PUBLISHED ON : ஆக 29, 2021

அன்புள்ள அம்மா -
என் வயது: 35; தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்க்கிறேன். கணவருக்கு வயது: 40; கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். எங்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகளும், நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
தாம்பரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் வசிக்கிறோம். என் பெற்றோர் துாத்துக்குடியிலும், மாமனார் - மாமியார், திருச்செந்துாரிலும் வசிக்கின்றனர்.
என் மகள், நான்காம் வகுப்பு படிக்கிறாள். ஆள் பார்க்க கொழு கொழுவென இருப்பாள். கணவர் வீட்டு குடும்பத்தினர் போல, உயரமாகவும் இருப்பாள். அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிடுவாள்.
வயதுக்கு மீறிய பேச்சு. தமிழ், 'டிவி சீரியல்'கள் விரும்பி பார்ப்பாள். தினம் என் மீது கால் போட்டுதான் துாங்குவாள். பக்கவாட்டு மேல்வரிசை பல் விழுந்து, பாதி முளைத்திருக்கிறது.
போன வாரம், என் மகள் பெரிய மனுஷி ஆகி, என் மீது குண்டை துாக்கி போட்டு விட்டாள். நானெல்லாம், 15 வயதில் தான் ருதுவானேன். என்ன செய்வது என தெரியாமல், திகைத்து போய் நிற்கிறேன்.
'சொந்தபந்தம், நட்பு வட்டம் அனைவரையும் அழைத்து, விமரிசையாக மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டும்...' என்கிறார், கணவர்.
'மகள், பெரிய மனுஷி ஆனதை யாரிடமும் சொல்லாமல் மறைப்போம்...' என்கிறேன், நான்.
இவளை, இனி எப்படி பராமரிப்பது, வேனில் பள்ளிக்கு எப்படி தைரியமாய் அனுப்புவது, அடுக்குமாடி குடியிருப்பு குழந்தைகளுடன் தொடர்ந்து விளையாட விடலாமா... விசேஷ சாப்பாடு என்ன கொடுப்பது...
சுடிதாரையே நான் தான் இவளுக்கு அணிவிப்பேன். இவள் எப்படி புடவை கட்டுவாள்... அழுக்கு தீர குளிக்க தெரியாத இவள், எப்படி சுயசுத்தம் பேணுவாள்... மாதா மாதம் நாப்கினுக்கென்று தனி செலவு ஆகுமே, நாப்கினை எப்படி உபயோகிப்பாள்... இவளை தனியே விட்டு, நாங்கள் எப்படி வேலைக்கு போவோம்... இப்படி ஆயிரக்கணக்கான கேள்விகள் எனக்குள்.
கடவுள் என்னை மட்டும் ஏன், இப்படி சோதிக்கிறான். சனியனை கழுத்தை நெரித்து கொன்று விடலாமா என, விபரீத யோசனை ஓடுகிறது.
ஒரு அம்மா இப்படி யோசிக்க கூடாது தான். நானே இளமையாக இருக்க, அதற்குள் என் மகள் பெரிய மனுஷியா? இது பற்றி எனக்கு விளக்கமாக ஆலோசனைகள் தாருங்கள் அம்மா!
- இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
பெண்கள் பூப்பெய்தல் என்பது, இயற்கையின் நியதி. இந்தியப் பெண்கள் சராசரியாக, 10.3 வயதில் பூப்பெய்துகின்றனர். பெண்கள், 8 - 13 வயதிலும், ஆண்கள், 9 - 14 வயதிலும் பருவமடைகின்றனர்.
உடற்பயிற்சி இன்மை, துரித உணவு, சுற்றுப்புற ரசாயனங்கள், ஹார்மோன் மாற்றம், உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள், பாரம்பரியம் ஆகியவை, ஒரு பெண்ணை மிகச்சிறிய வயதிலேயே பருவமடைய வைக்கின்றன. இந்தியாவில், 80 சதவீத பெண்கள், 11 வயதில் பருவமடைகின்றனர்.
ஒன்பது வயதிலேயே பருவம் அடைவது, வேறு உடல் பிரச்னை காரணமாக இருக்கலாம். குழந்தைகள் நல அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
உன் மகள், ஒன்பது வயதில் பருவமடைவது, பெரிய தெய்வ குற்றமல்ல. மகளை கழுத்தை நெரித்து கொல்வேன் எனக் கூறுவது, உன் பிற்போக்குதனத்தை காட்டுகிறது.
கணவர் விரும்புவது போல மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது, தேவையில்லாதது. உன் பெற்றோரையும், கணவரின் பெற்றோரையும், உடன்பிறப்புகளையும் அழைத்து, எளிமையான குடும்ப விழா ஒன்று நடத்து.
மாதவிடாய் என்றால் என்ன என்பதை, மகளுக்கு புரியும் வண்ணம் சொல். மாதவிடாயை கண்டு அருவருப்படைவது தேவையற்றது என, மகளுக்கு தெரியவை. நாப்கின் உபயோகிக்கும் முறையை சொல்லிக் கொடு. அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதத்தை கற்றுக்கொடு.
பாதுகாப்பாய் வீட்டுக்குள் இருப்பது எப்படி, பள்ளிக்கு போய் வருவது எப்படி, சக மாணவ - மாணவியரிடம் நடந்துகொள்ளும் முறை எப்படி என, மகளுக்கு தெளிவாக கூறு.
மகள் பெரிய பெண்ணும் அல்ல, சிறுமியும் அல்ல, நடுவழியில் நிற்பவள். அவளை வீணே பயமுறுத்தாமல், ஆக்கரீதியான செயல்பாடுகளை ஆரம்பித்து வை.
உன்னால் மகளை பராமரிக்க முடியாது என்றால், அவளை, உன் அம்மா வீட்டுக்கு ஒரு ஆண்டு அனுப்பு. அங்கு தொடர்ந்து படிக்கட்டும். நல்ல பழக்க வழக்கங்களை பேத்திக்கு, பாட்டி சொல்லிக் கொடுப்பார். பாட்டி வளர்ப்பு வீண் போகாது.
பல் மருத்துவரிடம் கூட்டிபோய், லேசர் முறையில் பல் சுத்தம் செய்து, பல் பராமரிப்பை சொல்லி கொடுக்க சொல்.
எக்காரணத்தை முன்னிட்டும் கல்வி தடைப்படக்கூடாது.
பருவமடைந்த பூக்குட்டியை வாழ்த்துகிறேன்.
-- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
