PUBLISHED ON : மார் 21, 2021

பானுமதி எனும் கிரியேட்டர்!
நடித்தல், பாடுதல், பாட்டெழுதுதல், இசையமைத்தல், கதை வசனம் எழுதுதல், படம் இயக்குதல், திரைக்கதை அமைத்தல் மற்றும் தயாரித்தல் என்று, திரைப்பட துறையின் எட்டு வகை பணிகளையும் சிறப்பாக செய்தார், பானுமதி. அதனால், 'அஷ்டாவதானி' என்று பட்டம் கொடுத்து கூப்பிட்டனர்.
நடிகையாக மட்டும் இருந்திருந்தால், வந்தோமா, நடித்தோமா, நாலு காசு பார்த்தோமா என்று இருந்திருப்பார், பானுமதி. 'ஆர்டிஸ்ட்' என்பதற்கு அப்பால், 'ரைட்டர்' மற்றும் 'கிரியேட்டர்' ஆக இருந்தார். அதனால், சினிமா துறையின் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தினார்.
இதை, அவரின் தலையிடாக மற்றவர்கள் கருதினர். அவரோ, செய்வன திருந்த செய்ய நினைத்தார்.
ஒரு நடிகை, கதை கேட்டால், அதில் தனக்குள்ள, 'ஸ்பேஸ்' மற்றும் கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும் கவனிப்பார்.
'கிரியேட்டர்' ஆக இருப்பவர், அந்த கதை எந்த வடிவத்தில் இருக்கிறது, அதற்கான, 'ஸ்கிரீன் ப்ளே' எப்படி, அந்த கதாபாத்திரம் எந்த குணாதிசயம் கொண்டது என்று கவனித்து, பார்ப்பார்.
பானுமதி மூன்று மொழிகளில் நடித்து, 1949ல் வெளியானது, அபூர்வ சகோதரர்கள் படம். அதன் பெரிய வெற்றியும், கதை சொன்ன விதமும் அவருக்குள், ஒரு புதிய திரைக்கதைக்கான விதையை போட்டது.
அது, இரண்டு சகோரதரர்களின் கதை. அண்ணன், அப்பாவி, சாது; தம்பி, முரடன், சண்டைக்காரன். இந்த திரைக்கதைக்கு புடவை அணிவித்தால் எப்படியிருக்கும்?
ஆண் கதாபாத்திரங்களை பெண்களாக மாற்றினால்... இந்த சிறு கேள்வி, அவருக்குள் ஆல மரமாய் விரிந்தது.
மென்மையான அப்பாவி அக்கா, வாயாடியான முரட்டு தங்கை சேர்ந்தால், அபூர்வ சகோதரிகள் என்று புதிய வடிவத்தில் யோசித்தார்.
திடீரென்று ஒருநாள், 'சண்டி - சம்பா' என்ற, அக்கா - தங்கை கதாபாத்திரங்களை உருவாக்கினார். அபூர்வ சகோதரர்கள், அபூர்வ சகோதரிகளாக உருமாற்றம் செய்து, திரைக்கதை, வசனம் எழுதினார்.
சண்டி - சம்பா என்ற, அக்கா - தங்கை வேடங்களுக்குள் அவரே (பானுமதியே) நுழைந்தார். அதோடு படத்தை தாங்கிப் பிடிக்க, வெற்றியை கூடுதலாக்க, இன்னொரு பலமான கதாபாத்திரம் தேவை என்பதை உணர்ந்தார், 'கிரியேட்டர்' பானுமதி.
தனக்கு ஜோடியாக தெலுங்கில், தமிழில் பிரபலமான, என்.டி.ராமாராவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.
படத்திற்கு, சண்டி ராணி என்று, பொருத்தமான தலைப்பு வைத்தார். ஒரு வேடத்தில், திமிரான, அலட்சிய பாணி நடிப்பும், அழகான வாயாடித்தனமும் மிளிர வெளுத்துக் கட்டினார். இன்னொரு வேடத்தில், சாந்த சொரூபியாக, ரோஜாபூவின் அழகும், மென்மையுமான, 'பர்பாமென்சை' வெளிப்படுத்தினார்.
தமிழில் தனக்குள்ள மார்க்கெட்டையும் பயன்படுத்திக் கொள்ள, 1953களில், சண்டி ராணி படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்று, மூன்று மொழிகளில் நடித்து, இயக்கினார். 'பரணி பிக்சர்ஸ்' சார்பாக தயாரித்து, ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிட்டார், ராமகிருஷ்ணா.
வெள்ளித் திரைக்கு வந்த, சண்டி ராணி, ஹிந்தியை தவிர தமிழ், தெலுங்கில் வெற்றி மாலை சூடியது. நடிகை மட்டுமல்ல, 'கிரியேட்டர்' என்பதை, பல தருணங்களில் நிரூபித்திருக்கிறார், பானுமதி.
இவர் எழுதி, இசையமைத்து, நடித்து இயக்கிய, அந்தா மன மன்சிகே என்ற தெலுங்கு படம், 1972ம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருது பெற்றது.
பின்னர், இப்படியும் ஒரு பெண் என்று, தமிழில், ஆரூர்தாசை வசனம் எழுத வைத்து வெளியிட்டார். சிறந்த இசை அமைப்பும், சமூக சீர்திருத்தக் கருத்துகள் கொண்ட நல்ல படம் என்று, சர்வதேச பெண்கள் ஆண்டில் கவுரவிக்கப்பட்டது.
அஷ்டாவதானி பானுமதி, 15 படங்களை இயக்கியுள்ளார். அதில், சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். திரைக்கதை எழுதி, அவரே நடித்தும் இருக்கிறார்.
வரவிக்ரேயம் படத்தில், 1937ல், கதாநாயகியின், தங்கை வேடத்தில், 13 வயதில் பாடி நடித்தார். 1992ல், 67 வயதில் நடித்த படம், செம்பருத்தி. நடிகர் பிரசாந்தின் பாட்டியாக, 'செம்பருத்தி பூவு சித்திரத்தை போல' என்று, நான்கு வரி பல்லவியை பாடி, நடித்த, அவரின் கடைசி படமும் வெற்றி பெற்றது.
கடந்த, 1994ம் ஆண்டில், தன், 69வது வயதில், நாலோ நேனு என்கிற ஆடியோ, 'பயோகிராபிகல்' சினிமா புத்தகம் எழுதினார், பானுமதி. அதற்கு, ஜனாதிபதியின் தேசிய விருது கிடைத்தது.
பெண் இனத்திற்கு பெருமை சேர்த்த சாதனை பெண்மணி பானுமதி, 'டிவி' வரலாற்றில், முதன் முறையாக, அத்தகாரு கதலு (மாமியாரின் கதைகள்) துார்தர்ஷனில், மெகா தொடராக எழுதி, இயக்கி நடித்தார்.
இன்றைய தெலுங்கு முன்னணி நடிகரான, அல்லு அர்ஜுனை, மாஸ்டர் நடிகராக, தொடர்களில் அறிமுகப்படுத்தியவர், டாக்டர் பி.பானுமதி தான்.
முக்கிய கதாநாயகியாக, 1950 - 65களில், 'பிசி'யாக இருந்தபோதும், ஒவ்வொரு படத்திலும் சொந்த குரலில் பேசுவதையும், தன் அப்பாவுக்கு வாக்கு கொடுத்தபடி, படத்துக்கு படம், பாடல்கள் பாடியும் வந்தார்.
திருமதி பானுமதி ராமகிருஷ்ணாவின், 60வது பிறந்த தினத்தையொட்டி, மலரும் நினைவுகள் என்ற பெயரில், தமிழிலும், தெலுங்கிலும், சித்ர மாலா என்று, ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
ஏவி.எம்.,மின், அன்னை படத்தில், ஒரு பிரச்னை எழுந்தது. 'நடிக்க மாட்டேன்...' என்றார், பானுமதி. என்ன பிரச்னை?
பானுமதியின் கண்டிப்பு மிக்க குணம் தான், அவருக்கு, பிளஸ்சும், மைனசும்
* கணவர் வரும்போது, எழுந்து நின்று மரியாதை தரும் இந்திய பண்பாடு கொண்டவர்
* தன் வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளுக்கு பெண் தெய்வங்களின் பெயர் சூட்டி அழைப்பார்.
— தொடரும்
சபீதா ஜோசப்