தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மிஸ்டர் முரட்டு அண்ணன்! (2)

மிஸ்டர் முரட்டு அண்ணன்! (2)

மிஸ்டர் முரட்டு அண்ணன்! (2)


PUBLISHED ON : ஆக 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்களின் நெருங்கிய தோழியர் யாரென்பது, அண்ணனுக்கு தெரியும். அவர்களது வீட்டு முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை, தொலைபேசி குறிப்பேட்டில் குறித்து வைத்திருப்பான்.

எங்களுக்கு விருப்பமான துறையிலேயே படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். தினமும் இரவு வீட்டுக்கு வந்ததும், 'நியூஸ் ஏதாவது இருக்குதா?' என்று என்னிடமும், விந்தியாவிடமும் அவன் கேட்பது வழக்கம்.

பள்ளியில், கல்லுாரியில், வழித் தடத்தில் ஏதாவது முக்கிய விஷயங்களோ, சுவாரஸ்யமான சம்பவங்களோ நடந்திருந்தால் சொல்வோம். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் வீட்டில் சொல்ல வேண்டும் என்பது, அவனது எண்ணம்.

மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் சில விஷயங்களை, அண்ணனிடம் பகிர்ந்துகொள்வோம். அதில் அவனுக்கும் மகிழ்ச்சி, எங்களுக்கும் திருப்தி.

இரவு, 8:30 முதல், 9:00 வரை, நாங்கள் சாப்பிடுகிற நேரம். இந்த நேரத்தில் அம்மாவைத் தவிர, நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, 'டிவி'யில் செய்தி பார்த்தபடியே சாப்பிடுவோம். ஊர் உலக நடப்பை நாங்கள் தெரிந்துகொள்ளவும், தனியாக நேரம் ஒதுக்கி, படிக்கிற நேரத்தை வீணாக்காமல் இருக்கவும் இந்த ஏற்பாடு.

அண்ணனை பற்றி நாங்கள் சொல்வதை கேட்டு, எங்கள் தோழியரில் சிலர், 'அவர் மாதிரி ஒரு அண்ணன் எங்களுக்கு இல்லையே...' என்று அங்கலாய்ப்பர்.

எங்கள் கல்லுாரி நிறுவனர் தின விழா, ஏப்ரல் மாதம் நடக்கும். நிறுவனர் தினம், கல்லுாரி விளம்பரத்துக்கானது என்பதால், விமரிசையாக கொண்டாடுவர் என்பதோடு, வீட்டுக்கும் அழைப்பிதழ் வரும்.

பெரிய படிப்பு படித்தவர்களிடையே, படிக்காத தற்குறிகளான தாங்கள் வந்து நிற்பது நன்றாக இருக்காது என்று, எங்கள் வீட்டிலிருந்து யாரும் வர மாட்டார்கள்.

இந்த முறை கல்லுாரி மாணவ - மாணவியர் சிலர், எங்கள் வீட்டுக்கே வந்து, 'காலேஜ்ல, மத்த புள்ளைக எல்லாரும் உங்கள பார்க்க விரும்பறாங்கண்ணா... நீங்க அவசியம் வந்தே ஆகணும். இந்த சமயத்துல வந்தா, நீங்க விழாவை பார்த்த மாதிரியும் ஆச்சு...' என்று, அண்ணனுக்கு அழைப்பு விடுத்தனர்.

'வீடு தேடி வந்து, நீங்க இப்படி அழைச்சதே எனக்கு சந்தோஷம். விழாவை பாக்கறக்குன்னு இல்லேன்னாலும், உங்கள மாறி மத்த தம்பி - தங்கச்சிகள பாக்கறதுக்காகவாவது அவசியம் வர்றேன்...' என, அண்ணனும் ஒத்துக்கொண்டான்.

விழா நாள் -

பைக்கை நிறுத்தி, நானும், அண்ணனும் அரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்போதே, அவனை பார்த்த சில மாணவ - மாணவியர், வரவேற்று அழைத்துச் சென்றனர். அரங்கத்துக்குள் போனதும், அவனை சூழ்ந்து கொண்டது, மாணவியர் கும்பல்.

'அண்ணா இங்க வாங்கண்ணா... அண்ணா, இங்க வந்து உக்காருங்கண்ணா...' என, ஆளாளுக்கு உபசரித்தனர். 'ஆட்டோகிராப்' வாங்காத குறைதான்; அதோடு பையன்களும் சேர்ந்து கொண்டனர்.

அந்தப் பக்கமாக வந்த தலைமைப் பேராசிரியை, குழுமியிருந்த கூட்டத்தையும், உடன் இருந்த என்னையும் பார்க்க, நாங்கள் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றோம்.

''யாரும்மா... உங்க அண்ணன்தான?'' என கேட்டவர், ''வணக்கம் தம்பி... உங்களப் பத்தி முன்னயே கேள்விப்பட்டிருக்கிறேன்பா... அதுவும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கப்புறம், ப்ரொபசர்ஸ் எல்லாரும் உங்களைப் பத்தி நெறையவே பேசுனாங்க. நானும், உங்கள நேர்ல சந்திக்கணும்ன்னு இருந்தேன். இன்னைக்கு நீங்களே வந்ததுல ரொம்ப மகிழ்ச்சி,'' என சொல்லிச் சென்றார்.

விழா துவங்கி, உதவிப் பேராசிரியரின் வரவேற்புரை முடிந்ததும், தலைமைப் பேராசிரியை ஒலி வாங்கிக்கு வந்தார்.

''ஒரு முக்கிய அறிவிப்பு. நம் மதிப்பிற்குரிய சமூக சேவகர் ஒருவர், இன்று நம் விழாவுக்கு பார்வையாளராக வந்துள்ளார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்கு தெரிந்த நபர். ஆனால், நம்மில் பலரும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, இதுவரை நேரில் பார்த்திருக்க மாட்டோம். இன்று, அவரை பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

''அவரைப் பற்றி, மதிப்பிற்குரிய நம் சேர்மனிடம் சற்று முன் பேசியபோது, 'அழைப்பிதழ் அச்சடிக்கும் முன்பே நீங்கள் இதைத் தெரிவித்திருந்தால் அவரையும் நம் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகச் சேர்த்திருக்கலாமே...' என்று வருத்தப்பட்டார். 'இருந்தாலும் பரவாயில்லை, இப்போது அவரை மேடைக்கு அழையுங்கள்; அவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும்...' என்றும் கேட்டுக்கொண்டார்.

''கண் தானம், ரத்த தானம், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, அபலைகளுக்கு ஆதரவு என, எத்தனையோ பேர், விதவிதமான சமூக சேவைகளை செய்கின்றனர். இவர் செய்வதும் அது போன்ற ஒரு சமூக சேவை தான். அதுவும் சாதாரண சமூக சேவை அல்ல. முன்னே சொன்ன சேவைகளை விட பெரிய சேவை என்றும் சொல்லலாம்.

''உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்குப் பின்தான், அவரது செயல்பாட்டின் அருமையை நாம் உணர்ந்து கொண்டோம். உங்களில் ஒருவராக வீற்றிருக்கும் அவரை, உங்கள் சார்பில் இரு கரம் கூப்பி மேடைக்கு அழைக்கிறேன்.

''மூன்றாம் ஆண்டு மாணவி வினோதினியின் அன்புச் சகோதரர், மிஸ்டர் முரட்டு அண்ணன் மேடைக்கு வரவும்,'' என்றார்.

எதிர்பாராத மகிழ்வதிர்ச்சியில் நானும், பேரதிர்ச்சியில் அண்ணனும் திகைத்திருக்க, அரங்கத்தில் இருந்த அனைத்து மாணவியரும் எழுந்து, பலத்த கரவொலி எழுப்பினர். அதன் பின், மாணவர்களும் எழுந்து கரகோஷம் எழுப்பியதோடு, விசில் சத்தத்தால் காது ஜவ்வையே கிழித்து விட்டனர்.

எழுந்து நின்று எட்டு திசைகளிலும் திரும்பி நன்றி தெரிவிக்கும் விதமாக, கை கூப்பியபடியே, மேடையை நோக்கி நடந்தான், அண்ணன்.

போர்த்திய பொன்னாடையை மடித்து வைத்து, தொண்டையை செருமியபடியே, ''அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

''என்ன சொல்றதுன்னே தெரியல... இப்பேர்ப்பட்ட விழாவுல, அதுவும் சேர்மன் ஐயாவே பொன்னாடை போர்த்தி, அவசியம் பேசியே ஆகணும்ன்னு வற்புறுத்தினதை நெனைச்சா... கனவு மாதிரித்தான் இருக்குது. இது எனக்குக் கெடைச்ச கவுரவம் இல்ல. என் செயலுக்கு கெடைச்ச அங்கீகாரம். அந்த அளவுல எனக்கு மகிழ்ச்சி.

''நான் செய்யற காரியம், சம்பந்தப்பட்ட பொண்ணுக, பசங்க, அவங்களோட குடும்பம், படிக்கற ஸ்கூல், காலேஜ் எல்லாத்துக்கும் நல்லது பண்ணக் கூடியதுங்கறது மட்டும் தெரியும். அதுக்காகத்தான் அதப் பண்ணுனேன். இப்ப மேடம் சொன்னதுக்கப்புறம் யோசிச்சுப் பாத்தா, நான் செஞ்சது, சமூக சேவைதான்னு புரியுது.

''இது சம்பந்தமா உங்ககிட்ட சில விஷயங்கள சொல்லணும். அதுக்கு முன்ன, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு வருவோம். இங்க இருக்கற பெரியவங்கள்ல பலருக்கும் என்னைப் பத்தி தெரியாம இருக்கலாம். ஆனா, மாணவ - மாணவியர் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

''நீங்க சொல்லுங்க - பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்துல ஈடுபட்ட, 15 - 20 குற்றாவாளிகளுக்கு என்ன வேணா தண்டனை குடுக்கலாம்ன்னு, அரசும், கோர்ட்டும் அனுமதிக்கறதா வெச்சுக்குவோம். அப்ப நான் என்ன தண்டனை குடுப்பேன்னு நெனைக்கறீங்க?'' என, கேட்டான்.

'துாக்கு தண்டனை விதிப்பீங்க... கண்டம் துண்டமா வெட்டிக் கொல்லுவீங்க... அரேபியா மாதிரி, பொது மக்கள் மத்தியில கல்லால அடிச்சே கொல்ல வெப்பீங்க... அவனுகளோட ஆணுறுப்ப வெட்டி எடுப்பீங்க...' என, பலவித குரல்கள் எழுந்தன.

அண்ணன் மறுப்பாக தலையசைத்து, ''கெடையவே கெடையாது... நான் அவங்கள ஒண்ணுமே பண்ண மாட்டேன். எந்த தண்டனையும் விதிக்க மாட்டேன்,'' என்றான்.

கூட்டம் ஒரு கணம் நிசப்தத்தில் உறைந்து, பின் சலசலத்தது.

''திருடன்னா திருடத்தான் செய்வான். வங்கி லாக்கர்ல வெச்சிருக்கறதையே திருடீட்டுப் போகும்போது, நீங்க, 50 சவரன் நகைய கழுத்து, காது, கையி நெறக்கா போட்டுட்டு திருடன்கிட்ட போயி, 'அண்ணா... இந்த ஜிமிக்கி நல்லா இருக்குதுங்ளாண்ணா; ப்ரோ... இந்த நெக்லஸ் எப்புடி'ன்னு கேட்டீங்கன்னா, என்ன ஆகும்? அவன், காதோட, கழுத்தோட அத்துட்டுப் போகத்தான செய்வான்.

''அதே கதைதான் இங்கயும். அவனுக ஏமாத்தி, பாலியல் பலாத்கார பிசினஸ் பண்றதுக்குன்னே இருக்கறவனுக. அவனுக பண்றது குற்றம்னாலும், அவன் பிசினஸ பண்ணத்தான செய்வான். அவனுககிட்ட ஏமாந்தது அந்த பொண்ணுங்க தப்பு.

''அதனால, என்னைப் பொறுத்த வரைக்கும் என் கோபம், ஆத்திரம் எல்லாம் அந்தப் பொண்ணுக மேலதான். 'பேஸ் புக்'குல வலை விரிச்சும், துாண்டில் போட்டும் காத்திருக்கற அவனுககிட்ட, 'என்னைப் பாரு என்னழகப் பாரு'ன்னு, 'செல்பி'யா எடுத்துப் போட்டுட்டிருக்கறது... 'டப்ஸ்மாஷ் லொள்ளு, டிக் டாக் லோலாயம்'ன்னு இருந்தா எப்புடி இருக்கும்?

''இதுல சிக்குன பாதி பொண்ணுங்க, இப்படிப் பட்டவங்கதான். மீதிப் பேரு நட்பு, காதல், செக்ஸ், வசதியானவனை வளைச்சு கல்யாணம் பண்ணிக்கற ஆசைன்னு, எதெதுக்கோ ஆசைப்பட்டுப் போயி ஏமாந்தவங்க. 200 - 250 பொண்ணுகள சீரழிச்சதா சொல்றாங்களே... அதுல ஒரே ஒரு கேஸாவது, முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண, ரோட்டுலயோ, மத்த பொது எடத்துலயோ இருந்து கடத்திட்டுப் போயி சீரழிச்சதா உண்டா?

''நல்லா சிந்திச்சுப் பாருங்க... அப்படிப் பண்ணுனா சீக்கிரம் மாட்டிக்க வாய்ப்பு இருக்குதுன்னு தெரிஞ்சுட்டுத்தான் பக்காவா ப்ளான் பண்ணி, புத்திசாலித்தனமா பழகி, ஏமாத்தற வேலைய நுணுக்கமா பண்ணியிருக்கறாங்க...

''உங்க படிப்போடவோ, வேலையோடவோ, குடும்பத்தோடவோ சம்பந்தமில்லாத, எந்தவித அவசியமும் இல்லாத அனாவசிய நட்பு, உங்களுக்கு எதுக்குன்னு கேக்கறேன். அப்புடியே இருந்தாலும் அவனுக கூப்புடும்போது, தனியா எதுக்குப் போறீங்க... பாதுகாப்பான துணையோட போயிருக்கணுமுல்ல? இல்ல, தனியா வான்னு அவனுக சொல்லியிருந்தா, அப்பவே தெரிஞ்சுக்க வேண்டாமா...

''கூடப் பொறந்த அண்ணனும், பெத்த அப்பனுமே காமவெறி புடிச்சு பலாத்காரம் பண்ற வன்கொடுமை நெறைய நடந்துட்டிருக்கற காலம் இது. அப்புடி இருக்கும்போது, அந்நிய ஆம்பளைகள எப்படி நம்பறீங்க?

''தயவுசெஞ்சு, பொண்ணுங்க, தினமும், பேப்பர் நியூஸ் படிக்கவோ, 'டிவி' நியூஸ் பாக்கவோ செய்யுங்க. அப்பத்தான் ஊர் நடப்பு, உலக நடப்பு தெரியும். ஏட்டுச் சொரைக்காயாவும், 'பேஸ் புக்' பொடலங்காயாவும் மட்டும் இருக்காதீங்க...

''கெட்டுத்தான் போவேன் என்று இருக்கிற பெண்களை பற்றி, நான் எதுவும் பேச விரும்பல. ஆனா, மற்ற பொண்ணுகளுக்கு நான் சொல்றது என்னன்னா... கூடப் பொறந்த அண்ணனே ஆனாலும், பெத்த தகப்பனே ஆனாலும் முழுசா நம்பாதீங்கன்னு தான்.

''இங்க இருக்கற பெத்தவங்களுக்கு நான், அதிகம் சொல்ல வேண்டியதில்ல. நீங்க எல்லாரும் நிச்சயமா என்னை விட நல்லா படிச்சவங்க. எட்டாங்க்ளாஸ் கூட முழுசா படிக்காத நான், என் தங்கச்சிகள எப்புடி வளத்துனேன்கறத, உங்க புள்ளைக, பசங்ககிட்ட கேட்டுப் பாருங்க, விளக்கமா சொல்லுவாங்க.

''அப்புடி இருக்கும்போது, உங்கள மாதிரி மெத்தப் படிச்சவங்க எந்த அளவுக்கு அவங்க மேல அக்கறை எடுத்து, எவ்வளவு ஒழுக்கமா வளத்தியிருக்கலாம். இல்லாட்டி, இனிமேலாவது அப்புடி வளர்க்கலாம்ங்கறத யோசிங்க,'' என, அண்ணன் பேசிவிட்டு, மடித்து வைத்திருந்த பொன்னாடையோடு மேடையிலிருந்து இறங்கி வர, மீண்டும் கரகோஷம் அரங்கை நிறைத்தது.

விழா நிகழ்ச்சியின் மதிய இடைவேளையில், அண்ணனை சூழ்ந்து அவனோடு, 'செல்பி' எடுக்க முண்டியடித்தனர், மாணவியர்.

சுட்டு விரலால் விலக்கல் சைகை காட்டி, ''மொதல்ல இப்படி, 'செல்பி' எடுக்கறத விடுங்க... கூடப் பொறந்த அண்ணனே ஆனாலும், நாலு அடி தள்ளி நில்லுங்க,'' என்றான், என் முரட்டு அண்ணன்.

ஷாராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us