sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 21, 2021

Google News

PUBLISHED ON : மார் 21, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா-கே

அன்று மாலை, 6:00 மணி.

தெரு முனையில் இருந்த டீ கடைக்கு, காலாற நடந்து சென்றோம். அன்வர்பாய் மற்றும் குப்பண்ணாவும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

தன் இரு மகன்களும் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வருவதைப் பற்றி புலம்பியபடி வந்தார், அன்வர்பாய்.

அவருக்கு ஆறுதல் கூறிய குப்பண்ணா, 'என் பேத்தி, ஏதோ ஒரு போட்டியில், வென்றதற்காக, அவளுக்கு, கதை புத்தகம் பரிசாக தந்துள்ளனர். பேத்திக்கு, நான் தான் அதை படித்துச் சொல்வேன். அதில் ஒரு கதை படித்தேன்; சொல்றேன் கேளு...' என்று, கூற ஆரம்பித்தார்:

பொறுப்பில்லாத, ஊதாரி பிள்ளைகள் நால்வரை பெற்றிருந்த, அப்பா ஒருவர், தாறுமாறாக திரிந்தவர்களை கண்டு நொந்து போனார்.

அவர்களுக்கு பாடம் புகட்ட, மரணப் படுக்கையில் இருந்தபோது, 'நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் நகைகளாக்கி, புதைத்து வைத்திருக்கிறேன். நம் நிலத்தை தோண்டி, புதையலை எடுத்து, பிழைத்துக் கொள்ளுங்கள்...' என்று கூறி, உயிர் விட்டார்.

அப்பாவை இழந்த மகன்களுக்கு புத்தி வந்தது. அவரின் நோக்கத்தை கண்ணீரோடு புரிந்து கொண்டனர்.

மண்வெட்டி, கடப்பாறை எடுத்து, நிலம் முழுவதையும் தோண்டி புதையலை தேடவில்லை. நவீனமாக சிந்தித்தனர். 'மெட்டல் டிடெக்டர்'களை வரவழைத்து, நகை புதையல் இருந்த இடத்தை, நான்கே மணி நேரத்தில் கண்டுபிடித்து, விற்று பணமாக்கினர்.

'புல்டோசர்' கொண்டு நிலத்தை சமப்படுத்தி, ஆழ்குழாய் கிணறு போட்டு, நீரெடுத்து, நவீன முறையில் விவசாயம் செய்து, வெகுவாக விளைச்சல் கண்டதோடு, பிள்ளை குட்டிகளுடன், பெருவாழ்வு வாழ்ந்தனர்.

- என்று கூறி முடித்தவர், அன்வர்பாயை பார்த்து, 'எதற்கும் கவலைப்படாதீர்கள். அவர்களை குறை கூறுவதை விட்டு, நிம்மதியாக இரும். இக்காலத்து பிள்ளைகள் புத்திசாலிகள். நிச்சயம் திருந்தி, நல்லபடியாக இருப்பர்...' என்று, ஆறுதல் கூறினார், குப்பண்ணா.

கதை கேட்ட ஜோரில், இரண்டு மசால் வடை சாப்பிட்டு, டீ குடித்து அவரவர் இருப்பிடத்திற்கு திரும்பினோம்.



தமிழக உளவுத் துறையில், பல ஆண்டுகள், நான்கு முதல்வர்களிடம் பணியாற்றி ஓய்வு பெற்றவர், அடிஷனல் சூப்பிரண்டென்ட் ஆப் போலீஸ், வே.ராமநாதன்.

அவர், தன் அனுபவங்களை, 'மாண்புமிகு உளவுத்துறை' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

அதிலிருந்த சுவையான தகவல்கள் இது:

போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர்கள் கீழ் உள்ள அதிகாரிகள் மரியாதை தரவேண்டியது நியாயமானது. ஆனால், அவர்கள் வீட்டு நாய்க்கு கூட கீழ்படிந்து நடக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், சில சமயங்களில் உருவாகி விடும்.

சென்னை மாநகர காவல் துறை கமிஷனராக இருந்த ஒருவர், தன் வீட்டில் எருமை மாடு ஒன்றை ஆசையாக வளர்த்து, அதன் பாலில், பிற்பகல் நேரத்தில் காபி சாப்பிடுவது வழக்கம்.

அந்த எருமையை ஒருநாள் தெருவில் அழைத்து சென்று கொண்டிருந்தார், கமிஷனர் வீட்டு ஆர்டர்லி.

அப்போது, எருமை மாட்டு கொம்பில் இடித்து, நிலை தடுமாறி சைக்கிளுடன் விழுந்தார், அப்பகுதி சப் - இன்ஸ்பெக்டர். அவருக்கு கோபம் வர, எருமை மாட்டை, 'பவுண்டில்' அடைத்து விட்டார்.

'சார்... இது, கமிஷனர் வீட்டு மாடு...' என, கெஞ்சி பார்த்தார், ஆர்டர்லி.

அதை, அவர் காதில் வாங்கவே இல்லை.

மதியம், கமிஷனர் வீட்டிற்கு வந்து காபி கேட்க, விபரம் அறிந்து, கடும் கோபமடைந்தார்.

'கூப்பிடு அவனை...' என, கர்ஜித்தார்.

ஓடோடி வந்தார், சப் - இன்ஸ்பெக்டர்.

'நீ போய், 'பவுண்டில்' உள்ள மாட்டை அவிழ்த்து, என் வீட்டிற்கு அழைத்து வந்து விடு. அது தான் உனக்கு தண்டனை...' என, கூறி விட்டார்.

பவுண்டிற்கு, 'யூனிபார்மிலே'யே சென்று, மாட்டை இழுக்க, அது முரண்டு பிடித்தது. புல்லை போட்டு, பல்லை காட்டி, கொஞ்சி, கெஞ்சி ஒரு வழியாக, கமிஷனர் வீட்டில் ஒப்படைத்து, 'தப்பித்தோம், பிழைத்தோம்...' என, ஓட்டம் எடுத்தார், அந்த சப் - இன்ஸ்பெக்டர்.

திரையுலகில், எப்படி நுழைந்தாரோ, அப்படியே இன்னமும் இளமையாக இருப்பவர், அந்த நடிகர். அவருக்கு, ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.

வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு வந்த ஒரு போராட்ட இயக்கத்திற்கு, தமிழகத்தில் பல ஆதரவாளர்கள் உண்டு. கொஞ்சம் மிரட்டலாகவே பணம் வசூலிப்பர். இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவர், நடிகருக்கு போன் செய்து, ஒரு பெருந்தொகையை கேட்டார்.

முதலில் தயங்கிய நடிகர், பிறகு சம்மதித்தார்.

ஆனால், இந்த விஷயம், மூன்றாம் நபர் ஒருவருக்கு தெரிந்து, அவர் வழியாக விஷயம் உளவுத்துறைக்கும் கசிந்தது.

அன்றிரவு, அப்போதைய முதல்வர், கருணாநிதிக்கும் தகவல் போனது.

சர்ச்சைக்குரிய இயக்கம் என்பதால், நடிகருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்று யூகித்து, 'பணம் கை மாறுவதை தடுத்து விடுங்கள்...' என்று, உளவுத்துறைக்கு உத்தரவிட்டார், கருணாநிதி.

அந்த பணி, என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

சற்று நேரம் யோசித்தேன்.

அந்த நடிகரையே, பணம் தரமாட்டேன் என்று சொல்ல வைக்க வேண்டும்.

இதில், நாங்கள் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்றும் வெளியே தெரியக் கூடாது.

அவர் வீட்டிற்கு சென்று, 'நீங்கள், அந்த இயக்கத்துக்கு பணம் கொடுக்க போறீங்களா...' என்று, நேரடியாக கேட்டேன்.

'ஆமாம்... எனக்கு வேற வழி தெரியவில்லை. என் குழந்தைகள், பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்கோ அல்லது என் உறவினர்களுக்கோ ஆபத்து வரக்கூடாதல்லவா...' என்றார்.

'பணம் கொடுத்தால், நீங்கள் நிச்சயம் பிரச்னையில் சிக்குவீர்கள். உங்கள் வீடு, இப்போது, சி.பி.ஐ., கண்காணிப்பில் இருக்கிறது...' என்றேன்.

'அப்படியா...' நம்ப முடியாமல் கேட்டார்.

'கொஞ்சம் வெளியே போய் எட்டிப் பாருங்கள்...' என்றேன்.

பதற்றமாய் வெளியே ஓடினார்.

அவர் வீடு இருந்த தெருவில், ஆங்காங்கே சபாரி அணிந்த, ஒட்ட வெட்டிய கிராப் தலையுடன், முரட்டு மனிதர்கள் சிலர், குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர்.

அதை பார்த்து, மிரண்டு போனார்.

'அந்த இயக்கத்துக்கு, பணம் அளிக்க மாட்டேன்...' என்று உறுதியளித்தவுடன் தான், நான் திரும்பினேன்.

நான் கிளம்பிய சில நிமிடங்களுக்கெல்லாம், பணம் கேட்டு, அவருக்கு போன் வந்து, அவரும், தைரியமாக மறுத்து விட்டார்.

இதுபற்றிய தகவல், எங்கள் அலுவலகத்துக்கு, வேறு வழியாக வந்து சேர்ந்தது.

நடிகர் வீட்டுக்கு முன், சபாரி அணிந்து வலம் வந்தவர்கள், சி.பி.ஐ., அல்ல, போலீஸ் என்பதை சொல்லவும் வேண்டுமோ!






      Dinamalar
      Follow us