தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/மண் குதிரைகள்!

மண் குதிரைகள்!

மண் குதிரைகள்!


PUBLISHED ON : ஆக 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல் தாத்தாவும், பேத்தி மீனாவும் ஆற்றுப் படுகையில் நடந்து கொண்டிருந்தனர். ஆறு வறண்டு, ஆங்காங்கே மணல் திட்டுகள், மண் குதிரைகள் போல தெரிந்தன. நான்கைந்து ஆண்டுகளாக ஆறு இப்படித்தான், மணலாகக் காட்சியளிக்கிறது. மணல் திட்டுகளை தள்ளி இருந்து பார்த்தால், ஆறு ஸ்தம்பித்து நிற்பது போல தோன்றும். ஆற்றின் நடுவே ஒரு நீராழி மண்டபம்.

முன்பு ஆற்றில் வெள்ளப் பெருக்கு திடீரென்று வந்து விட்டால், நடு ஆற்றிலே பாதி வழி சென்று கொண்டிருப்பவர்களுக்கு, அந்த மண்டபம், புகலிடமாக இருந்தது. அந்த மண்டபத்தை சுற்றி தண்ணீர் நிரம்பி விடும். தண்ணீர் வடிய ஒரு நாள் ஆகும். அதன் பின்னரே, அதில் தங்கியவர்கள், வீடு திரும்புவர்.

இது ஒரு பதிவு; அது, அந்தக் காலம். இப்போது தண்ணீரும் இல்லை, தங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆறு வறண்டு, தண்ணீர் போக்கு குறைந்ததும், மணல் திட்டுகளில், காக்காய் பொன், கிளிஞ்சல், சங்கு என, ஏதாவது சில பொருட்கள் கிடைக்கும். அங்கிருக்கும் சிறுவர்கள், ஓடி ஓடி, அதை தேடி எடுப்பர். பேத்திக்கு கதை சொல்லியபடி நடந்து கொண்டிருந்தார், தாத்தா.

''இந்த மண் குதிரை இருக்கு பார்த்தியா?''

''குதிரையா... எங்க தாத்தா, நான் ஏறலாமா?''

சிரித்தார், தாத்தா.

''இல்லம்மா, அது குதிரை இல்ல; மணல் திட்டு. இப்போ அதை நம்பி ஆற்றில் இறங்கினால், மணல் திட்டு கரைந்து, மூழ்கிப் போயிடுவோம். ஆனால், முன்பு அப்படி இல்லை. ஒரு காலத்துல, கடற்கரையில் இருந்து, 50 மீட்டர் தொலைவிலிருந்து, பனை ஓலைகளை எல்லாம் எடுத்துட்டு வந்து, வரிசையாக இந்த ஆத்துக்குள்ளே அடுக்கி வைப்பர்.

''அந்த ஓலைகளில் ஆற்றுமணல் புகுந்து, உரம் போட்ட மாதிரி கெட்டியாகி, பெரிய மலைக்குன்றுகள் மாதிரி மாறும். பெரிய சுனாமி வந்தாக் கூட, இது தடுத்து நிறுத்திவிடும். ம்... இப்படி எல்லாம் இப்போ நடக்கறதே இல்ல. இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. அதை பற்றி அவர்கள் கவலைப்படவும் இல்லை.

''இந்த மணல் மேடுகளில் ராவணன் மீசை, புன்னை, தாழை, குதிரைக்குளம்பு போன்ற தாவரங்களை நட்டு வைப்பர். இந்த தாவரங்களோட வேர்கள் மணலுக்கு உள்ளே புகுந்து அந்த மணல் குதிரைகளை கல் கோட்டையை போல ஆக்கிவிடும். இதெல்லாம் அந்தக் காலம். இப்போ ஒண்ணும் கிடையாது.''

தாத்தா கதை சொல்வது இவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் சொல்வது பாதி புரிந்தும், புரியாததுமாக இருக்கும். இவளும் கேட்டபடியே நடப்பாள்.

தினம் இவர்கள் அந்த ஆற்று மணலை கடக்கும்போது, நடைபெறும் நிகழ்ச்சி தான் இது.

சில நாட்களாக, தொடர்ந்து மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. தாத்தாவிற்கு மறு கரைக்கு போக வேண்டிய அவசியம். அங்குதான் சில கடைகள் இருக்கின்றன. தாத்தா இருக்கும் இந்தப் புறத்தில் அதிக வீடுகள் இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு வீடுகள், சில குடிசைகள்.

அன்று தாத்தா கிளம்பியபோது, ''நானும் வரேன் தாத்தா...'' என்றாள், மீனா.

''வேணாம்மா, மழை பெஞ்சுகிட்டே இருக்கு. வீதி எல்லாம் ஈரமா இருக்கு. நான் ஒரு நொடியிலே போயிட்டு திரும்பிடுவேன். நீ பத்திரமா வீட்லயே இரு...'' என்று கிளம்பினார், தாத்தா.

பள்ளிக்கூடம் இல்லை, விடுமுறை. தோழியர், வழக்கமாக பாண்டி ஆடுவர்; இல்லாவிட்டால் தாயக்கட்டம் ஆடுவர். இன்று, மழையின் காரணமாக யாருமே வரவில்லை. வழக்கம்போல சோழிகளையும், புளியங்கொட்டைகளையும் வைத்து விளையாட ஆரம்பித்தாள், மீனா.

இவள் விளையாடிக்கொண்டிருந்தபோது, 'ஹோ...' என்ற பேரிரைச்சலுடன் பிரளயம் போல, தடதடவென்று யாரெல்லாமோ ஓடி வருகிற சத்தம். இடி இடித்தது. மின்னல் மின்னியது. பட்டப் பகலிலே இது என்ன கொடுமை... இது என்ன புதிதான நிகழ்ச்சி...

இவள் பயத்துடன், ''தாத்தா...'' என்று கத்தியபடி வாசலுக்கு வந்தாள். மணல் ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதில், மரங்கள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வீட்டு வாசல் வரை தண்ணீர் வந்து விட்டது.

''ஐயையோ தாத்தா...'' அலறினாள், மீனா.

மக்களின் கூக்குரல்... சிலர், ரப்பர் டயர்களை ஏந்தியபடி ஓடினர். சிலர், எங்கிருந்தோ பரிசில்களை தேடி எடுத்து வந்தனர்.

''தாத்தா...'' என, அழுதபடி வீட்டுக்குள் ஓடினாள். வீடு முழுவதும் தண்ணீர். தாத்தாவின் தகரப் பெட்டி மிதந்தது. மெல்ல எடுத்தாள். தாத்தா அடிக்கடி அந்தப் பெட்டியை திறந்து, ஏதோ பார்த்துக் கொண்டிருப்பார்.

அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலை நிமிர்த்திப் போட்டு, பெட்டியை அதன் மீது வைத்தாள். அதற்குள் தண்ணீர் மேலே வந்து விட்டது. இவளுக்கு மயக்கமே வந்து விட்டது. அப்படியே அந்தப் பெட்டி மீது மயங்கிச் சரிந்தாள்.

- இவள் கண் விழித்தபோது, யாரோ ஒரு பெண்ணின் மடியிலே கிடப்பது புரிந்தது. விம்மியபடி, ''தாத்தா...'' என்று, அழுதாள்.

''அவர், இனிமே வரமாட்டாரம்மா... நீராழி மண்டபத்தில் அவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாம். அங்கிருந்த ஒரு துாணைக் கட்டியபடியே இறந்திருக்கிறார். மீட்புப் பணியில் இருந்தவர்கள் கூறினர்,'' என்றாள், அந்த பெண்.

அழுதாள், மீனா. ஆங்காங்கே முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், காபி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

''வாம்மா... கிராமமே மூழ்கிப் போயிடுச்சு. நாங்க எல்லாரும் டவுனுக்கு போறோம். உன் சாமான் ஏதாவது வீட்ல இருந்தா எடுத்துட்டு வா. வண்டி வந்துவிடும். வெள்ளம் அதிகமாகிட்டே இருக்கு. சீக்கிரம் வா...'' என்றாள்.

மிச்சம் இருப்பது எதுவுமே இல்லை. இவள் மட்டும் தான். வீட்டிற்குள் நுழைந்தாள். சமையலறை முழுவதும் தண்ணீர்... அங்கிருந்த பாத்திரங்கள் எல்லாவற்றிலும் குட்டிப் பாம்பு, பல்லிகள் கிடந்தன. கயிற்றுக்கட்டிலில் வைத்த பெட்டியை எடுத்தாள்.

தண்ணீர் கொஞ்சம் வடிந்திருந்தது. பெட்டிக்குள் ஒரு புகைப்பட ஆல்பம். நல்லவேளை, அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்ததால், ஏதும் ஆகவில்லை. மெல்ல ஒவ்வொரு பக்கமாக பிரித்துப் பார்த்தாள்.

'இது தாத்தா, இந்த குழந்தை நான்... நான்தானா? என்னை தாத்தா துாக்கி வைத்துக் கொண்டிருக்கிறாரே... ஏன் இத்தனை நாளாக தாத்தா இந்த ஆல்பத்தை எனக்கு காட்டவே இல்லை... ஆமாம், இந்தப் பெண் யார்?' ஆல்பம் பார்த்துக்கொண்டே தனக்குள் யோசித்தாள், மீனா

''என்ன பண்றே?'' குரல் கேட்டு திரும்பினாள்.

இவளை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பெண்மணி நின்று கொண்டிருந்தாள்.

''வண்டி வந்துடிச்சு... என்ன பண்ணிட்டிருக்க... சீக்கிரம் கிளம்பு, 'லேட்' ஆச்சு இல்ல?''

''இல்ல சிஸ்டர்... ஆல்பம்...''

''பரவால்ல கையிலெடுத்துக்கோ... முகாமுக்குப் போய் பார்த்துக்கலாம்,'' பேசியபடி ஆல்பத்தை எடுத்து, மேலாக தெரிந்த புகைப்படத்தை பார்த்தாள்.

''இது யாரு மீனா?''

''இது எங்க தாத்தாவோட ஆல்பம், சிஸ்டர்... இதுதான் எங்க தாத்தா, இது நான்...''

அந்தப் பெண்மணி திகைத்தாள்.

மனதுள், 'அப்பா...' என்கிற குரல்.

இவள் மனதில் பழைய நினைவுகள் ஓடின.

காதலித்து கைவிட்டவன் தந்த பரிசை, அப்பாவின் காலடியில் வைத்து, தற்கொலை எண்ணத்துடன் ஓடியவள். பழைய உறவுகளை கண்டுபிடித்து திரும்பவும் தந்திருக்கிறது, காலம்.

வேண்டாம், இந்த உறவு பற்றி மீனா எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டாம். அவள் மனதில், அவள் தாய் பரிசுத்தமானவளாகவே இருக்கட்டும்.

குழந்தையை ஆற்றில் விட்டாள், குந்தி. அப்பாவின் காலடியில் விட்டாள், இவள். இரண்டுமே புறக்கணிப்பு தான். இவள் பெயர் யமுனா. நதியின் பெயர். அதனால்தானோ என்னவோ, இவள் இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.

ஓடவில்லை என்றால், அது நதிகள் அல்ல என்பர். வழி மாறினாலும் இன்னும் இவளது ஓட்டம் நிற்கவில்லை. எங்கெங்கோ ஓடி களைத்து, சற்று தடுமாறி இப்போது சிறு குட்டையாக தேங்கி நிற்கிறாள். இவள் ஒரு மண் குதிரை. இவளை நம்பி யாரும் ஆற்றில் இறங்கிட முடியாது.

ஆற்றில் இவள் நடந்த தடங்கள், கண்களுக்கு தெரியவில்லை. இவள் சிந்திய கண்ணீரும் தெரியவில்லை. ஆனால், இவள் அப்பா, உரம் வாய்ந்த மதில் சுவராக, அரணாக இருந்து, இவள் மகளைக் காப்பாற்றியவர்.

மீனா கூப்பிட்டவுடன் சுயநினைவுக்கு வந்த யமுனா, மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். வேண்டாம், இவள் தன்னை யார் என்று தெரிந்து கொள்ளவே வேண்டாம்.

மீனாவை தன்னோடு அணைத்துக் கொண்டாள், யமுனா. அந்த ஸ்பரிசம் மெய்சிலிர்க்கிறது. இந்த புஷ்பத்தையா ஆற்றில் விட்டேன்?

தன் கண்ணீரை மறைத்தபடி, மீனாவின் கரம் பற்றி அழைத்துச் சென்றாள். அதோ அந்த ஈர மணல் ஆற்று பாதையிலே, இருவரின் காலடிச் சுவடுகள் பதிகின்றன. தாத்தாவுடன் நடந்த, கடந்த காலமும் உடன் பயணிக்கிறது.

அரவிந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us