PUBLISHED ON : ஆக 29, 2021

வெற்றியின் விலாசம்!
இளைஞனே... நீ சந்திக்கும்
தோல்வி படிக்கட்டை
தொட்டு வணங்கிடு
வெற்றியின் விலாசம் - உன்னை
தொற்றிக் கொள்ளும்!
நீ அடைந்த அவமானங்கள்
அத்தனையும் நினைவில் வை
மொத்தமாய் வெகுமானமாகி
முத்தமிட்டு அணைக்கும்!
சோம்பலை தீயிட்டு
சாம்பலாக்கு
புத்துணர்ச்சி உள்ளத்தில்
பூத்துச் சிரிக்கும்!
முடியாது என்பதை
அடியோடு மறந்து விடு...
முடியும் என்பது
உன் முன் மண்டியிடும்!
துாக்கத்தில் வரும் கனவுகளை
துாரத்தில் கைவிடு...
ஊக்கத்தில் வரும் நனவுகளை
உடனே துவங்கி விடு!
எதிரிகளை
புன்னகையால் ஒதுக்கி விடு
நண்பர்களை
இரு கைகளால் குலுக்கி விடு!
தடம் மாறும் எண்ணத்தை
உடனே தடுத்து நிறுத்து - ஒருநாள்
புடம் போட்ட தங்கத் தேரில்
வடம் போட்டு கூடி இழுப்பர்!
வாழும்போது
வறட்டு கவுரவத்தை
விட்டு விடு - போகும்போது
'வாழ்ந்த மனிதன்' என்ற பெயரை
பெற்று விடு!
தமிழருவி, திருவிடைமருதுார்.
