரித்து, தானும் படுத்து, என்னையும் படுக்க வைப்பான். பெரும்பாலும், அம்மாவுடன் தான் துாங்குவான்.
கட்டாயப்படுத்தி என் அறைக்கு கூட்டி வந்தால், அவன் அம்மா வந்து, கதவை தட்டி, மகனை கூட்டி செல்வார்.
ஒரு வடிகட்டின கஞ்சம், மாமியார். மகனை, 100 கிராம் கறி வாங்கி வர சொல்லி, மூவருக்கும் பங்கு பிரித்து வைக்கச் சொல்வார். 'சிக்கன்' மற்றும் மீன் வாங்கினாலும், இதே கதை தான். எப்போது பார்த்தாலும், மகனை தான் வளர்க்க பட்ட கஷ்டத்தை கூறி, 'இப்ப உனக்கு, அவனை ஈசியா துாக்கி கொடுத்துட்டேன்...' என, அழுவாள்.
'ஏற்கனவே, என் மகனின் பாசத்தை பாதியா பங்கு போட்டுட்ட... குழந்தை பிறந்தா, என்னை ஒதுக்கி குப்பை தொட்டியில் போட்ருவீங்க. அதனால், இன்னும் மூன்று ஆண்டுக்கு, நீங்க ரெண்டு பேரும் குழந்தை பெத்துக்கக் கூடாது.
'என் மகனை, தற்காலிக கர்ப்ப தடை முறைகளை கையாள சொல்லிருக்கேன். நீ நினைச்ச நேரமெல்லாம் புருஷனை கொஞ்ச விட மாட்டேன். வாரம்ஒரு நாள் தான் அனுமதிப்பேன். தாம்பத்யம் முடிந்தவுடன், அவன் என்னுடன் வந்து படுத்து கொள்வான்...' என்றாள், மாமியார்.
மாமியாருக்கு, எலும்பு பொடிவு நோய் இருக்கிறது. எங்காவது விழுந்தால் நொறுங்கி விடுவாள்.
'அம்மா இறந்து விட்டால், உடன்கட்டை ஏறுவேன்...' என்கிறான், கணவன்.
தேனிலவு, 'கேன்சல்!'
'இங்கு நடப்பதை, உன் பெற்றோரிடம் சொன்னால், உன்னை விவாகரத்து பண்ணி விடுவான், என் மகன்...' என, மிரட்டுகிறாள் மாமியார்.
ஒரு மாமியாரே எனக்கு சக்களத்தியாக வந்திருக்கிறாள். மாமியாரை கழித்து விட்டு பார்த்தால், கணவன் ஓ.கே., தான். என்ன செய்யலாம் அம்மா?
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என ஆராய்வோம்...
* தாம்பத்யம் மிகச்சிறந்த எலிப்பொறி. கணவனை தாம்பத்யத்தால் வசியப்படுத்து. போகும்போது, வரும்போது, மாமியாருக்கு தெரியாமல் கணவனை முத்தமிடு. கண்களை குறுக்கி உதடுகளை குவி. விரசமான ஜோக்குகளை கூறி, கணவனை சிரிக்க வை
* 'அம்மா என்பது, புனிதமான கோவில். அங்கு படுத்து உறங்கி உருள ஆசைப்படக் கூடாது...' என, கணவனுக்கு அறிவுரை கூறு
* 'எல்லாருக்கும் ஒரு காலம் இருக்கிறது. உன் காலத்தை, கணவருடன் கழித்து விட்டாய். இனி, என் காலம். அதை நான் சுகிக்க அனுமதி தாயே...' என, அம்மாவை கை எடுத்து கும்பிடச் சொல். உன் மீது மோகம் அதிகரிக்க அதிகரிக்க, அம்மாவின் மீதான ஈர்ப்பு குறைய ஆரம்பித்து விடும்
* வீட்டிற்கு ஒரே மகன். அப்பா இறந்து, 10 ஆண்டு ஆகிறது. ஆகவே, கணவனும், மாமியாரும், 'பைண்டிங்' தொழிலிலும், தினசரி வாழ்க்கையிலும் நெருக்கமாக செயல்பட்டிருப்பர். 'உனக்கு நான், எனக்கு நீ...' என்ற தாரக மந்திரம், உரக்க ஒலித்திருக்கும். சதுரங்க அட்டையில் காய் நகர்த்துவது போல, மாமியாருக்கு எதிராக, காய் நகர்த்து
* மாமியாரை எதிரியாக பாவிக்காதே. அவரின் எலும்பு பொடிவு நோய்க்குரிய மாத்திரைகளை நேரத்துக்கு கொடு
* தற்காலிக கருத்தடை சாதனங்களை, கணவனை உபயோகிக்க விடாதே. நைச்சியமாக கர்ப்பம் ஆகு. வயிறு பெரிதாய் தெரியும் வரை, கர்ப்பமான விஷயத்தை மாமியாரிடம் சொல்ல வேண்டாம். மாமியாருக்கு தெரியாமல், ஒரு மகப்பேறு மருத்துவரிடம் காட்டு
* நீ, கர்ப்பமான விஷயம் தெரிந்து, மாமியார் பிரச்னை பண்ணினால், பெற்றோருக்கு தகவல் தெரிவி. பிரசவம் ஆகும் வரை, பெற்றோர் வீட்டில் தங்கு. உனக்காகவும், குழந்தைக்காகவும், உன்னை ரகசியமாக வந்து பார்ப்பான், கணவன்
* குழந்தை பிறந்து விட்டால், கணவனுக்குள் இருக்கும் அம்மாவின் மீதான ஈர்ப்பு, குறையும். அம்மாவை மோகித்த மகன் நிலையிலிருந்து, அப்பா நிலைக்கு தாவுவான்
* கணவனுக்கு, யதார்த்தத்தை கற்றுக்கொடு. அவன், அம்மாவிடம் பகலில் சில மணி நேரம் பேசட்டும். இரவில், அவன் உன்னுடன் தான் படுக்க வேண்டும். அம்மா உடுத்தி களைந்த புடவைகளை, படுக்கையில் விரிக்க விடாதே.
இன்னும் எத்தனை நாள், மாமியார் இருப்பார்... மாமியார் மேலாண்மை கற்றுக்கொள். அம்மா கோண்டுகளை பெண்டாட்டி தாசர்களாக மாற்றுவோம், மகளே.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.