தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நினைத்தது நிறைவேறும்!

நினைத்தது நிறைவேறும்!

நினைத்தது நிறைவேறும்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்ல வார்த்தைகள் சொல்லி, நல்லதே நினைத்தால், கஷ்டப்படாமலே நம் எண்ணங்கள் பலிக்கும். சந்தேகமே இல்லை. இதை விளக்கும் வரலாற்று நிகழ்வு இது:

சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூரில் இருந்து, வடதிசையில், 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, நாகலாபுரம். கிருஷ்ண தேவராயர், தன் அம்மாவின் பெயரில் உருவாக்கிய ஊர். அந்த ஊரில், 16ம் நுாற்றாண்டில் நடந்த வரலாறு.

கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தை முன்னிட்டு, திருத்தல யாத்திரை செய்தபடி வந்தார், கிருஷ்ண தேவராயர். நாகலாபுரத்திற்கு வந்தவர், மக்களின் நிறை, குறைகளை கேட்டார்.

'மன்னா... குறையொன்றும் இல்லை. இந்த ஊரில், உத்தமரும், கல்விமானும், ஹரியிடம் பக்தியும் கொண்ட ஒருவர் இருக்கிறார். அவரால் கல்வி, பக்தி, நல் ஒழுக்கம் ஆகியவை நன்கு வளர்கின்றன.

'உங்களிடம் அமைச்சராக இருக்கும் வடமலையப்பரின் தம்பி தான், அவர். அவருடைய ஹரி பக்தியை முன்னிட்டு, நாங்கள் அவரை, 'ஹரிதாசர்' என அழைக்கிறோம்...' என, விரிவாக கூறினர்.

'நீங்கள் சொல்லும் ஹரிதாசரை, நாளை என்னிடம் அழைத்து வாருங்கள்...' என்றார்.

மறுநாள் அதிகாலை-

'நாராயணா... காலில்லாதவன் மலை மீது ஏற ஆசைப்பட்டதைப் போல, இங்கே உனக்காக ஒரு கோவில் கட்ட வேண்டுமென்பது அடியேனின் நெடுநாளைய ஆசை. நிறைவேற்றி வை ஐயா...' என்று வேண்டியபடியே, தியானத்திலிருந்து எழுந்தார், ஹரிதாசர்.

ஹரிதாசரின் எண்ணத்தை நிறைவேற்ற, கிருஷ்ணதேவராயரின் கனவில் எழுந்தருளி, 'மன்னா... எம் பக்தனான ஹரிதாசனின் விருப்பப்படி, எனக்காக ஒரு கோவில் கட்டு...' என்று கூறி மறைந்தார், திருமால்.

கிருஷ்ணதேவராயருக்கு மெய் சிலிர்த்தது.

அதே நேரம், ஊர் மக்கள் அனைவரும் ஹரிதாசரிடம், 'சுவாமி... மன்னர், உங்களை அழைத்து வரச்சொன்னார்...' என்று சொல்லி, அவரை அழைத்துப் போய், மன்னர் முன் நிறுத்தினர்.

'ஹரிதாசரே... மன்னர்களான நாங்களெல்லாம் வரியை வாங்கி, மக்களுக்கு நன்மை செய்கிறோம். ஆனால், உங்களைப் போன்ற புலவர்களோ, வரி வாங்காமல், மக்களை நல்வழியில் செலுத்துகிறீர்கள். நீங்கள் தான் உயர்ந்தவர்கள்.

'இவ்வூரில் ஒரு கோவில் கட்டும்படி, கனவில் கட்டளை இட்டிருக்கிறார், பகவான். கோவிலை கட்டி, அதன் நிர்வாகத்தையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். மறுக்காமல் ஏற்க வேண்டும்...' என, வாக்கு கொடுத்தபடி செய்தார், மன்னர்.

மேலும், 'நாகலாபுரத்தையே இந்தக் கோவிலுக்கு சர்வ மானியமாக கொடுத்து விட்டேன்...' என, அதை ஒரு கல்லில் செதுக்கி, அளிக்கவும் செய்தார்.

சாலிவாகன சகாப்தம் 1445; கி.பி. 1521; சுபானு வருடம், கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, வளர்பிறை துவாதசி அன்று, அந்த தர்மம் செய்யப்பட்டது.

ஹரிதாசரின் அழுத்தமான எண்ணத்தை, மன்னர் மூலம் நிறைவேற்றி வைத்தார், பகவான்.

தெய்வம் ஒரு போதும் கைவிடாது. நல்லதே நினைப்போம், அழுத்தமாக நினைப்போம்!

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us