
'எனது வாழ்க்கை அனுபவங்கள்' நுாலிலிருந்து: வாழ்க்கைக்கு கடவுள் பக்தி எவ்வளவு அவசியமோ அதுபோல, எளிமையும் மிகவும் அவசியம்.
ஒரு சின்ன சம்பவம், பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போது, கொச்சி மகாராஜாவாக இருந்தவர், ஒரு பெரிய ஜோதிட நிபுணர். ஆயினும், கண்ட கண்ட விஷயங்களுக்கெல்லாம் ஜாதகத்தை பார்த்து சோதித்துக் கொண்டே இருக்க மாட்டார்.
திருமண பொருத்தம் ஒன்று மட்டும் தான் பார்த்துச் சொல்வார்.
காலையில் எழுந்து பூஜை செய்து, வெளியே இருக்கும் பெரிய ஹாலுக்கு வருவார். திருமண விஷயமாக பலர் ஜாதகங்களை எடுத்து வந்து காட்டுவர்.
அவர் பொருத்தம் பார்த்து சொல்லி விட்டால், அப்பீலே கிடையாது.
ஒரு சமயம், காலையில் பூஜை செய்து, வெளியே வந்தார்.
இரண்டு ஜாதகங்களை அவரிடம் கொடுத்து, பொருத்தம் கேட்டார், ஒருவர்.
அவற்றை பார்த்தவர், 'பொருந்தி இருக்கிறதே; பேஷாக திருமணம் செய்யலாம்...' என்றார்.
திருமணம் நடந்தது. அதன் பிறகு, எதிர்பாராத விபரீதமும் நடந்து விட்டது.
அந்த ஜாதகங்களை முதலில் எடுத்து வந்து காட்டியவர், ராஜாவை பார்க்க வந்தார்.
'நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. அதுதான் பிராப்தம். கடவுள் கட்டளை; அதை, நான் மட்டும் மீறி விட முடியுமா...
'இல்லையென்றால், பொருந்தாத ஜாதகத்தை பொருந்தும் என்று சொல்லும்படி, என் கண்கள் ஏன் மறைக்கப்பட வேண்டும்...' என்று சொல்லி, மிகவும் வருந்தினார், ராஜா.
'இதை ஏன் சொல்கிறேன் என்றால், எல்லாவற்றிற்கும் மேலான ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது. முருகன் இருக்கிறான் என்று நினைத்து, நான் என்னுடைய காரியங்களை முறையாக செய்து போவேன். நடுவில் எத்தனையோ இடையூறுகள் வரத்தான் செய்கின்றன.
'இடையூறுகளை கண்டு அஞ்சக் கூடாது. அதைக் கண்டு கலங்கிப்போவதை காட்டிலும், எப்படி சமாளிக்கலாம் என்று யோசனை செய்து, வழியை காண்பதுதான் நம் வெற்றியின் ரகசியம். அது, பின்னால் எத்தனையோ பேர்களுக்கு வழிகாட்டியாக கூட அமைந்துவிடும்...'
- இப்படி கூறியது யார் தெரியுமா?
பிரபல திரைப்பட தயாரிப்பாளர், ஏவி.மெய்யப்ப செட்டியார் தான்.
'உழைப்பால் உயர்ந்த ஆப்ரகாம் லிங்கன்' நுாலிலிருந்து: ஒருநாள், ஆப்ரகாம் லிங்கன், வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் அவரை கண்ட ஒரு கறுப்பின மனிதர், தன் தொப்பியை கழற்றி மரியாதை செலுத்தினார். லிங்கனும் தன் தொப்பியை கழற்றி, அவருக்கு பதில் மரியாதை செய்தார்.
இதைப் பார்த்த லிங்கனுடன் இருந்த நண்பர், 'நீங்கள் ஜனாதிபதி; அந்த மனிதன் ஏழை பிரஜை. அவனுக்கு, நீங்கள் பதில் மரியாதை செலுத்த வேண்டுமா...' என கேட்டார்.
அதற்கு, 'என்னை விடவும் மரியாதை தெரிந்த ஒருவர் இருப்பதை நான் விரும்புவதில்லை...' என்றார், லிங்கன் புன்னகையுடன்.
ஆக, மரியாதை என்பது கொடுத்துப் பெறுவது; பெற்றுக் கொடுப்பது. நாம் எப்போதும் மதிப்புக்குரியவராக வலம் வர வேண்டுமென்றால், பிறரை வயது வித்தியாசமின்றி, மதித்து பழக வேண்டியது மிகவும் அவசியம்.
நடுத்தெரு நாராயணன்