
முன்கதை சுருக்கம்: 'டிவி' சேனல் ஒன்றில் கேமராமேனாக பணிபுரியும் ரிஷி, மெரினாவில் நடைபயிற்சிக்காக நடிகர் சுஜித்குமார் வருவதை கேள்விப்பட்டு, அவரை பேட்டி காண, தேடினான். அந்நேரம், தொகுப்பாளினி தமிழ்ச்செல்வி அங்கு வந்து, வி.வி.ஐ.பி., ஒருவரை காண வந்ததாக கூறி அழைத்து செல்கிறாள். காரில் இருந்த சுஜித்குமாரை பார்த்த ரிஷி பரவசமானான்-
காருக்குள், சுஜித்குமாரை இலகுவாக பார்க்க நேரிடும் என்பதை, துளி கூட கற்பனை செய்திருக்கவில்லை, ரிஷி.
இன்ப அதிர்விலிருந்து அவன் விடுபடுமுன், ''உள்ளே வாங்க...'' என்றார், சுஜித்குமார்.
இருவரும் உள் அடங்கினர்.
காரின் ஒரு பக்க கதவோரமாக, சுஜித்; இடப்பக்க கதவோரம், தமிழ்; முன் சீட்டில், ரிஷி.
சற்றே வளைந்து, முதுகை திருப்பி சுஜித்தை பார்ப்பது, ரிஷிக்கு சிரமமாக இருந்தது.
அதை கவனித்த சுஜித், வேகமாய் காரை விட்டு இறங்கி, அவர்களையும் இறங்க கூறினான். அருகில் நெருக்கமாய் வளர்ந்திருந்த செம்பருத்தி செடியை ஒட்டி அமர்ந்து, அவர்களையும் அமரச் சொன்னான்.
சுஜித்தின் சமயோஜித முடிவு, ரிஷிக்கு மிகவும் பிடித்திருந்தது.
''ஓ.கே., இப்போ சவுகரியமா இருக்கா?''
''யெஸ் சார்.''
''தமிழ்ச்செல்வி, நீங்கதானே என்னோட பேச ஆசைப்பட்டது... இந்த ஜென்டில்மேன் யார், புதுசா?''
''என்னோட நெருங்கிய நண்பர் சார்... பேர், ரிஷி. இவனும் என் கூடதான் சேனல்ல வேலை பண்றான். 'சினி போட்டோகிராபர்' ஆகணும்கிறது, இவனோட விருப்பம் சார்.''
''அப்ப... அதுக்கு நான் உதவி செய்தா நல்லதா இருக்கும். அப்படித்தானே?''
''ஆமாம் சார்... இவன் ஒரு பிரமாதமான கேமராமேன். வெளிச்சத்தை சிறை பிடிக்கிறதுல, இவன் இன்னொரு, பி.சி.ஸ்ரீராம்.''
''சந்திக்க விரும்பினதும் இவருக்காகவா?''
''இல்ல... இவனுக்காக இல்லை... இது எதேச்சையா நடந்தது. அதாவது, இவன் வேற ஒரு, 'அசைன்மென்டு'க்காக, 'பீச்'சுக்கு வந்திருந்தான். உங்க சந்திப்பு, இவனுக்கு ரொம்ப ஆச்சரியம்.''
ரிஷியை மையப்படுத்தி தமிழ் பேசப் பேச, அவனிடம் இன்ப அதிர்வு அதிகரித்துக் கொண்டே போயிற்று. அதற்கு மேல் பேசாமல் இருக்க அவனால் முடியவில்லை.
''எக்ஸ்கியூஸ்மீ சார்... நான், 'பீச்'சுக்கு வந்ததும், உங்களை பார்க்க தான். நீங்க, தினமும் காலை நேரத்துல, 'பீச்'சுல நடைபயிற்சிக்கு வருவீங்கன்னு எங்க சேனல், செய்தி ஆசிரியர் சொன்னார். உங்களை அடையாளம் காண முடியாதுன்னும் சொல்லியிருந்தார்.
''ஒரு நம்பிக்கையில வந்தேன். ஆனா, அது தமிழ் மூலமா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல,'' படபடப்போடு பேசி முடித்தான், ரிஷி.
ரிஷியின் தோளில் கை வைத்து, 'டேக் இட் ஈஸி' என்பது போல், சுஜித், ஒரு உணர்வை தரவும், அவனுக்குள் சுரப்பிகள் தாறுமாறாக சுரக்கத் துவங்கின.
''அப்ப, உங்க சந்திப்போட நோக்கம்?'' ரிஷியை பார்த்து கேட்டார், சுஜித்.
''அது வந்து...''
''கமான்... என்னோட பேட்டி வேணுமா?''
''அப்கோர்ஸ். எங்க ஸ்டுடியோவுக்கு வந்து, ஒரு, 'ஈவென்ட்'ல, 'சீப் கெஸ்ட்'டாவும் கலந்துக்கணும். அது என்னால நடந்தா, மேனேஜ்மென்ட் என்னை நிரந்தரம் பண்ணி, பதவி உயர்வு தருவாங்க. சம்பளமும் அதிகரிக்கும். இப்ப ஒரு கல்யாண மண்டபத்துக்கு பக்கத்து வீட்டு மாடியில குடியிருக்கேன்.
''கார்த்தால, 5:00 மணிக்கெல்லாம் மேளம் வாசிச்சு எழுப்பி விட்டுட்டாங்க சார்... அப்படி எழுந்திருக்கவும் தான், உங்களை சந்திக்கணும்னு எண்ணம் வந்தது. நானும் பறந்து வந்தேன். ஆனா, இன்று, ரொம்ப நல்ல நாள். அந்த மேளக்காரருக்கும் நன்றி சார்.
''அவர், என் துாக்கத்தை கலைச்சிருக்கலைன்னா, நான் இப்ப உங்களை பார்த்து, உங்க கூட பேசிக்கிட்டிருக்க முடியாது. இப்ப நான் உற்சாகமாய் இருக்கேன் சார்,'' மூச்சு விடாதபடி பேசி முடித்தான், ரிஷி.
சுஜித்குமார் அதை வெகுவாய் ரசித்தபடியே, ''உங்க உற்சாகம், எனக்கு நல்லா புரியுது மிஸ்டர், ரிஷி. ஆனா, உங்க சேனலுக்கு இல்ல; எந்த சேனலுக்கும் என்னால பேட்டி கொடுக்க முடியாது. அது என் கொள்கை. உங்க செய்தி ஆசிரியர், அதை சொல்லலையா?'' என்றார்.
''எப்படி சார், 'மீடியா சப்போர்ட்' வேண்டாம்ன்னு நினைக்கறீங்க?''
''எனக்கு என் திறமை தான், முதல் ஆதரவு, ரிஷி. அடுத்து, அதை ரசிக்கிற ரசிகர்கள். இது போதும்.''
''ரசிகர்கள் கூட மன்றம் அமைக்க, நீங்க அனுமதிக்கலையே சார்.''
''ஆமாம். என் நடிப்பும், அது தொடர்பான சினிமாவும், ஒரு கேளிக்கை, பொழுதுபோக்கு; அவ்வளவு தான். ஓய்வு நேரத்துல, தியேட்டருக்கு வந்து படம் பார்த்துட்டு சந்தோஷமா திரும்பி போய், அவங்கவங்க சொந்த வேலைகளை பார்க்கணும்.
''அதை விட்டுட்டு, 'கட் - அவுட்' மற்றும் பால் அபிஷேகம் இதெல்லாம் தேவையில்லை. அதை நான் ஊக்கப்படுத்த விரும்பல. என் ரசிகர்கள், தியேட்டர்ல கை தட்டறதே போதும்.''
''நீங்க ரொம்ப கவரப் போய்தானே சார், இப்படி நடந்துக்கறாங்க?''
''அப்கோர்ஸ்... அதனால தான், என்னை மிக மிக நேசிக்கிற அவங்க நல்லா இருக்கணும்ன்னு, இப்படி சொல்றேன். நான் அவங்கள, 'எக்ஸ்பிளாய்ட்' பண்ண விரும்பல.
''ஒவ்வொரு வினாடியும், ஒரு தங்கச் சொட்டுன்னு, அறிஞர் சொல்லியிருக்கார். அந்த நேரம், என் ரசிகர்கள் வரையில ரொம்ப மதிப்பானது. அதை அவங்க வீணாக்கி, வாழ்க்கையில் பின்தங்கிடக் கூடாது. நான், என் வேலைய பார்க்கறா மாதிரி, அவங்கவங்க வேலைய பார்க்கட்டும்.''
சுஜித்குமார் அலட்டிக்கொள்ளாமல் சொன்ன பதில், ரிஷியை அடுத்து என்ன கேட்பது என்றே தெரியாதபடி ஊமையாக்கியது.
''கொஞ்சம் நானும் பேசலாமா?'' இடையில் வந்தாள், தமிழ்.
''அஞ்சு நிமிஷம் தானே இருக்கு தமிழ்... போனா போகட்டும்ன்னு, இன்னொரு அஞ்சு நிமிஷம் தரேன். கமான்...'' என்று அவள் பக்கம் திரும்பினார், சுஜித்.
''நான் கேட்க நினைச்ச கேள்விகளை எல்லாம் ரிஷியே கேட்டுட்டான். நீங்களும் தெளிவா பதில் சொல்லிட்டீங்க. இருந்தாலும், இதை கடந்து எனக்குன்னு ஒரு கருத்து இருக்கு. சொல்லலாமா சார்?''
''கமான்... கமான்...''
''இந்த நாட்டுல எவ்வளவோ, 'கேரியர்'கள்... எழுத்தாளர், தொழிலதிபர், அரசியல்வாதி, டாக்டர், விஞ்ஞானிகள்ன்னு... ஆனா, அவங்களுக்கெல்லாம் யாரும் ரசிகர் மன்றம் வைக்கிறதில்லை.
''ஒரு சினிமா, 'ஹீரோ'வுக்கு மட்டும் வைக்கிறாங்க. அந்த, 'ஹீரோ' படத்தை, பச்சை எல்லாம் குத்திக்கிறாங்கன்னா, அதுக்கு பின்னால ஒரு சைக்காலஜி இருக்கு சார்.''
''கமான்... என்ன அதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.''
''செய்ய முடியாததை செய்யிறவனைதானே, 'ஹீரோ'ன்னு சொல்றோம். சினிமால கூட,
10 பேர் வந்தாலும், அடிச்சு, மிதிச்சு, நடைமுறை வாழ்க்கையில ஒரு நுாலளவு சாத்யம் இல்லாத ஆட்டம் பாட்டத்தை நடத்திக் காட்டி, ஒரு மாய உலகத்துக்கு எல்லாரையும் கூட்டிகிட்டு போறீங்க.
''நிஜ வாழ்க்கையில, ரொம்ப சுமாரான அழகு, சராசரியான வாழ்க்கைன்னு வாழ்ந்துகிட்டிருக்கிற ஒரு மனுஷனுக்கு, அந்த மாய உலகம் ரொம்ப பிடிச்சிருக்கு. மனசுக்கும் இதமா இருக்கு.
''தனக்கு நடக்காததை, எங்கேயும் நடக்கவும் முடியாததை, 'ஹீரோ' நடத்தி காட்டும்போது, தனக்கே நடந்த மாதிரி ஒரு சந்தோஷம் அவனுக்கு. இந்த சந்தோஷத்தை, மற்ற, 'கேரியர்'ல யாரும் தர்றதில்லை. அதனால தான், சினிமான்னா, ஒரு க்ரஷ்; ஒரு க்ரேஸ்.''
''நீ சொல்றது சரி, தமிழ்... ரொம்ப சரி.''
''அப்படின்னா, நான் சொல்லப்போற இன்னொரு கருத்தையும் ஒத்துக்கணும் நீங்க.''
''சொல்லுங்க... அது என்ன...''
''இந்த, 'க்ரஷ், க்ரேஸை' தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்க, நீங்க விரும்பல... இது ரொம்ப நேர்மறையான விஷயம். அதேசமயம், அவங்க வளர்ச்சிக்கு நீங்க எதையாவது செய்யலாமே சார்.''
''நோட்டு புத்தகம் தர்றது, ரத்த தானம் பண்றது... இதுமாதிரியா? அதை தான், என் நண்பர்கள் நிறையவே செய்யிறாங்களே.''
''இல்ல சார்... உங்க பேரால மாவட்டத்துக்கு ஒரு நுாலகம், உங்க, 'சப்போர்ட்'டால ஊருக்கு ஒரு மெடிக்கல் சென்டர்... அதுவுமில்ல உங்களாலயோ, இல்ல உங்க ரசிகர்களாலயோ, ஒரு பெரிய ஆய்வகம். அப்புறம், வேலை வாய்ப்பு முகாம். பிளஸ் 2 மாணவர்களுக்கு
இலவச பயிற்சி.''
''நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப நல்ல விஷயங்கள் மட்டுமில்ல, பெரிய விஷயங்களும் கூட. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியவை. ஆனாலும், நான் அதை சொல்லி நழுவ விரும்பல. அதேசமயம், என்னை நம்பி கோடிகள்ல பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு, 'கால்ஷீட்' கொடுக்காம நான், இதை மட்டுமே செய்துகிட்டு இருக்க முடியாது.
''யோசிக்கறேன் தமிழ்செல்வி... ரொம்ப, 'மெர்ச்சுர்டா' இருக்கு உங்க பேச்சு. உங்க நண்பரையும் நீங்க விட்டுக் கொடுக்கல. உங்களோட ஏற்பட்ட இந்த சந்திப்பு, ஒரு நல்ல சந்திப்புன்னு சொல்வேன்,'' என்ற சுஜித்குமார், 'மாஸ்க்'கை கழற்றியபடியே அழகாய் புன்னகைத்தார்.
''சார், உங்க பேட்டி....'' தமிழ்ச்செல்வி இழுத்தாள்.
''தரேன்... ஆனா, இப்ப இல்லை. இப்பதானே விதை விழுந்திருக்கு... இது வளர்ந்து விருட்சமாகட்டும்.''
''எதுவும் அந்த நேரத்துல நடந்தாதான், சிறப்பு. இப்ப நடந்தா என், 'கேரியரு'க்கு, அது ஒரு வளர்ச்சியை தரும்,'' சாதுர்யமாய் அவரை வளைக்க பார்த்தாள், தமிழ்ச்செல்வி.
''ஆமாம் சார்... அப்படியே என் கனவுகளுக்கும் ஒரு வாய்ப்பை, கே.வி.ஏ.,கிட்ட கொஞ்சம் சொல்லி,'' என்று இடையில் புகுந்தான், ரிஷி.
அவர்கள் இருவரையும்
சில நொடிகள் ஆழமாக ஊடுருவிய சுஜித்குமார்,
''ஓ.கே., தமிழ்ச்செல்வி... ஆனா, ஒரு நிபந்தனை... என்னை நீங்கதான் பேட்டி எடுக்கணும்.
''நீங்க எதை விரும்பி சாப்பிடுவீங்க; உங்களுக்கு பிடிச்ச நடிகை யார்ங்கிற மாதிரியான கேள்விக்கெல்லாம் இடமே கிடையாது. உங்க கேள்விகள், நான் சொல்ற பதில்கள் எல்லாமே புதுசா இருக்கணும். ஓ.கே.,?''
''ஷ்யூர் சார்.''
''அப்ப நானே போன் பண்ணி சொல்றேன். இப்ப புறப்படறேன். மிஸ்டர் ரிஷி, உங்களுக்கு கே.வி.ஏ.,கிட்ட இருந்து சீக்கிரமாவே போன் வரும். பை...'' என்று எழுந்தார், சுஜித்.
''சார், ஒரே ஒரு, 'செல்பி' எடுத்துக்கலாமா?'' என்றான், ரிஷி.
''எடுத்துக்கலாம். ஆனா, அதை, 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்'ல, 'ஷேர்' பண்ணக் கூடாது.''
''ஓ.கே., சார்.''
அடுத்த சில நொடிகளில், ரிஷியின் அலைபேசி சதுரம், அவர்கள் மூவரையும் தன்னுள் அடக்கிக்கொண்டது.
சுஜித்குமார் காரும் புறப்பட்டு விட, பிரமிப்பு விலகாத நிலையில், தமிழ்ச்செல்வியை பார்த்தான், ரிஷி. பின், மெல்லிய குரலில், ''ரொம்ப ரொம்ப நன்றி தமிழ்,'' என்றான்.
''எங்க, ஐ லவ் யூன்னு சொல்லி சறுக்கிடுவியோன்னு பயந்துட்டேன்,'' என்றாள் அவளும். அவனுக்கோ, கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. — தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்