PUBLISHED ON : ஆக 08, 2021

டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்!' நுாலிலிருந்து:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறந்த கவிஞர் என்பது, எல்லாருக்கும் தெரியும். அவர், இந்த உலகில், 29 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். 2ம் வகுப்பு வரை தான் படித்தார். ஆனால், அவர் சிறு வயதிலேயே பல்வேறு கஷ்டங்களை சந்தித்து,
18 விதமான வேலைகளை செய்தார். அவை என்னென்ன வேலைகள் தெரியுமா?
விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பள தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரன், கவிஞன், நாடகக்காரன், நடிகன், பாடகன், அரசியல்வாதி மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர்.
ஆக, இத்தனை விதமான வேலைகளை சிறு வயதிலேயே செய்துதான், வாழ்க்கையை நடத்தி வந்தார்; வெற்றிகரமான மனிதராகவே திகழ்ந்தார்.
குற்றாலத்தில் உள்ள ரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார் வீட்டிற்கு வந்தார், ஓர் இளைஞர்.
டி.கே.சி.,யிடம், 'நான் கொண்டு வந்திருந்த பணம் செலவாகி விட்டது. ஊருக்கு திரும்ப, பணம் தேவைப்படுகிறது...' என்று சொன்னார்.
உடனே, அந்த இளைஞர் கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பினார், டி.கே.சி.,
அங்கே இருந்த ஒரு தமிழறிஞர், 'ஐயா... அந்த இளைஞன் யோக்கியமானவனாக இல்லாததுபோல் தெரிகிறது. அவனுக்கு பணம் கொடுத்து அனுப்புகிறீர்களே...' என்றார்.
சிரித்தபடியே, 'அவன், பொய் சொல்கிறான் என்று, எனக்கும் நன்றாக தெரியும். நான் இப்போது பணம் கொடுத்து விட்டால், இனி, அவன் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் போய் விடுவானல்லவா... அதற்காக தான், நான் பணம் கொடுத்தேன்...' என்றார், டி.கே.சி.,
தன் சொந்த ஊரான கும்பகோணத்திலிருந்து, பள்ளிப் பருவ விடுமுறை நாளில், தன் உறவினரை பார்க்க சென்னைக்கு சென்றிருந்தார், கணித மேதை ராமானுஜம்.
உறவினரின் வீட்டிற்கு செல்ல, நகர பேருந்தில் ஏறி, போக வேண்டிய இடத்தை சொல்லி, ரூபாயை கொடுத்து, கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டிருக்கிறார்.
டிக்கெட்டையும், மீதி சில்லரையையும், ராமானுஜத்திடம் கொடுத்தார், கண்டக்டர்.
அதை வாங்கி, பாக்கி சில்லரையை பலமுறை எண்ணி பார்த்திருக்கிறார், ராமானுஜம். அதில் திருப்தி அடையாதவர், கண்டக்டரிடம், காசை திருப்பி கொடுத்து, 'பாக்கி சில்லரை குறைகிறது...' என, கேட்டிருக்கிறார்.
சில்லரையை எண்ணிப் பார்க்க, சரியாக இருந்திருக்கிறது.
'சில்லரை சரியாகத்தானே இருக்கிறது. கணக்கு தெரியாத நீயெல்லாம், ஏன் நோட்டை எடுத்து வந்து கொடுத்து, உயிரை வாங்குகிறாய்...' என்று கத்தியுள்ளார், கண்டக்டர்.
அந்த கண்டக்டர் சொன்ன, 'கணக்கு தெரியாத நீ' என்ற வார்த்தை, ராமானுஜத்தின் உள்ளத்தை பெரிதும் பாதித்தது.
அதிலிருந்து கணக்கில் தனி ஈடுபாட்டை வரவழைத்து, அல்லும் பகலும் பாடுபட்டார். அதன் பலனாக, 'கணித மேதை' என்று, உலகம் போற்றும் வகையில் உயர்ந்தார்.
நடுத்தெரு நாராயணன்
