தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/செம்பருத்தி!

செம்பருத்தி!

செம்பருத்தி!


PUBLISHED ON : ஆக 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கத்திலே குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?

ஆற்றின் நீரோட்டத்தில் உருளும் கூழாங்கற்கள் போல், பெரிதும் சிறியதுமான அழுக்குப்படாத நினைவுகள்.

தனக்குள் ஆழ்ந்த, ஒரு மோன தவ நிலை.

செம்பருத்தி என்று, இவளுக்கு யார் பெயர் வைத்தனர்? செம்பருத்தி பூ, மருத்துவ குணமிக்கது. வாடினால் கூட அந்த பூவைப் போட்டு எண்ணெய் காய்ச்சுவர். தலை முடிக்கு மிகவும் நல்லது. அந்த பூவில் கஷாயம் வைத்து காய்ச்சிக் குடித்தால், வயிற்று வலிக்கு மிகவும் நல்லதாம்.

இவள் சிறுமியாக பள்ளி சென்ற காலத்தில், அறிவியல் வகுப்பில், ஒருமுறை வாத்தியாரம்மா இப்படி கூறினார்.

'பிள்ளைகளா... இன்னிக்கு நாம செம்பருத்தி பூவை பத்தி பார்க்கப் போறோம்...' என்றவர், பூவின் அழகான இதழ்களை பிரித்து, 'இது, மகரந்தம்; இது, அண்ட கோசம்; இது, இதழ்; இது, தண்டு...' என்று விளக்கியபோது, இவளுக்கு ஏனோ அழுகை வந்தது.

'உனக்கு தெரியுமா செம்பருத்தி, இன்னும் பெரிய வகுப்பு போனா, உசிரோட தவளையை பிடிச்சு, காலில் ஆணி அடிச்சு வகுப்பு நடத்துவாங்களாம்... அப்பதான் டாக்டர் ஆக முடியுமாம்...' சொன்னாள், சினேகிதி ஒருத்தி.

'நான், டாக்டருக்கு படிக்க மாட்டேம்பா...' என்பாள் இவள். அத்தனை மென்மை மனது.

இவளோடு படித்தவன் தான், பருத்தி வீரன். தன் பாட்டி வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தான். அவனை இவள், வீரா என்பாள். அவனும் இவளை, செம்பு என்பான்.

'நான் பருத்தி, நீ செம்பருத்தி... என் பேர்லே பாதி உன் பேர்...'

'இப்படி நீ பேசினா, நான் பேரை மாத்திடுவேன்...'

'நீ செம்புனா, நான் தங்கமா மாறிடுவேன். செம்பு இல்லாம தங்க நகை பண்ண முடியாது...'

'சீ போ... உன் பேச்சு கா...'

'நான் பழம்' என்று, சொல்லி சிரிப்பர்.

பிளஸ் 2 வராத காலம். முனிசிபல் பள்ளி அனுபவம் இனித்தது.

டவுனுக்கு போய், ஹாஸ்டலில் தங்கி படித்தான், பருத்தி வீரன்.

அப்போதுதான் இவள் பெரிய மனுஷி ஆனாள். இவளை கொல்லையில் உட்கார வைத்து, கை மருந்து, வயிற்று வலிக்கு கஷாயம் கொடுத்தாள், அம்மா. அது, செம்பருத்தி கஷாயம் என்று தெரிந்ததும், வாந்தி வந்தது.

மூன்றாம் நாள், அக்கம் பக்கத்தவர்களை கூப்பிட்டு, ஆரத்தி எடுத்து, என்னவெல்லாமோ சடங்குகள் செய்தாள்.

இதையெல்லாம் பருத்தி வீரன் பார்க்கவில்லையே என்று தோன்றியது இவளுக்கு.

சில மாதங்களுக்கு பின், கோடை விடுமுறைக்கு, பருத்தி ஊருக்கு வந்தபோது, இவளை பார்த்து பிரமித்தவன், 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது...' என, வேடிக்கையாக பாடினான்.

'சீ... போ, நான் அழுதுடுவேன்...'

'ஆமா, படிப்பை நிப்பாட்டியாச்சு... என்ன பண்றே?'

'என்னத்தை பண்றது... இப்போ நம் ஊருலே புதுசா ஒரு லைப்ரரி வந்திருக்கு. அங்கே போய் புஸ்தகமெல்லாம் படிக்கறேன்...'

'செம்பு... என் அப்பாவுக்கு, சுகமில்லையாம்; அங்கேயே வரச் சொல்லிட்டார். 'லீவு' முடிஞ்சு நான், மெட்ராஸ் கிளம்பறேன். நான் படிச்சுட்டு வர்ற வரைக்கும், என்னை மறக்க மாட்டியே... கல்யாணம் கட்டிட்டு வேற ஊர் போயிடுவியா?'

'மாட்டேன்... இந்த ஊரிலே தான் என் உசிரு போகும்...'

'நான் வாழறதை பத்திப் பேசினா, நீ சாகறதை பத்திப் பேசறே?'

அதன் பின், என்னவெல்லாமோ பேசினர்.

தன் தலையில் வைத்திருந்த செம்பருத்தி மலரை எடுத்து, 'இந்தா, என் ஞாபகமா வைச்சுக்கோ...' என, தந்தாள்.

நாட்கள், வாரங்கள், மாதங்களாயின.

அந்த ஊரிலே புதிதாய் ஒரு சுகாதார மையம் வந்தது. செவிலியர் பயிற்சி முடித்து, அங்கு பணிக்கு சேர்ந்தாள், செம்பருத்தி.

பாதி நாட்கள், பெரிய டாக்டர் வர மாட்டார். அப்போது, இவள் தான் சின்ன சின்ன பிரச்னையோடு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பாள். இவளின் அன்பான மொழிகளும், சேவையும் அனைவருக்கும் பிடித்தது. இவளை பற்றிய புகார் ஏதும் வரவில்லை.

அதனால் தான், தாய் இறந்த பிறகும் கூட, இவளால் அந்த மையத்திலேயே வாழ முடிந்தது.

பருத்தி வீரன் வரவே இல்லை. தொடரும் அவன் நினைவுகள் மட்டுமே, இவள் நெஞ்சமெனும் பெட்டகத்தில் பத்திரமாய் இருந்தன.

அன்று...

நல்ல மழை, நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. சுகாதார மையத்தில் எல்லா மருந்துகளும் தீர்ந்து விட்டன. அவசரத்திற்கு ஒரு தலைவலி மாத்திரை கூட இல்லை.

இந்த மழையில் யார், 'ஸ்டாக்' அனுப்பப் போகின்றனர்... நாமே போனால் என்ன என்று, குடை எடுத்து கிளம்பினாள். 2 கி.மீ., துாரம் நடக்க வேண்டும். சேலையை துாக்கி பிடித்தபடி ஒற்றையடிப் பாதையில் நடந்தாள்.

அப்போது தான் முக்கி முனகி, தள்ளாடியபடி, இவள் எதிரில் வந்து நின்றது, ஒரு ஆட்டோ.

'இன்ஜினுக்குள்ளே தண்ணி புகுந்திடிச்சு... இனி, ஆட்டோ நகராது...' ஆட்டோக்காரர் பேசப் பேச, அதிலிருந்து எட்டிப் பார்த்தாள், நிறை மாத கர்ப்பிணி.

'அம்மா... செம்பருத்தின்னு ஒரு நர்ஸ், இங்கேதானே இருக்காங்க?'

இவளுக்கு, 'பகீர்' என்றது.

முன் பின் தெரியாத ஒருத்தி, இவள் பெயர் சொல்லிக் கேட்கிறாள், யார் இவள்?

திணறியபடி, 'நான் பருத்தி வீரனோட... வலி அதிகமாகவே, ஐயோ...' என்றலறியபடி சீட்டில் சாய்ந்தாள், அந்த பெண்.

ஆட்டோக்காரரை விலக்கி, அதிலிருந்த ரெக்ஸின் தடுப்புகளை இறக்கி, துரிதமாக செயல்பட்டாள், செம்பருத்தி.

ஆபத்துக்கு பாவமில்லை. பிரசவ வலி ஆரம்பித்து விட்ட நிலையில், இந்த பெண்ணை வேறு எங்கும் அழைத்துப் போக முடியாது.

அரைமணி நேர போராட்டத்திற்கு பின், ரத்தமும், சதையுமாக இவள் கைகளில், பருத்தி வீரனின் வாரிசு... அழகான பெண் குழந்தை. உடல் சம்பந்தம் இல்லாவிட்டாலும், உயிர் சம்பந்தம்.

'அம்மாடி... உன் புருஷன்கிட்டே சொல்லு, ஒரு அழகான பெண் குழந்தை...'

இவள் பேச்சை கேட்க, அந்தப் பெண் உயிருடன் இல்லை; இறந்து விட்டாள்.

ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு ஆண்டுகள் செம்பருத்தியின் அந்த இருண்ட வாழ்வு ஆரம்பமானது. தேவையற்ற வாழ்நாள் தண்டனை. தவறு செய்யாமலே சிறைக்குள் அடைபட்டு, கற்பனைகளுடன் வாழ்ந்தாள். அப்போது, அறையின் இரும்பு கதவு திறக்கும் ஓசை கேட்டது.

'உனக்கு இன்னிக்கு விடுதலை...' என்றார், ஜெயில் வார்டன்.

ஒரு நிமிடம் திகைத்தவள், தரையில் கையூன்றி எழுந்தாள்.

கடந்த கால நினைவுகளுடன் சிறை வாழ்வு முடிவுக்கு வந்தது.

அந்த சிறைச்சாலையின் மெயின் கேட், இவளை உமிழ்ந்தது. ஒரு கவரில், சிறைச்சாலையில் உழைத்த ஊதிய தொகை, இவள் கையில்.

தடுமாறியபடி வந்தவள், வாசலில் அவனைப் பார்த்து, திகைத்தாள்.

பருத்தி வீரன், இத்தனை நாள் எங்கே போயிருந்தான்?

ஏதோ பேச ஆரம்பித்தவளை, ''வா... வீட்டுக்கு போய் பேசிக்கலாம்,'' என்று அழைத்துப் போனான்.

அது ஒரு சிறிய ஓட்டு வீடு.

''மொத மொதலா என் வீட்டுக்கு வந்திருக்கே... என்ன சாப்பிடறே?''

''எதுவும் வேணாம்... இப்படி திண்ணையிலே உக்காந்தா போதும்.''

''இது, உன் வீடு செம்பு.''

அழுதாள்.

தந்தையின் உடல் நலம் மோசமானதால், வைத்தியத்திற்காக ஊர் முழுவதும் வாங்கிய கடன்... ஓடி ஒளிய வேண்டிய நிலை... செம்பருத்தியின் பிரிவு, தந்தையின் மரணம், இவனை குடிகாரனாக்கியது. அதைத் தொடர்ந்து சில வேண்டாத சகவாசங்கள்...

அப்படி பரிச்சயமானவள் தான் புவனா... போதை மயக்கத்தில் அவளிடம் தன் கதையையும், காதலையும் கூற...

அவளுக்கு இவனே எல்லாமாகி போனான். இந்த பரிமாற்றத்தில், 'எய்ட்ஸ்' நோய் பரவியதையும் கூறி முடித்தான், பருத்தி.

ஆண் வாடையே அறியாத தனக்கு எப்படி, 'எய்ட்ஸ்' வந்தது என்று புரிந்தது, செம்பருத்திக்கு.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இவளுக்கு, மருத்துவப் பரிசோதனையில், 'எய்ட்ஸ்' இருப்பது தெரிந்தது. இவள் தனி செல்லில் அடைக்கப்பட்டாள்.

அன்று இரவு மழையில், கையில் கிளவுஸ் அணியாத நிலையில், இவள் நடுரோட்டில் பார்த்த பிரசவம்... கையில் ஏற்பட்ட ஆறாத புண் மூலமாக இவளுக்கும், 'எய்ட்ஸை' கொடையாகத் தந்திருக்கிறது. பிள்ளை தர முடியாத வீரன், நோயைத் தந்திருக்கிறான். இதுவும் ஒரு கொடை தானே?

இவள் கையைப் பிடித்தபடி அழுதான், வீரன்.

''உன்னை பார்க்க ஜெயிலுக்கு வந்தேன். நீ, 'எய்ட்ஸ்' செல்லுலே தனியா இருக்கிறதா சொன்னாங்க... எந்த முகம் கொண்டு உன்னை பார்ப்பேன் செம்பு?'' என்றான்.

''அந்த குழந்தை?'' என்றாள்.

''நல்லா இருக்கா. அவளுக்கு நோய் இல்லை. என் நோயும் கட்டுப்பாட்டில இருக்கு. அவளுக்கு என்ன பேர் வைச்சிருக்கேன் தெரியுமா? செம்பருத்தி... அவளைக் கூப்பிடும்போதெல்லாம் உன் ஞாபகம் தான் செம்பு.''

''வீரா... இந்தா, இதுலே என் உழைப்போட காசு... வைச்சுக்கோ, மகளை நல்லா படிக்க வை... கொஞ்ச நேரம் இப்படி உன் மடியிலே, படுக்கட்டுமா?''

அழுதபடி அவளை, தன் மடி மீது கிடத்தினான், வீரன்.

இதுவும் ஒரு தாலாட்டு தான். தாயாகாத ஒருத்திக்கு, நோயாளியான காதலன் பாடும் தாலாட்டு. வார்த்தைகளற்ற மோனத் தாலாட்டு.

அவன் மடியிலேயே உறங்கிப் போனாள், செம்பருத்தி. பிறகு எழவே இல்லை.

''செம்பருத்தி தாயி... செடிக்கு தண்ணி ஊத்தினியாம்மா?''

''காலையிலேயே ஊத்திட்டேன்பா... ஸ்கூலுக்குக் கிளம்பறேன்; லேட்டாச்சு.''

'யூனிபார்ம்' அணிந்து, பள்ளி செல்லும் தன் மகளை பாசத்துடன் பார்த்தபடியே, கையில் வைத்திருந்த பழைய அட்டை பெட்டியை திறந்து பார்த்தான், வீரன்.

அதற்குள், வாடிய செம்பருத்தி பூ ஒன்று. இவன் கண்ணீர் பட்டு திடீரென்று மலர்வதை போன்ற உணர்வு.

அதோ... இவன் வீட்டு வாசலில் ஒரு அழகான செம்பருத்தி செடி, கிளை விட்டு, பூக்களுடன் சிரிக்கிறது.

கல்யாணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us