தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது: 35; பொறியியல் பட்டதாரி. 10வது படித்த, சுயதொழிலில் நன்கு சம்பாதிக்ககூடிய, அழகான மாப்பிள்ளையை எனக்கு கட்டி வைத்தனர், பெற்றோர்.

நாத்தனார் திருமணமாகி, மாமியாருடன் சேர்ந்து வாழ்கிறாள். அவளது கணவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். படிப்பறிவற்ற கணவன் என்கிற அதிருப்தி, முறையான தாம்பத்தியத்தில் அகன்றது.

என் மாமனார், கணவனின் சுயதொழிலுக்கு பெரும் துணையாக இருந்தாலும், மொடா குடிகாரர். மாமியார் மனநிலை சரியில்லாதவர். அவர்களை கழற்றிவிட்டு தனிக்குடித்தனம் போக திட்டமிட்டேன்; உடன்படவில்லை, கணவர்.

முதல் குழந்தையை கருவுற்றிருந்தபோது, பினாயிலை சிறிது குடித்து, மீதியை உடலில் தெளித்து, தற்கொலை நாடகம் போட்டேன். தனிக்குடித்தனம் போக ஒப்புக்கொண்டார், கணவர்.

அப்பாவின் சேமிப்பு பணம் முழுவதும் வாங்கி, சொந்த வீட்டில் என்னை குடியேற்றினார், கணவர்.

மாமனார் - மாமியார் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். மகளுக்கு பணம் கொடுத்து, தினமும் அவள் சமைத்த உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். மாமியாருக்கு மனநல சிகிச்சை தொடர்கிறது.

இன்றும், மகனின் சுயதொழிலுக்கு முதுகெலும்பாய் இருந்து பாடுபடுகிறார், மாமனார். பேரும், உழைப்பும் மாமனாருடையது. சம்பாத்தியம், கணவருக்கு. முதல் ஆண் குழந்தை பிறந்தது.

என்னை பழிவாங்க, மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்தே தீருவேன் என, சபதம் எடுத்திருந்தார், மாமனார். இரண்டாம் திருமண ஆசையை மகனுக்கு மெதுமெதுவாக ஊட்டவும் செய்தார்.

வேலைக்காரி வைத்தால், கணவர் திசை மாறி விடுவாரோ என பயந்து, வீட்டு வேலைகள் முழுவதையும் தலைமேல் இழுத்துப் போட்டு, செய்ய ஆரம்பித்தேன்.

கணவருக்கு ருசியாக சமைத்துப் போட்டேன். அவரின் இரண்டாம் கல்யாண ஆசையை, 'சென்டிமென்ட்'டாய் பேசி பேசி, களைய முயன்றேன். இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. என் முழு கட்டுப்பாட்டில், கணவரை கொண்டு வந்து விட்டேன்.

இப்போது, மூத்த மகனுக்கு, 8 வயது. இளைய மகனுக்கு, 4 வயது. சுயதொழிலில் முழு வெற்றியடைந்து காரெல்லாம் வாங்கி விட்டார், கணவர். என்னை நடமாடும் நகை கடை ஆக்கிவிட்டார்.

எல்லாம் சந்தோஷமாய் போய்க் கொண்டிருக்கும்போது, 'என்னம்மா நீ... வீட்டை சுத்தமா வெச்சுக்க மாட்டேங்கற... சமையல் பாத்திரமெல்லாம் கப்படிக்குது... சோறு வாயில வைக்க விளங்கமாட்டேங்குது...

'அப்பா... ஏன்ப்பா இந்த குரங்கை கட்டின, சகிக்கல... எனக்கு, இந்தம்மா வேணாம்... வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அழகான ஒரு அம்மாவை கொண்டாப்பா...

'எனக்கு, வீட்டுப்பாடம் சொல்லித்தர உனக்கு தெரியலையே... நீ எப்படி டிகிரி படிச்ச...

'அப்பா... அம்மா மூஞ்சி குருவி மூஞ்சி மாதிரி இருக்கு. அம்மா ஒரு சரியான சித்திரகுள்ளி, குள்ள கத்திரிக்கா. பேசாம அம்மாவை சர்க்கஸ்ல சேர்த்துவிடு...'

- இப்படி சதா என்னை, தேள் மாதிரி கொட்டிக் கொண்டே இருக்கிறான், மூத்த மகன்.

நேரில் மட்டுமல்ல, போனிலும் கணவரிடம் என்னை பற்றி புகார் தான். என்னோடு மிகவும் ஒன்றியிருப்பான், இளைய மகன். மூத்த மகனின் லுாட்டி தாங்காமல், தற்கொலை எண்ணம் எழுகிறது. கண்ணீர் விடாத நாளில்லை.

நான் ராஜ வாழ்க்கை வாழ்வதாக நம்பும் என் தரப்பு உறவினர்களிடம், உண்மையை கூற மனம் தடுக்கிறது. என்ன செய்யலாம் அம்மா?

இப்படிக்கு,

துர்பாக்கியசாலி மகள்.


அன்பு மகளுக்கு —

'ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு' என்ற நியூட்டனின் விதியை, நீ படித்ததில்லையா?

'விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்... வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற சொலவடைகளை, உனக்காக தான் சொல்லியிருக்கின்றனர்.

கணவன், தன் மனைவியுடன் முழு திருப்தியடைந்து சீதாராமனாக வாழ்வது, அவன் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். பலதார மணத்துக்கு ஆசைப்படுபவனை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி, அகழி சூழ் மாளிகையில் வைத்தாலும், வீடு தங்க மாட்டான்.

கணவரை அன்பால் வசப்படுத்த வேண்டும். ராணுவ கண்டிப்பு, ரகசிய வெறுப்பை விதைத்து விடும். உன் கணவரிடம், ரகசிய வெறுப்பு மண்டி கிடக்கிறது.

உன் வீட்டிற்குள் என்ன நடக்கிறதென பார்ப்போம்.

'சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்பர். வீட்டிற்கு வெளியே மாமனார் என்ற எதிரியையும், வீட்டுக்குள்ளே கணவர் என்ற எதிரியையும் சம்பாதித்து வைத்திருக்கிறாய். அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உன்னை பற்றி, மகனிடம் அவதுாறு பேசுகின்றனர்.

நீ ஒரு அம்மா அல்ல, ராட்சசி என்ற படிமம், உன் மகனுக்குள் உருவாக்கப்பட்டு விட்டது. இந்த அவதுாறு பிரசாரத்துக்கு இன்னும் பலியாகவில்லை, இளைய மகன். அதனால், உன் மீது அவன், வெறுப்பை உமிழாதிருக்கிறான்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...

* மாமனாரிடம் சமாதானக் கொடி காட்டு. உன்னுடைய இறந்த கால துர் நடத்தைக்கு, மாமனாரிடம் இதயப்பூர்வமாய் மன்னிப்பு கேள். வாடகை வீட்டை காலி செய்து, அவர்களை உன் வீட்டுக்கு வரச்சொல். அவர்களின் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடு.

நாத்தனாரிடம் உறவுக்கரம் நீட்டு. உன் செய்கையை நடிப்பு என எண்ணுவார், மாமனார். நீ தொடர்ந்து நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மனம் மாறுவார்; மகனுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கும் எண்ணத்தை விட்டொழிப்பார்

* வீட்டிற்கு, 40 வயதான, 'பெர்சனாலிட்டி' குறைவான, அதேநேரம், சுறுசுறுப்பான வேலைக்காரியை பணியமர்த்து. வீட்டையும், சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வை

* கணவரை கட்டியிருக்கும் கயிற்றின் நீளத்தை அதிகப்படுத்து. அவர் சுதந்திரமாய் இருக்கட்டும். கணவரின் மீது வெறுப்பூட்டும் கட்டுப்பாடுகளை விதிக்காதே. எதிர்பார்ப்பு இல்லாத அன்பை துாவு. நீ அழகாய் இல்லை என்ற தாழ்வுமனப்பான்மையை, முகத்திலும், நடவடிக்கையிலும் வெளிப்படுத்தாதே. இரண்டு மகன்களின் மீதும், அன்பை கொட்டு. நீ கொட்டும் ஒரு மடங்கு அன்புக்கு, 10 மடங்கு அன்பை திருப்பி காட்டுவார், கணவர்

* உன் மகன் செய்யும் எதிர்மறை விமர்சனங்களை புன்னகையுடன் எதிர்கொள். அவனது அதிருப்திகளை சரி செய்யும் வித்தைகளை கற்றுக்கொள்.

'மகனே... என் உருவத்தை கேலி செய்யாதே. என் உருவத்தை பாதி நகல் எடுத்து தான் நீ பிறந்திருக்கிறாய். பெற்ற தாய்க்கு வேறெந்த பெண்ணும் ஈடாக மாட்டார்கள். உன் அப்பா வேறொரு திருமணம் செய்தால், சித்தி கொடுமை கிளம்பும். அவளுக்கு பிறக்கும் குழந்தையை கவனிப்பாளா, உன்னை கவனிப்பாளா...

'நான் பாடம் சொல்லிக் கொடுப்பது உனக்கு பிடிக்கவில்லை என்றால், 'டியூஷன்' வைக்கிறேன். நீ என்னை தவறாக பேசினால், நாளை, தம்பியும் தவறாக பேசுவான். நீ என்னை திட்டினாலும், வைதாலும் நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் மகனே...' எனக் கூறு.

சுயநலத்தை தவிர்த்து, பிற உறவுகளை அனுசரித்து மென்மையாக, சமாதானமாக நடந்து பார். வாழ்வே சொர்க்கமாகும்; தற்கொலை எண்ணங்கள் தவிடு பொடியாகும். உன்னிரு மகன்களுக்கும் அன்பு முத்தங்கள்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us