
அன்புள்ள அம்மா —
என் வயது: 33; ஆண். நான், கல்லுாரியில் சேர்ந்த உடனேயே, அப்பா காலமானார். மிகவும் கஷ்டப்பட்டு என்னையும், தங்கையையும் படிக்க வைத்தார், அம்மா.
எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், மகன் பிறந்துள்ளான். நான் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தேன்.
தங்கை வயது, 29. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, எங்களை எதிர்த்து, திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு, எட்டு வயதில் பெண்ணும், ஐந்து வயதில், ஆணும் உள்ளனர். ஆனால், நான்கே ஆண்டில் காதல் திருமணம் கசந்து, பிரிந்து வாழ்கிறாள்.
ஆறு ஆண்டுகளாக பிள்ளைகளுடன், கஷ்ட ஜீவனம் நடத்துகிறாள். என்னால் முடிந்த அளவு பொருளாதார உதவி செய்தேன்.
தற்போது, எனக்கும், 'கொரோனா' காரணமாக, ஆட் குறைப்பு செய்து விட்டதால் ஐந்து மாதங்களாக வேலை இல்லை. கடன் வாங்கி தான் வீட்டுச் செலவை சமாளிக்கிறேன். அது மட்டுமின்றி, பங்குச்சந்தையில் என் சொத்துகள் முழுவதையும் இழந்ததோடு, வீட்டில் மரியாதையையும் இழந்தேன்.
என் குடும்பத்தையும் கவனிக்க முடியாமலும், தங்கைக்கும் உதவ முடியாமலும், நெருப்பு கடலில் நீந்தி தத்தளிக்கிறேன். தற்கொலை எண்ணம் தலை துாக்குகிறது. இந்த சூழ்நிலையில் தங்கையுடன் படித்த ஒருவன், எங்கள் குடும்ப நண்பராக பழகினான்.
தங்கைக்கும், அவளது கணவனுக்கும் நடந்த பல பிரச்னைகளுக்கு பஞ்சாயத்து பேசி, தீர்த்து வைத்தான். கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று உறுதியாக கூறி விட்டாள், தங்கை.
அதன்பின், அவன் எங்களிடம், என் தங்கையை திருமணம் செய்து கொள்வதாகவும், பிள்ளைகளை பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.
தங்கையிடம் கேட்டால், 'உங்கள் விருப்பம் தான் முக்கியம்...' என்கிறாள்.
சம்மதம் தெரிவித்து விட்டார், அம்மா. ஆனால், என் மனம் மறுமணத்தை ஏற்க மறுக்கிறது. பிள்ளைகளை கடைசி வரை பார்த்து கொள்வானா என்பதை நினைத்து, நெஞ்சம் பதறுகிறது.
காவல் துறையில், கிரிமினல் பிரிவில் வேலை செய்வதாகவும், இந்த ஆண்டு, வி.ஆர்.எஸ்., வாங்கி அவனுக்கு பிடித்த தொழிலை செய்ய உள்ளதாகவும் கூறுகிறான்.
அவனது குடும்பம் பற்றி எதுவும் தெரியாது. என் ஆசை தங்கையை, மீண்டும் எதாவது நரகத்தில் தள்ளி விடுவேனோ என்ற அச்சம், என்னை துாங்க விடவில்லை. அப்படி திருமணம் செய்து கொடுத்தால், விவாகரத்து வாங்க வேண்டுமா...
ஒருவேளை, அவன் விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது... எங்களுக்கு அறிவுரை சொல்லவோ சொந்தங்கள் யாரும் இல்லை. நீங்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் அம்மா. என் செல்ல தங்கைக்கு நல்ல காலம் பிறக்குமா...
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
உன் தங்கை, அவளது கணவனை பிரிந்து வாழ ஆரம்பித்து, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இந்த ஆறு ஆண்டுகளில் உன் தங்கை, முறைப்படி மனு செய்து, குடும்ப நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறவில்லை என்பது எவ்வளவு அபத்தமான விஷயம்.
தங்கை என்ன படித்தாள், திருமணத்திற்கு பின் வேலைக்கு சென்றாளா, கணவனை பிரிந்த பிறகாவது வேலைக்கு சென்றாளா... -எந்த தகவலும் உன் கடிதத்தில் இல்லை.
தங்கையை மணந்து கொள்ள விரும்பும் ஆண், ஏற்கனவே திருமணமானவனா, விவாகரத்து பெற்றவனா அல்லது விவாகரத்து பெறாமல் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறானா...
உண்மையில், காவல்துறையில் வேலை பார்க்கிறானா... கான்ஸ்டபிளா அல்லது உதவி ஆய்வாளர் வேலையா... காவல்துறை பணியிலிருந்து அவன் ஏன் விருப்ப ஓய்வு பெற வேண்டும்; பிடித்த தொழிலை செய்ய முதலீடு வைத்திருக்கிறானா அல்லது முதலீட்டை நீ செய்ய வேண்டும் என, விரும்புகிறானா...
அவனது குடும்பம் பற்றியும், வேலை பற்றியும் எதுவும் தெரியாமல், முறைப்படி விவாகரத்து பெறாத தங்கையை, அவனுடன் வாழ அனுமதிக்க முடியாது. இந்த செயல், ஒரு கூட்டு தற்கொலைக்கு சமம்.
அடுத்து நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
* முறைப்படி ஒரு வழக்கறிஞரை அணுகி, தங்கையின் கணவரிடமிருந்து, அவளுக்கு விவாகரத்து கிடைக்க மனு செய்
* நீயும், தங்கையும் எதாவது ஒரு வேலைக்கு போங்கள்
* தங்கைக்கு உதவும் ஆணின் குடும்பத்தை பற்றியும், அவனது வேலையை பற்றியும் முழுமையாக விசாரி. அவனுக்கு மனைவி, குடும்பம் இருந்தால், தங்கையுடன் பழக வேண்டாம், பேச வேண்டம் எனக் கூறு. தங்கையை, அவன் ஆசைநாயகியாக வைத்துக்கொள்ள பார்க்கிறான். பாரம் அதிகமாக இருக்கிறது என்று கைமாற்றி விட்டு அவதிப்படாதே
* தங்கை குடும்பத்தை கவனிக்கும்போதே, உன் குடும்பத்தையும் கவனி
* தங்கைக்கு இப்போது திருமணம் அவசியமே இல்லை. சொந்தக்காலில்
நிற்கும் மனோபாவத்தை அவளுக்கு ஏற்படுத்து
* 'கொரோனா'வால் வேலைவாய்ப்பின் ஒரு கதவு மூடினால், மீதி ஒன்பது கதவுகள் திறக்கும். அந்த கதவுகளை திறந்து, புதிய வேலைவாய்ப்புகளை அடையுங்கள்
* எந்த பிரச்னை என்றாலும், கண், காதுகளை திறந்து வைத்து, சாதக பாதகங்களை முழுமையாக ஆராயுங்கள். சாவிகள் இல்லாத பூட்டுகள் ஏது?
மொத்தத்தில் உனக்கும், தங்கைக்கும், 2021ல், நல்ல காலம் பிறக்கும் பிள்ளைகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.