தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரி —

என் வயது: 56. ரெடிமேட் ஆடைகள் விற்கும் கடை நடத்துகிறேன். மனைவி வயது: 50. என்னுடன் சேர்ந்து, கடையை கவனித்துக் கொள்கிறாள். எங்களுக்கு இரண்டு மகள்கள். இருவருமே திருமணமாகி, அவரவர் கணவன் குழந்தைகளுடன் வசிக்கின்றனர்.

மனைவியோடு பிறந்த மூன்று இளைய சகோதரிகளும், திருமணமாகி உள்ளூரில் தான் இருக்கின்றனர். முதலிரு கொழுந்தியாள்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள். கடைக்குட்டி கொழுந்தியாளுக்கு, ஒரு மகன், ஒரு மகள்.

ஒட்டு மொத்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு, கடைக்குட்டி கொழுந்தியாளின் மகன் தான். அவனுக்கு, வயது: 18. பிளஸ் 2 முடித்து, கல்லுாரியில் சேரப் போகிறான்.

ஒரு உண்மையை கூறுகிறேன். கடைக்குட்டி கொழுந்தியாளுக்கும், எனக்கும் இடையே ரகசிய காதல் இருந்தது.

ஒருநாள் இரவு, அவள் கணவர் ஊரில் இல்லை. எங்களுக்குள் ஓரிரவு தாம்பத்தியம் நடந்தது. அதன் விளைவாக கருத்தரித்தவன் தான், கடைக்குட்டி கொளுந்தியாளின் மகன். கருத்தரித்த நாள் கணக்கு பார்த்து அவன் எனக்கு பிறந்தவன் என்பதை கொழுந்தியாளும், நானும் உறுதி செய்தோம்.

'எந்த தருணத்திலும், இந்த உண்மையை வெளியே சொல்லக் கூடாது...' என, சத்தியம் வாங்கினாள், கொழுந்தியாள்.

சமீபத்தில் இரண்டு விஷயங்கள் நடந்தேறின. முதலாவது, மாமனார், தன் நான்கு மகள்களில், யார் ஆண் குழந்தை பெற்றுக் கொள்கிறாரோ, அவரின் ஆண் குழந்தைக்கு, 1 கோடி ரூபாய் சொத்தை உயில் எழுதி வைத்திருந்தார். அந்த உயிலை சில மாதங்களுக்கு முன் வக்கீல் படித்துக் காட்டினார்.

இரண்டாவது விஷயம், கடைக்குட்டி கொழுந்தியாளின் கணவருக்கும், எனக்கும் இடையே சிறு வாக்குவாதம் முற்றி, பெரும் சண்டையாய் வெடித்தது.

'பொட்டப்பிள்ளைகளா பெத்து போட்டிருக்கிற மருமகன்மாரில், நான் மட்டும்தான்டா ஆம்பிளபிள்ளை பெத்திருக்கேன். அதனால, நான்தான்டா உண்மையான, ஆண் மகன். நீ புடவைதான் கட்டிக்கிடணும். என் மகனுக்கு, 1 கோடி ரூபா சொத்து கிடைக்கப் போகுது. பத்து பைசா கூட கிழவன் நமக்கு எழுதி வைக்கலேயேன்னு சுவத்துல முட்டிக்கடா...' என, கொக்கரிக்கிறார், சகலை. சண்டை, கொலை மிரட்டல் வரை போனது.

எனக்குள் பழிவெறி தலைவிரித்து ஆடுகிறது.

'நீ, உரிமை கொண்டாடும் மகன், உண்மையில் என் மகன். சந்தேகமாயிருந்தா, டி.என்.ஏ., பரிசோதனை பண்ணி பாரு. ஆம்பிள பிள்ளையை உனக்கு பெத்துக்குடுத்த நான்தான்டா உண்மையான, ஆண் மகன். மகனை,

1 கோடி சொத்துடன் என்னிடம் ஒப்படைத்து விடு...' என, கேட்கப் போகிறேன்.

டி.என்.ஏ., ஆதாரத்தை வைத்து, என் மகனையும், அவனுக்கு சேரவேண்டிய சொத்தையும் நான் சட்டப்படி அடைய முடியுமா, சகோதரி?

இப்படிக்கு,

அன்பு சகோதரர்.


அன்பு சகோதரருக்கு —

சோம்பேறி குயில், தன் முட்டைகளை காக்கை கூட்டில் இட்டுச் செல்லும். தன் முட்டைகளுடன், குயில் முட்டைகளையும் சேர்த்து அடைகாத்து குஞ்சு பொறிக்கும், காகம்.

குஞ்சுகளுக்கு, காகம் தொடர்ந்து இரை ஊட்டும். ஒரு கட்டத்தில் குயிலின் வித்தியாச குரல் கண்டு, அதை விரட்டிவிடும், காகம். இதைதான், 'காக்கை கூட்டு குயில்கள்' என்பர்.

உன் விஷயத்தில் காக்கை கூட்டு குயில், திருமண பந்தம் மீறிய உறவில் பிறந்த ஆண் மகன்.

இன்று, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிறைய காக்கை கூட்டு குயில்கள் இருக்கின்றன. உருவ சாயல் வித்தியாசம் தெரிந்தாலும், குடும்ப நலனுக்காக, பலர் மவுனம் காக்கின்றனர். ஒருதலைமுறைக்கு பிறகு, இந்த பிரச்னை தலையெடுக்காமல் ஆழ புதைந்து விடுகிறது.

கணவனுக்கு துரோகம் செய்திருக்கிறாள், கொழுந்தியாள். நீ, உன் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறாய். இருவரின் கூட்டு துரோகத்தை ஊரறிய முரசறைந்து அறிவிப்பது, சரியல்ல.

1. பணத்துக்காகவும், பழி வாங்கலுக்காகவும் உங்கள் நால்வர் குடும்பங்களில் புயல் வீச செய்யும் இழிசெயலை செய்யாதே. ஓரிரவு சில நிமிட தாம்பத்திய சுகத்துடன், உன் பங்களிப்பு முடிந்து விட்டது. 18 ஆண்டுகள், உன் சகலை தான் அவனை, தன் மகனாக பாவித்து வளர்த்திருக்கிறார். அவருக்கு தான் அவன் மேல் முழு உரிமை. அதை பறிக்க நினைப்பது பெரும் குற்றம்.

2. தெரிந்தோ தெரியாமலோ, கடைக்குட்டி கொழுந்தியாளின் மீது காதலை பொழிந்திருக்கிறாய். அவளுக்கும் உனக்குமான தகாத உறவை, நீ அறிவிப்பதன் மூலம், அவளது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்கிறாய். விஷயம் தெரிந்தால், சகலை, அவளை விவாகரத்து பண்ணக்கூடும் அல்லது கொலை கூட செய்வார். மற்ற சகலைகளும் தங்களது மனைவியரின் ஒழுக்கத்தை உன்னோடு இணைத்து பார்த்து, சந்தேகப்படக்கூடும்.

3. நீதிமன்றங்களில், இந்த மாதிரியான விஷயங்களை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமல் தள்ளுபடி செய்து விடுவர். சகலையின் மகன், கள்ள உறவில் பிறந்தவனாக கருதப்படுவானே ஒழிய, உன் மகனாக அறிவிக்கப்பட மாட்டான்.

4. இரு குடும்பங்களும் தங்களுக்குள் பேசி, அவர்களது மகனை, உன் கஸ்ட்டிக்கு அனுப்புகின்றனர் என, வைத்துக் கொள்வோம். அவன், உன்னை அருவருபாய் பார்ப்பானே தவிர, ஒரு நாளும் அப்பா என்று அழைக்க மாட்டான். பெற்ற அம்மாவையும் இழிவாக பார்ப்பான். உங்களிருவர் வாழ்க்கையும் நரகமாகும்.

5. உன் குடும்பமும், சகலை குடும்பமும் ஒரே ஊரில் இருந்தால், உன் வீட்டை, வெளியூருக்கு மாற்று. பழிவாங்கலில் சிறந்தது, மன்னிப்பதே. குழந்தை பெறுவதோ அல்லது குறிப்பாக ஆண் குழந்தை பெறுவதோ ஆண்மை அல்ல.

பொருளீட்டி, குடும்பத்தை நிர்வகித்து, குடும்ப அங்கத்தினர்களை பராமரித்து, ஆல மரம் போல குடை விரிப்பதே ஆண்மை. சிறந்த ஆண் மகன் என்ற பட்டம், சகலை உனக்கு கொடுத்தது தான். நீ உன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. சண்டையில் சொல்லப்படும் வசவு வார்த்தைகளுக்கு, ராணுவ மரியாதை தர வேண்டியதில்லை.

6. 'எத்தனை கோப்பையில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றே ஆகும்...' என்றான், கண்ணதாசன். நான்கு சகோதரிகளும் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள், ஏறக்குறைய ஒரே உடலமைப்பை தான் கொண்டிருப்பர்.

மனைவியுடன் திருப்தியான தாம்பத்தியம் மேற்கொள்ளும்போது, அவளின் தங்கையுடன் திருட்டு தாம்பத்தியம் ஏன் சகோதரரே... இது, அர்த்தமில்லாத அற்பதனமான சாகசம். பொதுவாக, கொழுந்தியாள் மற்றும் மச்சினிகளிடம் இருந்து விலகி நிற்பது, மிக நல்லது.

என்றென்றும் பாசத்துடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us