
ராஜ்கிரண் போடும், 'கண்டிஷன்!'
கதாநாயகனாக நடித்து, சமீபகாலமாக, அப்பா, தாத்தா வேடங்களில் நடித்து வரும் ராஜ்கிரணைத் தேடி, இப்போதும் அதிக படங்கள் செல்கின்றன. அவரோ, எத்தனை பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும், அவர்கள் சொல்லும் கதையும், தனக்கான கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே, நடிக்க ஒத்துக்கொள்கிறார். அப்படி பிடிக்காதபட்சத்தில், 'வீட்டில் சும்மா இருந்தாலும் பரவாயில்லை. பிடிக்காத வேடங்களில், ஒரு போதும் நடிக்க மாட்டேன்...' என்று, உறுதிபட சொல்லி விடுகிறார். அந்த அளவுக்கு, 'நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்ற, 'பாலிசி'யை தொடர்ந்து, கடைப்பிடித்து வருகிறார், ராஜ்கிரண்.
— சினிமா பொன்னையா
ஐதராபாத்தில் குடியேறும், தமிழ் நடிகை!
'நான், தமிழ் நடிகை. அதனால், என்னை தமிழ் இயக்குனர்கள் ஆதரிக்க வேண்டும்...' என்று, கோடம்பாக்கத்தில் உரிமைக் குரல் எழுப்பி வந்த, நிவேதா பெத்துராஜை, ஓரிரு படங்களோடு கோலிவுட் துரத்தியடித்தது. அதையடுத்து, ஆந்திராவில் தஞ்சமடைந்தவரை, அங்குள்ள, 'ஹீரோ'கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், தமிழ் நடிகை என்று சொல்வதை நிறுத்திக்கொண்ட, நிவேதா, 'என்னை ஆதரிக்காத தமிழகத்தை விட, அடைக்கலம் கொடுத்த ஆந்திரா எவ்வளவோ மேல்...' என்று சொல்லி, கூடிய சீக்கிரமே, பெட்டி, படுக்கையோடு தமிழகத்திலிருந்து இடம் பெயர்ந்து, ஐதராபாத்தில் நிரந்தரமாக குடியேற, தயாராகி விட்டார். இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம்!
- எலீசா
ஷகீலா ஆபாச நடிகையாக, இது தான் காரணமாம்!
ஒவ்வொருவரிடமும், நடிகையானது பற்றி கேட்டால், 'பிளாஷ்பேக்' சொல்வர். அந்த வகையில், ஆபாச பட நடிகையான, ஷகீலா கூறுகையில், 'நான் சிறுமியாக இருந்தப்போ, என் அக்காளின் பிரசவத்தின்போது, ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்த, பெற்றோரிடம் பணமில்லை. அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்ததும், வாழ்க்கைக்கு, பணம் எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது. அதன்பின், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், சினிமாவில் இறங்கினேன். மலையாள படங்களில் வெறித்தனமான நடித்து, லட்சங்களை பார்த்த பிறகு தான், என் பணத்தாசை அடங்கியது...' என்கிறார். காரணம் இன்றி காரியம் இல்லை!
- எலீசா
நிறைவேறாத ஆசைகளை பட்டியலிடும், தமன்னா!
தமன்னாவை, சினிமா உலகம் ஓரங்கட்டி வருகிறது. ஆனால், 'இதுவரை, நான் நடித்த எல்லா படங்களிலுமே, 'பிகினி, டூ - பீஸ்' என்று, ரசிகர்களின் திருப்திக்காகத்தான் நடித்துள்ளேன். என் திருப்திக்கான வேடங்களில் இன்னும் நடிக்கவில்லை. குறிப்பாக, மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே, என் சினிமா கனவு. அதை நனவாக்காமல் நான் எப்படி வெளியேற முடியும்...' என்று, தன் ஆசையை வெளிப்படுத்தி, கதாநாயகியரை வித்தியாசமான கோணத்தில் நடிக்க வைக்கும், இயக்குனர்களை துரத்துகிறார், தமன்னா. ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?
— எலீசா
ரஜினிக்கு ஏற்பட்ட, திடீர் அச்சம்!
'நான் யானை அல்ல, குதிரை. அதனால், என் மார்க்கெட்டை யாராலும் சரிக்க முடியாது. விழுந்தாலும், உடனே, எழுந்து ஓடத் துவங்கி விடுவேன்...' என்பார், ரஜினி. அப்படிப்பட்டவர், அரசியல் பிரவேசத்தை அறிவித்து, பின்வாங்கியதால், ரசிகர்கள், அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அதனால், 'தற்போது நடித்து வரும், அண்ணாத்த படத்தை புறக்கணித்து விடுவரோ... இதனால், நம் மார்க்கெட் முற்றிலுமாக சரிந்து விடுமோ...' என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே அவரிடத்தில் கதை சொல்லி, காத்திருந்த சில இயக்குனர்கள், மீண்டும் அவரை தொடர்பு கொள்ளாமல், 'அண்ணாத்த படம் ஓடினால், ரஜினியை சந்திக்கலாம். இல்லையேல், அந்த கதையை, வேறு நடிகரை வைத்து இயக்கலாம்...' என்று, பின்வாங்கியுள்ளனர். அதன் காரணமாக, 45 ஆண்டு கால, கலைப் பயணத்தில், முதன் முதலாக, தன் சினிமா மார்க்கெட்டை நினைத்து, கவலைப்படத் துவங்கியிருக்கிறார், ரஜினி.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை
தல - தளபதி நடிகர்கள், 'ரேஞ்சு'க்கு தன்னை நினைத்துக்கொண்ட, மெரினா நடிகர், அவர்கள் நடிப்பது போன்று, 'மெகா பட்ஜெட்' கதைகளை தயாரித்து, நடித்தார். ஆனால், அப்படி நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்ததால், அதலபாதாளத்தில் விழுந்து, கடனாளியாகி விட்டார்.
இப்போது, 'மெகா பட்ஜெட்' கதை என்றாலே, தெறித்து ஓடும், மெரினா நடிகர், 'என் உயரம், இப்போது எனக்கு தெரிந்து விட்டது. அதனால், இனிமேல் பட்ஜெட் கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று, புலம்பி வருகிறார்.
'மெகா பட்ஜெட் வேண்டாம்ன்னு எவ்வளவோ சொன்னோம் கேட்கல. பட்ட பிறகு தான் புத்தி வருது போலருக்கு...'- என்று, மேற்படி நடிகருக்கு ஏற்கனவே, 'அட்வைஸ்' கொடுத்தவர்கள், கிண்டலாக பேசி வருகின்றனர்.
'டேய்... சிவகார்த்தி, சொன்னா கேளுடா... தனியா, 'மிமிக்கிரி கிளப்' ஆரம்பிக்க வேண்டாம். கல்லுாரியில் எந்த விழா நடந்தாலும், நிகழ்ச்சி நடத்த, பிரின்ஸிபால், நமக்கு வாய்ப்பு கொடுத்துட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கல்லுாரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளிலும் நாம் கலந்துட்டு, 'மிமிக்ரி' செய்து, பல பரிசுகள் வாங்கிட்டு வர்றோம்.
'இப்போதைக்கு இது போதும்டா. முதலில் படிப்பை முடிக்கணும். அதன்பிறகு, பகுதி நேரமா இதை செய்யலாம். இப்ப படிப்பை கெடுத்துகிட்டு, கல்யாணம், பிறந்த நாள், அரசியல் மேடை என்று, நிகழ்ச்சிகள் நடத்த போயிட்டா, படிப்பு பாழாகிடும்...' என்று எச்சரித்தான், நண்பன்.
'ஆமாம்டா... நீ சொல்றது சரிதான். வெளி விழாக்களில், இரண்டொரு நிகழ்ச்சி நடத்தியதில், பணமும் வசூலாகலே; தேர்வும் எழுத முடியாம போச்சு. எல்லாவற்றையும் நிறுத்திட்டு, பிரின்ஸிபாலிடம், 'சரண்டர்' ஆக வேண்டியது தான்...' என்றான், சிவகார்த்திகேயன்.
'அப்பாடா... இப்பவாவது புத்தி வந்ததே...' என்றான், நண்பன்.
சினி துளிகள்!
* தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே, தன் ரசிகர்களை கவரக்கூடிய, 'ரொமான்டிக்' காட்சிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்று, இயக்குனர்களை கேட்டுக் கொள்கிறார், சிவகார்த்திகேயன்.
அவ்ளோதான்!