
அழுத்தம், தீவிரம், உறுதி, துாய்மை- ஆகியவை தெய்வத்தை இணங்க வைக்கும்; இன்னருள் புரியவைக்கும்; சந்தேகம் இல்லை.
நண்பர்கள் இருவர் இருந்தனர். நீராடி, சிவனை வழிபட்டு, உணவு உண்ணும் பழக்கமுடையவர், ஒருவர்; பசியெடுத்தவுடன் உண்டு விடுவார், மற்றொருவர்.
ஒருநாள், இருவரும் கட்டு சாதம் கட்டி, குதிரையில் ஏறி புறப்பட்டனர். குடக்கோட்டூர் எனும் ஊரின் வழியாக போய் கொண்டிருந்த போது, 'எனக்கு பசிக்கிறது. உண்ணலாமா...' என, கேட்டார், ஒருவர்.
'நீராடி, வழிபாட்டை முடித்து தான், நான் உண்பேன். தெரியாதா உனக்கு...' என்றார், பக்தர்.
'சரி... நீ போய், நீராடி வா... இங்கே பக்கத்திலேயே சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. காட்டுகிறேன்...' என்றார், பசிக்காரர்.
அதை நம்பிய பக்தர், சற்று தொலைவில் உள்ள குளத்தில் நீராடச் சென்றார்.
அவர் நகர்ந்ததும், குதிரை கொள்ளுப்பையில் மணலை நிரப்பி கட்டி, அதை சிவலிங்கம்போல் நட்டு வைத்து, காட்டுப் பூக்களால் ஆன மாலை சார்த்தி, சிவலிங்க வடிவை செய்து வைத்தார், பசிக்காரர்.
பக்தர் நீராடி வந்ததும், 'வா... இதோ பார், சிவலிங்கம். சீக்கிரம் கும்பிட்டு வா; சாப்பிடலாம்...' என்று சொல்லி, தான் தயாரித்த, போலி சிவலிங்கத்தை காட்டினார்.
சிவலிங்கத்தைக் கண்டவுடன், வழக்கம்போல், மலர்களால் அர்ச்சித்து, பக்தி பாடல்கள் பாடி, மனம் உருகி வழிபட்டார், பக்தர்.
பூஜை முடிந்ததும் இருவருமாக உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது பசிக்காரர், சிரித்தபடியே, 'நீ, பூஜை செய்த சிவலிங்கம், மிகவும் உயர்ந்ததாக்கும்...' என்றார்.
'ஏன்... திடீரென்று இப்படி சொல்கிறாய்... காரணம் என்ன?' என்று கேட்டார்.
'ஹுக்கும்... அது சிவலிங்கமா... குதிரையின் கொள்ளுப்பையில் மண்ணைக்கொட்டி, நாந்தான் சிவலிங்கம் மாதிரி நட்டு வெச்சேன். அதப்போயி சிவலிங்கம்ன்னு நெனச்ச பாரு...' என்று அழைத்துப் போனார்.
'நா(ன்) வெச்ச லிங்கத்தை துாக்கிப் போடறேன் பாரு...' என்று கேலியாக பேசி, சிவலிங்கத்தை துாக்க முயற்சித்தார்; சிவலிங்கம் அசையவில்லை; என்ன முயற்சி செய்தும், சிவலிங்கம் இடம் பெயரவில்லை.
பயந்தார், பசிக்காரர். அவரை அறியாமலே கைகள் குவிந்தன. பக்தரோ, பேரின்பத்தின் உச்சத்தில் இருந்தார்.
இருவரில், முன்னவரால் வைக்கப்பட்டு, பின்னவரின் அழுத்தமான, உறுதியான நம்பிக்கையால் நிலைபெற்ற அந்த ஈசன், 'மொக்கணீசுவரன்' என, பெயர் பெற்றார். பின்னாளில், அந்த இடம், 'மொக்கணீசுரம்' என, பெயர் பெற்றது.
அடியார்க்கு அருள் செய்த இந்த மொக்கணீசுவரை, மாணிக்கவாசகர், 'மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கதா(க)க் காட்டிய தொன்மையும்' என, துதித்துப் பாடி, அழுத்தமான நம்பிக்கையின் விளைவைக் காட்டுகிறார் -திருவாசகத்தில்.
அழுத்தமாக ஆண்டவனைப் பற்றுவோம்; அல்லல்களை ஒழிப்போம்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
துளசியை பார்த்தால், ஐஸ்வர்யம் பெருகும். துளசி செடிக்கு தண்ணீர் விட்டால், நோய் விலகும். பெண்கள், மூன்று முறை சுற்றினால், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.