
* ஏ.நாகமணி, ஒட்டன் சத்திரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை முன்னாள், எம்.எல்.ஏ., நன்மாறன், குடியிருக்க அரசின் இலவச வீடு கேட்கிறாரே...
அரசு கொடுக்கும், எம்.எல்.ஏ., ஓய்வூதியத்தை கட்சியிடம் கொடுத்து விடுகிறாராம்... கட்சி கொடுக்கும் சிறிய தொகையில் குடும்பம் நடத்துகிறாராம்... இவருக்கு அரசு இலவச வீடு கொடுத்தால், ஊதியமே இல்லாத, ஓய்வூதியம் கிடைக்காத ஏழைகளின் நிலை என்ன?
கே. மாரிமுத்து, கிருஷ்ணாபுரம், விருதுநகர்: உமக்கு ஓட்டு போட பணம் கொடுத்தால், அதை வாங்கும் பழக்கம் உண்டா?
பணம் கொடுக்க ஆரம்பித்த பின், இத்தனை தேர்தல்களிலும், நான் வசிக்கும், காவேரி சாலைக்கு ஒருவர் கூட பணம் கொடுக்க வரவில்லையே!
கோ.ராஜேஷ் கோபால், நீலகிரி: தவறு செய்தால் தண்டனை நிச்சயம் எனத் தெரிந்தும் பலர், தவறுகள் செய்வதேன்?
விஞ்ஞானப் பூர்வமாக அதைச் செய்கின்றனர். இதை கருணாநிதி, ஊழலுக்கு எதிராக நியமிக்கப்பட்ட, சர்க்காரியா கமிஷனே சொல்லி விட்டது!இப்போது தான், வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கின்றனரே... என்ன பயம்?
* எஸ்.எ.ஜெயவீரன், கோவை: அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால், பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் மனுக்களை, ஸ்டாலின் என்ன செய்வார்?
மனுக்களை துண்டு, துண்டாக கிழிக்கும், 'ஸ்ரெட்டிங் மிஷினில்' போட்டு கிழித்து, எடைக்குப் போட்டு விடுவார்!
கே.கணேஷ், கடலுார்:அந்துமணியாரே... பெட்ரோல் விலை உயர்வை எப்படி சமாளிக்கிறீர்கள்?
நீங்கள், என் நீண்ட நாள் வாசகர் என்பதை இக்கேள்வியின் மூலம் அறிகிறேன். எனது கால் தான் பெட்ரோல்... எனது கார் தான், 'அட்லஸ்' மிதிவண்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!பெட்ரோல் விலை உயர்வால், எனக்கு எந்த பாதிப்புமில்லை!
மனோகர், கோவை: அகில இந்திய காங்கிரஸ், இனி, மெல்ல காணாமல் போகும் என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறாரே...
ஏற்கனவே, காங்கிரஸ் காணாமல் போய் விட்டதை, அவர் அறியார் போலும்... பாவம்!
ரா.சா. சந்திரசேகர், சென்னை: சசிகலா, 'இமேஜ்' தமிழக மக்களிடம் எப்படி உள்ளது?
ஊழல் செய்து, சிறைவாசம் அனுபவித்தவர் என்ற, 'இமேஜ்' தான் உள்ளது. அவரால், தமிழக அரசியலில் ஜொலிக்க முடியாது!